சாத்தூர் ராமச்சந்திரன்

இந்திய அரசியல்வாதி

சாத்தூர் ராமச்சந்திரன் (கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்) தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பங்கு வகிக்கின்றார். ஐந்து முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இவர் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர்.

சாத்தூர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்
தொகுதிஅருப்புக்கோட்டை
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 8, 1949 (1949-08-08) (அகவை 74) [1]
கோபாலபுரம், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்ஆதிலட்சுமி
பிள்ளைகள்நாராயணன்
ரமேஷ்
உமா மகேஸ்வரி
வாழிடம்சென்னை

ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் ஆகத்து 8, 1949ஆம் ஆண்டு பிறந்தார். சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆறுமுறையும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒருமுறையும், மொத்தம் ஏழு முறை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், எம்.ஜி.ஆர் மு.கருணாநிதி அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பணியாற்றி வருகிறார்.[2] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை ) அமைச்சசராக பதவியேற்றார்.[3]

சொத்து குவிப்பு வழக்கு

தொகு

கடந்த 2006- 2011 திமுக ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய தமிழக வருவாய்த்துறை அமைச்சராக உள்ள சாத்தூர் இராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில் உரிய வருவாய் ஆதாரங்களை தாக்கல் செய்ததால், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உட்பட 3 பேரை வழக்கில் இருந்து விடுவித்து 20 சூலை 2023 அன்று சிறீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது..

பின்னணி

தொகு

கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் சாத்தூர் இராமச்சந்திரன் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 44 இலட்சம் சொத்து சேர்த்ததாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, மற்றும் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது கடந்த 2012ம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி கடந்த 2016ம் ஆண்டு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். அதில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சில வருவாய் ஆதாரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறி, 28 வருவாய் விவரங்களை தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு சென்னையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் (எம் எல் ஏ & எம். பிக்கள்) மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பின் மீண்டும் சிறீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இலஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த 28 வருவாய் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அதில் 10 வருவாய் இனங்களை ஏற்றுக் கொண்டனர்.

இந்த வழக்கு 20 சூலை 2023 அன்று சிறீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிபதி திலகம் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி திலகம் உத்தரவிட்டார்.[4] [5]

சொத்துக் குவிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை

தொகு

கடந்த 2006-2011 ஆண்டுகளில் திமுக அரசில் அமைச்சர்களாக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012ம் ஆண்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறைதுறையினர் 2012ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்குகள் திருவில்லிபுத்தூர் மக்கள் பிரதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. டிசம்பர், 2022ல் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை, இவ்வழக்கில் இலஞ்ச ஒழிப்புத் துறை போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்காததால் டிசம்பர், 2022ல் திருவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரனை விடுவித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து இலஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் இவ்வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விளக்கம் அளிக்க அவர் உத்தரவிட்டார். அப்போது தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இவ்வாறு தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும் என்றும், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன், அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளித்தபோது முதலில் எதிர்ப்பு தெரிவித்த லஞ்ச ஒழிப்பு காவல் விசாரணை அதிகாரி பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். மேலும் சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும்விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து இவ்வழக்கு விசாரணையை மேற்கொள்கிறோம் என்றார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இரு வழக்குகளின் விசாரணையின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தவறானவை' எனக்கூறி, இந்த இரண்டு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதாலேயே தாமாக முன் வந்து விசாரணை நடத்தப்பட்டது. அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் ஒரே மாதிரியாக உள்ளது. இதனை பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் கடமையில் இருந்து தவறியது போல் ஆகிவிடும். எனவே இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரும், 2 அமைச்சர்களும் உரிய பதில் அளிக்க உத்தரவிடுகிறேன் என்றார்.[6][7][8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ்நாடு சட்டமன்றம். 'தமிழ்நாடு சட்டமன்றத்தில் யார் எவர்? 1977'. சட்டமன்றக் குழு, 1977, p. 164.
  2. https://tamil.oneindia.com/news/tamilnadu/kssrr-ramachandran-dares-azhagiri-196396.html
  3. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
  4. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விடுவிப்பு: 12 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு
  5. சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் விடுதலை
  6. சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
  7. 2 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு ஐகோர்ட் நீதிபதி கடும் அதிருப்தி
  8. "தீர்ப்பை படித்து 3 நாட்களாக தூங்கவில்லை": அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி வேதனை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தூர்_ராமச்சந்திரன்&oldid=3943567" இலிருந்து மீள்விக்கப்பட்டது