சிண்டலர்ஸ் லிஸ்ட்
சிண்டலர்ஸ் லிஸ்ட் என்பது இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கி 1993ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் திரைக்கதையை ஸ்டீவன் சல்லியன் எழுதியிருந்தார். தோமஸ் கனலி எனும் ஆஸ்திரேலிய எழுத்தாளர் எழுதிய சிண்ட்லர்ஸ் ஆர்க் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் பெரும் இன அழிப்பிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்களை ஜெர்மானியர் ஒருவர் காப்பாற்றுவதாக இத்திரைப்படத்தின் கதைக்கரு அமைந்துள்ளது. நடிகர்கள் லையாம் நீசன், பென் கிங்ஸ்லி, ரால்ப் பின் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தனர்.
ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் Schindler's List | |
---|---|
இயக்கம் | ஸ்டீவன் ஸ்பில்பேர்க் |
தயாரிப்பு | ஸ்டீவன் ஸ்பில்பேர்க் ஜெரால்ட் மொலன் காத்திலீன் கென்னடி பிராங்கோ லஸ்டிக் |
கதை | புதினம்: தாமஸ் கென்னியல்லி திரைக்கதை: ஸ்டீவன் சேயில்லியன் |
இசை | ஜான் வில்லியம்ஸ் |
நடிப்பு | லையம் நீசோன் பென் கிங்க்ஸ்லி ரால்ப் பியேன்னஸ் கரோலின் கூடாளி எம்பெத் டேவிட்ஸ் |
ஒளிப்பதிவு | ஜானூஸ் கமின்ஸ்கி |
படத்தொகுப்பு | மைக்கேல் கான் |
கலையகம் | ஆம்பிளின் என்டர்டெயின்மென்ட் |
விநியோகம் | யூனிவர்சல் பிக்சர்கள் |
வெளியீடு | 30 நவம்பர் 1993 (premiere: வாஷிங்டன், D.C.) 1 December 1993 (NYC) 9 டிசம்பர் 1993 (LA) 15 டிசம்பர் 1993 (US general) 25 டிசம்பர் 1993 (கனடா) 10 பெப்ரவரி 1994 (ஆஸ்திரேலியா) 18 பெப்ரவரி 1994 (ஐக்கிய இராச்சியம்) 3 மார்ச் 1994 (செருமனி) 4 மார்ச் 1994 (போலந்து) |
ஓட்டம் | 195 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் எபிரேயம் செருமானியம் போலந்திய மொழி பிரான்சிய மொழி |
ஆக்கச்செலவு | $22 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $321 மில்லியன் |
கதை
தொகுசெக்கோசிலோவாக்கியா நாட்டைச் சேர்ந்த, ஜெர்மன் நாஜி கட்சி உறுப்பினர் ஆஸ்கர் ஷிண்ட்லர், தனது தொழில்சார்ந்த வர்த்தகத்திற்கான நம்பிக்கையுடன் கிராக்கோவ் நகரத்திற்கு வருகிறார். அவர் வேர்மாக்ட் (ஜெர்மன் ஆயுதப்படைகள்) மற்றும் எஸ்எஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, பற்சிப்பிகளை உற்பத்தி செய்வதற்கான ஒரு தொழிற்சாலையை வாங்குகிறார். மேலும், கள்ளச்சந்தை வணிகர்கள் மற்றும் யூத வணிக சமூகத்தினரிடம் தொடர்பு கொண்டிருக்கும் யூத அதிகாரி ‘இட்சாக் ஸ்டெர்ன்’ என்பவரை வேலைக்கு அமர்த்துகிறார். அவர் ஷிண்ட்லரின் நிர்வாகத்தைக் கையாளுவதோடு மட்டுமல்லாமல் அவருக்கு நிதி ஏற்பாடு செய்யவும் உதவுகிறார்.
அமோன் கோத் (இரண்டாவது லெப்டினன்ட்) பிளாஸ்ஸோவில் உள்ள வதை முகாமின் கட்டுமானத்தை மேற்பார்வையிட கிராக்கோவுக்கு வருகிறார். முகாம் தயாரானதும், அவர் கெட்டோவை (நகரத்தில் யூதர்கள் வாழம் பகுதி) கலைக்க உத்தரவிடுகிறார். இரண்டாயிரம் யூதர்கள் பிளாஸ்ஸோவுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். மேலும், இரண்டாயிரம் பேர் தெருக்களில் எஸ்.எஸ் வீரர்களால் கொல்லப்படுகிறார்கள். இந்த படுகொலையை நேரில் பார்க்கும் ஷிண்ட்லர் மனதளவில் ஆழமாக பாதிக்கப்படுகிறார். குறிப்பாக நாஜிக்களிடம் சிக்காமல் ஒளிந்து கொண்ட சிவப்பு நிற கோட் அணிந்த ஒரு இளம் பெண்ணின் இறந்துபோன உடலை, சடலங்களை கொண்டுசெல்லும் வண்டியில் பார்க்கிறார். அதன் பின்னர், ஷிண்ட்லர் கோத் அவர்களுடனான நட்பை கையாள்வதில் கவனமாக இருக்கிறார். மேலும் லஞ்சம் மூலம் எஸ்எஸ் ஆதரவைத் தொடர்ந்து பெற்று வருகிறார். காலப்போக்கில், ஷிண்ட்லரின் கவனம் பணம் சம்பாதிப்பதில் இருந்து தன்னால் முடிந்தவரை பல உயிர்களைக் காப்பாற்றும் முயற்சியாக மாறுகிறது. தனது தொழிலாளர்களை பாதுகாக்க ஷிண்ட்லர் தனது தொழிற்சாலைக்கு உள்ளேயே ஒரு துணை முகாமைக் கட்ட அனுமதிப்பதற்காக கோத்துக்கு லஞ்சம் கொடுக்கிறார்.
ஜெர்மானியர்கள் போரில் தோல்வியடையத் துவங்கும் போது, கோத் பிளாஸ்ஸோவில் மீதமிருக்கும் யூதர்களை அவுஷ்விட்ஸ் வதை முகாமுக்கு அனுப்ப உத்தரவிடப்படுகிறார். ஷிண்ட்லர் தனது தொழிலாளர்களை தனது சொந்த ஊரான ஸ்விட்டாவுக்கு அருகிலுள்ள புரூன்லிட்ஸில் கட்ட திட்டமிட்டுள்ள வெடிமருந்து தொழிற்சாலைக்கு மாற்ற கோத்திடம் அனுமதி கேட்கிறார். கோத் தயக்கத்துடன் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதற்கு ஒரு பெரிய லஞ்சத்தொகையை பெற்றுக்கொள்கிறார். ஷிண்ட்லர் மற்றும் ஸ்டெர்ன் ஆகியோர் ஆஷ்விட்ஸுக்கு பதிலாக புரூன்லிட்ஸுக்கு மாற்றப்பட வேண்டிய 1,100 பெயர்கள் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரிக்கிறார்கள்.
யூதத் தொழிலாளர்கள் புரூன்லிட்ஸுக்கு இரயில் மூலம் கொண்டு செல்லப்படுவதால், பெண்களும் சிறுமிகளும் தவறுதலாக ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவுக்கு திருப்பி விடப்படுகிறார்கள். அவர்களை விடுவிப்பதற்காக ஆஷ்விட்ஸின் படைப்பிரிவு முதல்வர் ருடால்ஃப் ஹோஸுக்கு ஷிண்ட்லர் லஞ்சம் கொடுக்கிறார். புதிய தொழிற்சாலையில், எஸ்எஸ் காவலர்கள் அனுமதியின்றி உற்பத்திப் பகுதிக்குள் நுழைவதை ஷிண்ட்லர் தடைசெய்கிறார். அடுத்த ஏழு மாதங்களில், அவர் நாஜி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்கும், பிற நிறுவனங்களிடமிருந்து ஷெல் உறைகளை வாங்குவதற்கும் தனது மொத்த செல்வத்தையும் செலவிடுகிறார். ஷிண்ட்லரின் திட்டப்படியே, தொழிற்சாலையில் ஆயுதங்கள் எதையும் உற்பத்தி செய்யவில்லை. 1945 ஆம் ஆண்டு போரில் ஜெர்மனி சரணடையும் அதே வேளையில், அவரிடமிருக்கும் செல்வமும் தீர்ந்துபோகிறது.
ஷிண்ட்லர் ஒரு நாஜி கட்சியின் உறுப்பினர் என்பதாலும், போரின் மூலம் லாபம் ஈட்டுபவர் என்ற முறையிலும் ஷிண்ட்லர் பிடிபடுவதைத் தவிர்க்க, தன்னை நோக்கி வரும் செஞ்சேனையிலிருந்து தப்பிச் செல்ல முற்படுகிறார். தொழிற்சாலையில் இருக்கும் எஸ்எஸ் காவலர்கள் யூத தொழிலாளர்களைக் கொல்லுமாறு கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆனால் ஷிண்ட்லர் வேண்டாம் என்று அவர்களை வற்புறுத்துகிறார். தனது தொழிலாளர்களிடம் விடைபெற்று, அமெரிக்கர்களிடம் சரணடையும் நம்பிக்கையில் மேற்கு நோக்கிச் செல்லத் தயாராகிறார். யூத உயிர்களைக் காப்பாற்றியதில் அவரது பங்கை உறுதிப்படுத்தும் ஒரு கையொப்பமிட்ட அறிக்கையை தொழிலாளர்கள் அவருக்குக் கொடுக்கிறார்கள். மேலும் தல்மூத்தின் மேற்கோளான “ஒரு உயிரைக் காப்பாற்றுபவர், உலகம் முழுவதையும் காப்பாற்றுகிறார்” என்ற வாக்கியம் பொறிக்கப்பட்ட மோதிரத்தை அவருக்கு வழங்குகிறார்கள். மறுநாள் காலையில் யூதர்கள் எழுந்தபோது, ஒரு சோவியத் சிப்பாய் தாங்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கிறார். அதன் பின்னர் யூதர்கள் அருகிலுள்ள நகரத்திற்கு நடந்து செல்கின்றனர்.
மனிதகுலத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்காக கோத் தண்டிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். தற்காலத்தில், ஷிண்ட்லரால் காப்பாற்றப்பட்ட எஞ்சியிருக்கும் யூதர்கள் மற்றும் அவர்களை சித்தரிக்கும் நடிகர்கள் ஷிண்ட்லரின் கல்லறைக்குச் சென்று இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் பாரம்பரிய யூத அடையாளமாக, அவரின் கல்லரை மீது கற்களை வைக்கிறார்கள். அதன் மேல் படத்தின் நாயகன் லியம் நீசன் இரண்டு ரோஜாக்களை வைக்கிறார்.