சிண்டு மான்
சிண்டு மான் ( tufted deer, Elaphodus cephalophus) என்பது ஒரு சிறிய மானினம் ஆகும். இதன் நெற்றியில் இருக்கும் மயிர்க்கொத்தும் ஆண் மான்களில் வெளியில் தெரியும் பற்களும் இம்மானினத்தின் தனித்துவமான அடையாளங்களாகும்.[2] இவ்வினம் கேளையாடு என்னும் மானினத்திற்கு நெருங்கியது. இவை சீனாவின் நடுப்பகுதியிலும் மியான்மரின் வடகிழக்குப் பகுதியிலும் காணப்படுகின்றன. வேட்டையினாலும் வாழிட அழிப்பினாலும் குறைந்து வரும் இம்மான் அச்சுறுநிலையை நெருங்கியுள்ளது. இப்பேரினத்தில் உள்ள ஒரே மான் இதுவே. கடல்மட்டத்தில் இருந்து 4500 மீட்டருக்கு மேலான உயரத்தில் உள்ள மலைக்காடுகளில் மட்டுமே இவை காணப்பபடுகின்றன. இதனால் இவற்றைப் பற்றிய ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. தோற்றக்குறிப்புதொகுபார்ப்பதற்கு கேளையாடு போன்றிருந்தாலும் இவற்றின் கழுத்தும் கால்களும் நீளமானவை. இவற்றின் முடி குட்டையாக இருக்கும். குளிர்காலத்தில் கருப்பாகவும் கோடைகாலத்தில் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் உதடுகளும் காது நுனியும் வாலின் அடிப்பகுதியும் வெள்ளையாக உள்ளன. குதிரைலாட வடிவிலான மயிர்க்கொத்து இவற்றின் நெற்றியில் மேற்கழுத்திலும் காணப்படுகின்றது. பழுப்பாகவோ கருப்பாகவோ இருக்கும் இம்முடி 17 சென்டிமீட்டர்கள் (6.7 in) நீளம் வரை இருக்கும். இம்மானினத்தில் சட்டென்று தெரிவது ஆண் மான்களில் இருக்கும் புலிப்பல்லே. இது 2.6 cm (1.0 in) நீளம் வரை இருக்கும். அரிதாக இதை விடவும் நீளமாக இருக்கலாம்.[3] இம்மானின் உயரம் தோள்வரை 50–70 சென்டிமீட்டர்கள் (20–28 in) யும் 17 முதல் 30 கிலோகிராம்கள் (37 முதல் 66 lb) வரை எடையும் இருக்கும்.[4] குட்டையான இதன் வால் 10 cm (3.9 in) வரை இருக்கும். கலைமான்களில் மட்டுமே இருக்கும் கொம்பு முகவும் குட்டையாக இருக்கும். எனவே நெற்றியில் உள்ள மயிர்க்கொத்தில் கிட்டத்தட்ட மறைந்துவிடும்.[5] இயல்பும் இனப்பெருக்கமும்தொகுஇம்மான்கள் பெரும்பாலும் தனியாகவோ அல்லது ஓரிணையாகவோ காணப்படும். மேலும் இவை இரவும் பகலும் மாறும் சந்தி நேரங்களில் சுறுசுறுப்பாக இரைதேடும். மேலும் இவை தம் எல்லையில் உள்ள குறித்த தடங்களில் மட்டுமே உலவும். இம்மான் எளிதில் புலப்படாவண்ணம் இருக்கவே விரும்பும். இதனைச் சீண்டினால் பயந்து குரைப்பது போன்ற ஒலியெழுப்பிக் கொண்டு பூனையைப் போல் குதித்தோடி விடும்.[6] செப்டம்பருக்கும் திசம்பருக்கும் இடைப்பட்ட காலம் இவற்றின் இனப்பெருக்க காலம் ஆகும். அக்காலத்தில் கலைமான்கள் குரைப்பது போன்ற ஒலியை சத்தமாக எழுப்பும். சினைக்காலம் ஆறு மாதங்கள். ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனும். மறிமான்கள் (குட்டிகள்) ஒன்றிரண்டு ஆண்டுகளில் பருவம் அடைகின்றன. காட்டில் இவை 10 முதல் 12 ஆண்டுகள் வரை வாழும்.[5][6] மேற்கோள்கள்தொகு
|