கதைகூறல் என்பது, நிகழ்வுகளைச் சொற்கள், படங்கள், ஒலிகள் என்பவற்றின் மூலம் இன்னொருவருக்குச் வெளிப்படுத்துவது ஆகும். பெரும்பாலும் கதைகளைக் குறித்த நேரத் தேவைக்குப் பொருத்தமான உத்திகளுடனும், அலங்காரங்களுடனும் கூறுவது வழக்கம். பொழுதுபோக்குக்காகவும், கல்வி, பண்பாட்டுக் காப்பு, ஒழுக்க நெறிகளை உணர்த்துதல் போன்ற தேவைகளுக்காகவும் கதைகளைப் பரிமாறிக் கொள்வது எல்லாப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றது. கதைகள், கதைகூறல் ஆகியவற்றில் கதைக்கரு, கதைமாந்தர், விடய நோக்குநிலை என்பன முக்கிய கூறுகளாக அமைகின்றன.

1870ல் சர் யோன் எவரெட் மிலாயிசு வரைந்த ராலேயின் இளம்பருவம் எண்ணெய் வண்ண ஓவியம். இளம் வால்ட்டர் ராலேக்கும் அவரது சகோதரருக்கும், கடலில் நிகழ்ந்தவை பற்றி ஒரு கடலோடி கதைகூறும் காட்சி

வரலாற்று நோக்கு தொகு

மிகப் பழைய கதைகூறல் முகபாவம், உடலசைவுகள், உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றுடன் கூடிய வாய்மொழி வடிவமாக இருந்திருக்கக்கூடும். சமயச் சடங்குகளுக்குப் பயன்பட்டதுடன், குகை ஓவியங்கள், பல பழங்காலப் பண்பாடுகளில் ஒரு கதைகூறல் வடிவமாகவும் இருந்திருக்கலாம். கதை கூறுபவர் கதையை ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு உதவியாக ஆசுத்திரேலியப் பழங்குடியினர் குகைச் சுவர்களில் கதைகளிலிருந்து குறியீடுகளை வரைந்துள்ளனர். இவற்றை வைத்து, மனித இருப்புக்கான விளக்கமும் பொருளும் புலப்படும் வகையில் ஞாபகத்தில் இருந்தும், புதிதாக இயற்றியும், வாய்மொழி விபரம், இசை, குகை ஓவியம், ஆடல் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கதைகள் கூறப்பட்டன.[1]

எழுத்தின் அறிமுகத்துடனும், நிலையானவையும், இடத்துக்கு இடம் எடுத்துச் செல்லக்கூடியனவுமான ஊடகங்களின் துணையுடனும், கதைகளைப் பதிவு செய்து உலகின் பல்வேறு பகுதிகளுடனும் பகிர்ந்து கொள்ளலாயினர். கதைகளை மரம், மூங்கில், தந்தம், எலும்புகள், மட்பாண்டம், களிமண் தகடுகள், கல், ஓலை, தோல், துணி, காகிதம், பட்டு போன்ற ஊடகங்களில் எழுதியும், செதுக்கியும், ஓவியங்களாக வரைந்தும் வைத்ததுடன், ஒளிப்படத் தகடுகளிலும், எண்ணிம ஊடகங்களிலும் பதிவு செய்தும் வருகின்றனர். எழுத்துமூல ஊடகங்களும் ஒளிபரப்பு ஊடகங்களும் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள போதும், வாய்மொழியாகக் கதைகள் கூறும் வழக்கம் இன்னமும் இருந்து வருவதுடன், ஞாபகத்திலிருந்தே கதைகள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப்பட்டு வருகின்றன.

தற்காலக் கதைகூறல் தொகு

தற்காலக் கதைகூறல் பரந்த நோக்கெல்லை கொண்டது. தேவதைக் கதைகள், நாட்டார் கதைகள், தொன்மங்கள், மரபுக் கதைகள் போன்ற மரபுவழிக் கதைகூறல் வடிவங்களோடு, தற்கலத்தில் கதைகூறல், வரலாறு, தனிமனித விபரங்கள், அரசியல், புதிய பண்பாட்டு நெறிமுறைகள் போன்றனவும் கதைகூறலில் இடம்பெறுகின்றன. தற்காலக் கதைகூறல் கல்வி நோக்கங்களை அடைவதற்காகவும் பெருமளவில் பயன்பட்டு வருகின்றது.

குறிப்புகள் தொகு

  1. Cajete, Gregory, Donna Eder, and Regina Holyan. Life Lessons through Storytelling: Children's Exploration of Ethics. Bloomington: Indiana UP, 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதைகூறல்&oldid=2977936" இலிருந்து மீள்விக்கப்பட்டது