தங் அயாங் நிரர்த்தா

டாங்யாங் நிரார்த்தாஅல்லது டாங்யாங் துவியேந்திரா, பொ.பி 16ஆம் நூற்றாண்டளவில் பாலியில் சைவ பக்தி இயக்கத்தை முன்னெடுத்த அருளாளரும் கவிஞரும் ஆவார்.[2] , பேடாந்த சக்தி வவு ரவு (Pedanda Shakti Wawu Rauh) , துவான் சுமேரு (Twan Sumeru) போன்ற பெயர்களாலும் இவர் குறிப்பிடப்படுவதுண்டு

பரம்பொருள் அசிந்தியனுக்காக முதன்முதலாக, பத்மாசனம் எனும் அரியணையை அறிமுகம் செய்தவர் டாங்யாங் நிரார்த்தா.[1]

வாழ்க்கை தொகு

"துவியேந்திராதத்வ", 'பபத் பிராம்மண' எனும் பாலி நாட்டு நூல்கள், இவரது வரலாற்றை விவரிக்கின்றன.[3]

யாவாவின் "பிலம்பங்கன்" இராச்சியத்தில் வாழ்ந்து வந்தார் துவியேந்திரா. அவரது புரவலர்களில் ஒருவரின் மனைவி, அவர்மீது காதல்வயப்பட்டதை அடுத்து, அவர் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர், "கெல்கெல்" பகுதியிலிருந்து ஆண்ட மன்னன் "தலெம் பதுரெங்கோன்" (Dalem Baturenggong) இன் புரோகிதராகப் பணியாற்றுவதற்காக, பொ.பி 1537இல், பாலியை வந்தடைந்தார். அவர் பூசணிக்காயின் மீதமர்ந்தே கடல் கடந்து வந்ததாக நம்பப்படுவதால், பாலிப் பிராமணர்கள், பூசணிக்காயை உண்பதில்லை.[4]

அப்போது பாலியில் கொள்ளைநோயின் பாதிப்பால், பெரும் உயிரழிவு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. தன் தலைமுடி ஒன்றுடன் தலெம் பதுரெங்கோனின் அரசவைக்குச் சென்ற துவியேந்திரா, கொள்ளைநோயை அழிக்க அதுவே போதுமானது என்றார்.[4] அத்தலைமுடி பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள ஆலயம், இன்று பாலியின் முக்கியமான வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

சமயப்பணி தொகு

பாலித்தீவின் இந்து சமயத்தை மறுசீரமைக்க முன்னின்று உழைத்தவராக, துவியேந்திரா இனங்காணப்படுகின்றார். பாலிக்கே விசேடமான "பண்டிட்" எனப்படும் சைவப் பூசாரிகளுக்கான முன்னோடி இவரே என நம்பப்படுகின்றது.[2] மோட்சம் தொடர்பான பல எண்ணக்கருக்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற நிரார்த்தா, "கவி" எனப்படும் பாடல்களையும், கேக்கவின், கிடுங் முதலான பல நூல்களை யாத்ததாகத் தெரிய வருகின்றது.[5]

"பத்மாசனம்" என அழைக்கப்படும் கட்டமைப்பை பாலி இந்து ஆலயங்களில் அறிமுகம் செய்தவர் இவரே. ஊரூராகப் பயணித்த அவர்,வெற்று அரியணை ஒன்றை தூணொன்றின் உச்சியில் அமைத்து, அதைப் பரம்பொருளின் அம்சமாக வழிபடும் வழக்கத்தைக் கொணர்ந்தார்.இன்றும் பாலித்தீவின் கரையோரத்திலுள்ள ஆலயங்கள் பத்மாசனங்கள் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன.[6]

இந்தோனேசியாவில் மிக வேகமாகப் பரவிக்கொண்டிருந்த இசுலாமுக்கெதிராகப் போராடிய இவர், இந்து சமயத்திலும் கடவுள் ஒருவரே என்ற தத்துவத்தை வலியுறுத்தினார். இவர் முன்வைத்த மூலப் பரம்பொருள் சிவன், என்ற கொள்கையே, பின் "அசிந்தியன்" வழிபாடாக, வளர்ச்சி கண்டது. [7]

மேலும் பார்க்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Bali and Lombok, p.46-47, 2001, Dorling Kindersley Limited, London பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7566-2878-9
  2. 2.0 2.1 Pringle, p 65
  3. Raechelle Rubinstein (2000) "Beyond the Realm of the Senses: The Balinese Ritual of Kakawin Composition" p.72
  4. 4.0 4.1 Of Temples and Dragons பரணிடப்பட்டது 2007-10-08 at the வந்தவழி இயந்திரம் Bali Plus
  5. Raechelle Rubinstein (2000) ibid p.80
  6. (இந்தோனேசியம்) Sekelumit Sejarah dan Cara Sembahyang பரணிடப்பட்டது 2007-09-11 at the வந்தவழி இயந்திரம் Bali Post 8 July 2007
  7. Kotamadya Denpasar Bali Paradise

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்_அயாங்_நிரர்த்தா&oldid=3679550" இலிருந்து மீள்விக்கப்பட்டது