சிவகங்கை அரண்மனை

சிவகங்கை அரண்மனை (Sivaganga Palace) தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு அரண்மைனயாகும். இந்த அரண்மனை மதுரையிலிருந்து 40 கிலோமீட்டர் (25) மைல் தொலைவில் உள்ளது. இந்த அரண்மனை பழமையான, உயர்ந்த, மதிப்புமிக்க பல வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒன்றாகும்.[1] இந்த அரண்மனை அரசிகள் வேலு நாச்சியார் (1780–90), வெள்ளச்சி நாச்சியார் (1790–93) மற்றும் இராணி காத்தம்ம நாச்சியார் (1864–77) ஆகியோரின் வசிப்பிடமாக இருந்துள்ளது. உண்மையாக இருந்த சிவகங்கை அரண்மனையின் மிச்சங்கள் ஏதும் இல்லாவிட்டாலும், "கெளரி விலாசம்", என்றழைக்கப்படுகின்ற படமாத்தூர் கெளரி வல்லப தேவரால் (1801-1829) 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு புதிய அரண்மைன தற்போதும் உள்ளது.[2] செட்டிநாட்டின் பாரம்பரிய தலமாக விளங்கும் இந்த அரண்மனை இராணி வேலு நாச்சியாரின் சொத்தாக உள்ளது[3]

தொடக்க கால வரலாறு தொகு

1730 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட உண்மையான அரண்மனையானது,[4] வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது பாண்டியர் சகோதரர்கள் ஆகியோருக்கு இடையில் பிரித்தானிய அரசை எதிர்ப்பது தொடர்பான ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற இடமாக இருந்துள்ளது. 1762 மற்றும் 1789 ஆம் ஆண்டுகளுக்கிடையே பலமுறை தாக்குதலுக்கு ஆளான இடமாகவும் இருந்துள்ளது. உண்மையான அரண்மனையின் எஞ்சியிருந்த ஒரே பகுதியான உயர்ந்த சுவர் மட்டுமே அழிக்கப்பட்ட நாளிலிருந்து இருக்கிறது.

கௌரி விலாசம் தொகு

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் படமாத்தூர் கௌரி வல்லப தேவர் (1801-1829) என்பவரால் ஒரு புதிய அரண்மனை கட்டப்பட்டு கௌரி விலாசம் என்று பெயரிடப்பட்டது. தேவரின் இறப்புக்குப் பிறகு அவரது சகோதரர் ஒய்யா தனது மகன்களுடன் அரண்மனையை ஆக்கிரமித்துக் கொண்டார்.  அரசர் உயில் எழுதாமல் இறந்து விட்ட காரணத்தால் பிரித்தானிய அரசு ஆட்சியைக் கைப்பற்றி விடக்கூடும் என்ற தந்திரத்தால் அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அரசைக் கைப்பற்றுவதற்காக போலியான ஆவணங்களை உருவாக்கி இறந்த அரசரின் கையொப்பத்தை மோசடியாக இட்டு தாங்களாகவே அரண்மனையின் கருப்பு சலவைக்கல்லில் அமர்ந்து முடிசூட்டிக் கொண்டனர்.

கட்டிடக்கலை தொகு

இப்போது பாழடைந்த நிலையில் காணப்படும் கெளரி விலாசம் திருமலை நாயக்கர் கால கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனையின் சில அம்சங்கள் இராஜபுதன கட்டிடக்கலையின் பாணியையும் காண முடிகிறது. இந்த அரண்மனையின் தென்புற முகப்பில் நுழைவு வாயிலில் ஒரு கடிகாரம் இருந்துள்ளது. தற்போது அது இயங்கக்கூடிய நிலையில் இல்லை. அரண்மனைக்குள்ளேயே ராஜ ராஜேசுவரி அம்மன் ஆலயம் ஒன்றும் அமைந்துள்ளது.[5]இந்த கோயில் செயல்படு நிலையில் உள்ளது. புகழ்பெற்ற கவிஞரான பாபநாசம் சிவன், ராச ராசேசுவரி அம்மனைப் புகழ்ந்து வணங்குகின்ற பல பிரபலமான பாடல்களை இசையமைத்ததாக கூறப்படுகிறது. அரசர் காண்டுமேக்கி உடைய தேவர் சிலையும் ஆலயத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது.

அரண்மனைக் களங்கள் தொகு

அரண்மனையின் திடல் பழைய அரசர்கள் குறிப்பிடத்தக்க புலவர்களை கெளரவித்த அரச சபையைக் கொண்டுள்ளது. [2] அரண்மனைக்குள்ளே கருப்பு சலவைக்கல்லால் ஆன சதுக்கம் ஒன்று உள்ளது. இதுவே சலவைக்கல் இருக்கையாக நீதி வழங்கக்கூடிய அவையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது; அரச மரபில் வந்த புதிய அரசர்களுக்கு முடிசூட்டு விழா நடத்தும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.[2] இந்த அரண்மனையின் மற்றுமொரு முக்கியமான சிறப்பம்சமாக கல் கட்டுமானத்தைக் கொண்ட "தெப்பக்குளம்" அமைந்துள்ளது. இது அரண்மனையின் முன்னால் அமைந்த நீர்த்தேக்கமாக உள்ளது.[6]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகங்கை_அரண்மனை&oldid=3579683" இருந்து மீள்விக்கப்பட்டது