சுப்பிரமணியம் சிவநாயகம்
எஸ். சிவநாயகம் (சுப்பிரமணியம் சிவநாயகம், செப்டம்பர் 7, 1930 - நவம்பர் 29, 2010) இலங்கையின் மூத்த பத்திரிகையாளரும், ஊடகவியலாளரும், அரசியல் விமரிசகரும், எழுத்தாளரும் ஆவார். ஈழத்தமிழர்களின் அரசியல் நியாயத்தினை ஆங்கிலத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி வந்தவர்களில் ஒருவர்.
எஸ். சிவநாயகம் S. Sivanayagam | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 7, 1930 கொக்குவில், யாழ்ப்பாணம் |
இறப்பு | நவம்பர் 29, 2010 கொழும்பு, இலங்கை | (அகவை 80)
இருப்பிடம் | கொழும்பு |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | பத்திரிகை ஆசிரியர் |
அறியப்படுவது | 'சற்றர்டே ரிவ்யூ' ஆசிரியர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசிவநாயகம் யாழ்ப்பாணம் கொக்குவிலில் பிறந்தவர். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் தனது சட்டக் கல்லூரிப் படிப்பிற்காக கொழும்பு சென்ற இவர் , இரண்டாம் ஆண்டு சட்டப் படிப்பின் போது பத்திரிகைத் துறை ஆர்வம் காரணமாக 1953 முதல் 1955 வரை கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி நியூஸ் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற நிகழ்வின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் டெய்லி மிரர் பத்திரிகையில் 1961 முதல் 1969 வரை பணியாற்றினார். டெய்லி மிரர் பத்திரிகையில் ஃபோரம் (Forum) என்ற பெயரில் எழுதிய பத்தி எழுத்துக்கள் பிரபலமானவை[1]. 1970களில் இலங்கைச் சுற்றுலாச் சபையின் பிரசுரங்களின் ஆசிரியராக இருந்தார். "Leisure" என்ற பெயரில் ஒரு ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். வால்ட்டர் தொம்சன் என்ற அமெரிக்க நிறுவனத்திலும் பணியாற்றினார். சன்சோனி ஆணைக்குழுவின் விசாரணைப் பதிவுகளை வெளிக்கொணரும் "Sansoni Commission Evidence" என்ற ஆங்கில இதழிலும் பணியாற்றியுள்ளார்[2].
சற்றர்டே ரிவியூ
தொகு1980களில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்க சிவநாயகம் யாழ்ப்பாணம் வந்து அங்கு 'சற்றர்டே ரிவ்யூ' (Saturday Review) என்ற பெயரில் ஆங்கில வார இதழை ஆரம்பித்தார். இவரது பத்திரிகை நிலையம் இலங்கை இராணுவத்தினால் எரியூட்டப்பட்டு, இலங்கை அரசால் தடை செய்யப்பட்டது. இதனை அடுத்து இவர் கடல் மார்க்கமாக தமிழ்நாடு சென்று அங்கு தமிழ் தகவல் மையத்தில் பணியாற்றினார்.
தமிழகத்தில் சிறைவாசம்
தொகுதமிழ் நேசன் என்ற பத்திரிகையை தமிழகத்தில் வெளியிட்டார். இதில் அவர் ஈழத்தமிழர்களின் போராட்டங்களை விரிவாக எழுதினார். இதனால் இந்திய அரசு இவரை தடாச் சட்டத்தில் சிறையில் அடைத்தது. சிறையில் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நிபந்தனையின் பேரில் 1993 ஆம் ஆண்டில் இவருக்கு சிறையில் இருந்து விடுதலை கிடைத்து பிரான்சு நாட்டில் அடைக்கலம் பெற்றார்.
பிரான்சில் இருந்து அவர் லண்டன் சென்று புலம் பெயர்ந்த நிலையில், 'Hot Spring' என்ற ஆங்கில மாத இதழை அங்கு ஆரம்பித்து நடத்தினார்.
இறுதிக்காலம்
தொகுபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கை திரும்பிய சிவநாயகம், தனது 80 வது அகவையில் 2010 நவம்பர் 29 ஆம் நாள் கொழும்பில் காலமானார்[3].
வெளியிட்ட நூல்கள்
தொகு- Sri Lanka: Witness To History (2005)
- The Pen and The Gun: Selected Writings, 1977-2001, Tamil Information Centre, London, 2001, 292 பக்கங்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ Kokuvil Hindu College Diamond Jubilee பரணிடப்பட்டது 2011-01-08 at the வந்தவழி இயந்திரம், கே. எஸ். சிவகுமாரன்
- ↑ Journalist S. Sivanayagam passes away பரணிடப்பட்டது 2010-12-01 at the வந்தவழி இயந்திரம், டி. பி. எஸ். ஜெயராஜ்
- ↑ Veteran journalist Sivanayagam passes away, தமிழ்நெட், நவம்பர் 30, 2010
வெளி இணைப்புகள்
தொகு- An Open Letter to The American Ambassador in Sri Lanka from S. Sivanayagam
- The Pen and The Gun: Selected Writings, 1977-2001, Book review
- Remembering Late S. Sivanayagam[தொடர்பிழந்த இணைப்பு], Dr. V. Suryanarayan
- Srilanka :Witness to History - நூல் விமர்சனம், பராசக்தி சுந்தரலிங்கம்