செங்கிஸ் கான் குதிரை வீரன் சிலை
செங்கிஸ் கான் குதிரை வீரன் சிலை என்பது 40 மீட்டர் உயரமுடைய துருவேறா எஃகுவால் செய்யப்பட்ட செங்கிஸ் கானின் சிலையாகும். இச்சிலை உலகிலேயே மிக உயரமான குதிரையேற்றச் சிலையாகும்.[2] இது தூல் ஆற்றின் கரையில் திசோஞ்சின் போல்தோக் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த இடம் மங்கோலியத் தலைநகரான உலான் பத்தூருக்கு 54 கிலோ மீட்டர் கிழக்கே அமைந்துள்ளது. ஒரு புராணக் கதையின் படி, இங்கு தான் செங்கிஸ் கான் ஒரு தங்கக் குதிரைச் சாட்டையைக் கண்டெடுத்தார். சிலையானது ஒரு அடையாளமாக இவர் பிறந்த இடத்தை நோக்கிக் கிழக்கே திரும்பியுள்ளது. செங்கிஸ் கான் சிலை வளாகத்தின் மேல் இச்சிலை அமைந்துள்ளது. இந்த வளாகத்திற்குப் பலர் வருகை புரிகின்றனர். இந்த வளாகமும் கூட 10 மீட்டர் உயரமுடையதாகும். இந்த வளாகத்தில் 36 தூண்கள் உள்ளன. செங்கிஸ் கான் முதல் லிக்டன் கான் வரையிலான 36 கான்களை இந்தத் தூண்கள் குறிக்கின்றன. இதைச் சிற்பி எர்தெம்பிலேக் மற்றும் கட்டட வடிவமைப்பாளர் எங்சர்கல் ஆகியோர் வடிவமைத்தனர். இச்சிலை 2008ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.[3]
ஆள்கூறுகள் | 47°48′29.00″N 107°31′47.10″E / 47.8080556°N 107.5297500°E |
---|---|
இடம் | உலான் பத்தூர், மங்கோலியா |
வடிவமைப்பாளர் | எர்தெம்பிலேக் (சிற்பி) எங்சர்கல் (கட்டட வடிவமைப்பாளர்) |
வகை | குதிரை வீரன் சிலை |
கட்டுமானப் பொருள் | துருவேறா எஃகு[1] |
உயரம் | 40 மீட்டர்கள் (130 அடி) |
முடிவுற்ற நாள் | 2008 |
அர்ப்பணிப்பு | செங்கிஸ் கான் |
இங்கு வருகை புரிபவர்கள் குதிரையின் தலைக்கு அதன் மார்பு மற்றும் கழுத்து வழியாக நடந்து செல்கின்றனர். அங்கு அவர்கள் காட்சிகளைக் கண்டு இரசிக்கலாம். இந்தச் சிலைப் பகுதியைச் சுற்றி 200 கெர்கள்[4] உள்ளன. 13ஆம் நூற்றாண்டின் மங்கோலியப் பழங்குடி இனங்களால் பயன்படுத்தப்பட்ட குதிரைக் குறியீடுகளின் அமைப்பை போல் இந்த கெர்கள் வடிவமைக்கப்பட்டு சீராக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தின் செலவானது ஐஅ$4.1 மில்லியன் (₹29.3 கோடி) என்று குறிப்பிடப்படுகிறது. த கென்கோ டூர் பிரு என்ற ஒரு மங்கோலிய நிறுவனத்தால் இச்சிலை அமைக்கப்பட்டது.[1]
இதனுடன் இணைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமானது மங்கோலியாவின் வெண்கலக் காலம் மற்றும் சியோங்னு தொல்லியல் கலாச்சாரங்களுடன் தொடர்புடைய பொருட்கட்சிகளைக் கொண்டுள்ளது. அன்றாடப் பாத்திரங்கள், இடுப்புப்பட்டைக் கொளுவி, கத்திகள், புனித விலங்குகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பொருட்காட்சியானது 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டின் மகா கான் காலத்தைக் காட்சிப்படுத்துகிறது. அதில் பண்டைய கருவிகள், பொற்கொல்லர் பொருட்கள் மற்றும் சில நெசுத்தோரியச் சிலுவைகளும், ஜெபமாலைகளும் உள்ளன. அருங்காட்சியகத்துக்குப் பக்கவாட்டில் ஒரு சுற்றுலாப் பயணிகளுக்கான மற்றும் பொழுது போக்குக்கான மையம் உள்ளது. இது 520 ஏக்கர்கள் பரப்பளவில் உள்ளது.
படங்கள்
தொகு-
சிலைக்குச் செல்லும் முதன்மைச் சாலை
-
சிலையின் பார்வைத் தளத்திலிருந்து கலைப் பூங்காவின் காட்சி
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 Levin, Dan (August 2, 2009). "Genghis Khan Rules Mongolia Again, in a P.R. Campaign". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2009/08/03/world/asia/03genghis.html. பார்த்த நாள்: 29 December 2016.
- ↑ Daisy Sindelar (13 February 2010). "From Chinggis Khan to Prayer Wheels, Mongolians Reclaim What's Theirs". Radio Free Europe. பார்க்கப்பட்ட நாள் 10 November 2021.
- ↑ "The Chinggis Khan Statue Complex". Mongolian National Tourism Organization. Archived from the original on 2012-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-11-20.
- ↑ Chinggis khan statue complex பரணிடப்பட்டது 2012-07-05 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு