சென்னைப் பல்கலைக்கழக நூல்நிலையம்
சென்னைப் பல்கலைக்கழக நூல்நிலையம், வில்லியம் கிரிபித் (William Griffith) என்னும் ஆங்கில அறிஞர் சென்னைப் பல்கலைக்கழகத்துக்குத் தரும்படி தமது உயிலில் எழுதி வைத்திருந்த 25 ஆயிரம் உரூபாயைக் கொண்டு, 1903-ல், நிறுவப் பெற்றது. இது தொடக்கத்தில், சென்னை எழும்பூரிலுள்ள அரசாங்கப் பொருட்காட்சிசாலையில் செயற்பட்டு வந்தது. 1928-ல், இது பல்கலைக் கழக செனட் கட்டடத்துக்கு மாற்றப்பட்டு, 1936 முதல் பல்கலைக்கழக அலுவலகத்தில் தனியாகவுள்ள நூல்நிலையப் பகுதியில் செயற்பட்டு வருகிறது.
அமைப்பு
தொகுஇந்நூல் நிலையத்தில் ஒரு பெரிய படிப்பறை, பத்திரிகையறை, நூலடுக்கறை, நூற்பட்டியறை, அலுவலகவறைகள் முதலியன உள்ளன. நூலடுக்குப் பகுதி 130 அடி நீளமும், 30 அடி அகலமுடையது. நான்கு மாடிகள் கொண்டது. இவற்றிலுள்ள அலமாரிகளை நீளத்தில் சேர்த்து வைத்தால் இரண்டு மைல் நீளமிருக்கும்.நூற்பட்டியறையில் ஒவ்வொரு தட்டிலும், 1500 சூசிச்சீட்டுகள்(Index cards) கொண்ட 336 தட்டுகளுடைய பெட்டிகள் உள்ளன.
சேகரிப்புகள்
தொகுஇந்நூல் நிலையத்திலுள்ள நூல்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய 1,82,000. இவை தவிர, தேசப்படங்கள் சு.2200-ம், பல்லைக்கழகம் ஏற்றுக்கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள்(Thesis) சு.820-ம் வேறு சில அறிஞர் அளித்த அரிய நூல்களும் உள்ளன. நூல்நிலையம் தருவிக்கும் பத்திரிகைகள் ஏறக்குறைய 2,700 ஆகும். இவற்றில் தலைசிறந்தவற்றின் முந்திய பல ஆண்டுகளில் வெளியான பத்திரிகைகளும் உள்ளன. கணிதமேதை இராமனுசன், அறிஞர் எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை ஆகியோரின் அரிய கையெழுத்துப்படிகளும் உள்ளன.
இந்நூல்நிலையம் ஆண்டுதோறும் ஏறக்குறைய 8000 புதிய நூல்கள் வாங்கிச் சேர்க்கின்றது. சென்னைப் பல்கலைக்கழகம் தன் வெளியீடுகளான நூல்களையும், பத்திரிக்கைகளையும் இந்தியாவிலும் பிற நாடுகளிலுமுள்ள பல பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கிறது. அவற்றிற்கு மாற்றாக அப்பல்கலைக்கழகங்கள் தங்கள் வெளியீடுகளான நூல்களையும் பத்திரிகைகளையும் இந்நூல் நிலையத்திற்கு அனுப்பிவருகின்றன.
துறை நூலகங்கள்
தொகு- குறிப்பிட்ட நூல்கள், துறைசார்பாகப் பிரிக்கப்பட்டு அவை, அவற்றிற்கே உரிய துறைநூலகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
- இதில் துறைசார் மாணவர்களும், ஆய்வாளர்களும், பேராசிரியர்களும் இந்நூலகத்தைப் பயன்படுத்த விதிகள் தனியே உருவாக்கப்பட்டுள்ளன.
- சென்னை கன்னிமாரா பொது நூலகம், அரசு அலுவலக நூல்நிலையங்கள் போன்ற சிறப்பு நிலை நூலகங்கள், இங்குள்ள நூல்களை, கடனாகப் பெற்று, பிறர் பயன்படுத்த வழிவகைச் செய்யப்பட்டுள்ளன.
- முன்பு இந்நூல்நிலையத்தில் நூலகம் குறித்த பட்டயப்படிப்பும், நற்சான்றிதழ் படிப்பும் நடத்தப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டன.தற்போது அது தனிப்பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.