சென்னை மாகாணத்தில் அடிமைத்தனம்

சென்னை மாகாணத்தில் அடிமைத்தனம் (Slavery in the Madras Presidency) என்பது பிரித்தானிய இந்தியப் பேரரசு ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகையில் 20% பேரை பாதித்த சிக்கல் ஆகும். இதனால் நிலப்பிரபுக்களாக இருந்த உயர்சாதியினர் மிகுதியான பலனை அடைந்தனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்கள் நிலத்தின் பேரில் கடனை வாங்கி, அவர்கள் கொத்தடிமை முறைக்கு உள்ளாயினர். 1930 இல் மொத்த மக்கள் தொகையில் கொத்தடிமையாக 12.2% பேர் இருந்தனர்.

அடிமைத்தனம் மற்றும் அடிமைகளின் தொகையானது தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபட்டு இருந்தது. 1811, 1812 மற்றும் 1823 ஆம் ஆண்டுகளில் அடிமைத்தனத்தை கட்டுப்படுத்தவும், குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்கவும் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன.  1843 ஆம் ஆண்டய இந்திய அடிமைச் சட்டத்தின்படி அடிமை வர்த்தகம் முடிவுக்குவந்தது, மேலும் அடிமை விற்பனை என்பது 1862 ஆம் ஆண்டில் புதிய இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்றமாக மாறியது.

ஒழுங்கு முறை

தொகு

உயர் சாதியினர் மிராசுதார் அல்லது நில உரிமையாளர்களாக இருந்தனர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தனிநபர்கள் திருமணச் செலவு, வீட்டுச்செலவு, விவசாயச் செலவு போன்ற தேவைகளுக்காக வேறுவழியின்றி தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்து மிராசுதார்களிடம் கடன்பெற்றனர். இந்தக் கடனை அவர்கள் தங்கள் உழைப்பின் வாயிலாகவே அடைக்கவேண்டிய நிலையில் இருந்தனர். மிராசுதார்களிடம் கடன் பெற்றவர்கள் இக்கடனால் தலைமுறை தலைமுறையாக கொத்தடிமைகளாக இருந்துவந்தனர். பிராமணர்கள் அடிமைகளையோ அல்லது வேலைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்களையோ கொண்டிருந்தனர் என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது. 1819 இல் திருச்சிராப்பள்ளி ஆட்சியரின் குறிப்பில் காணப்படும் ஒரு கோட்பாட்டின்படி, பிராமணர்கள் தாழ்த்தப்பட்ட சாதித் தொழிலாளர்களைப் பயன்படுத்தினர் என்றும், பிராமணரல்லாத நிலப்பிரபுக்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமைகளை பயன்படுத்தினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிமைத்தமனாது பிராமணர், பிராமணர் அல்லாதோர் என அனைத்து சாதிகளிலும் காணப்பட்டது.[1]

பண்ணையடிமை முறையானது வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடையில் வேறுபட்டு இருந்தது. [2] தென் ஆற்காடு மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் நிலங்களை விற்பனை செய்வது போலவே அடிமைகளையும் யாருக்கும் விற்கலாம் என்ற நிலை இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கோயம்புத்தூர் பகுதியில் அடிமைத்தனமானது பெரும்பாலும் கடன் சார்ந்ததாக இருந்தது. திருச்சிராப்பள்ளி பகுதியில் நிலத்துடன் சேர்த்து பண்ணையடிமைகளும் விற்கப்பட்டனர். மதுரைப் பகுதியில், 1819 ஆம் ஆண்டளவில் அடிமைத்தனமானது படிப்படியாக சரிவைச் சந்தித்தது. விடுவிக்கப்பட்ட சில அடிமைகள் மாகாணப் படையில் சிப்பாய்களாக சேர்ந்தனர்.   மாகாணத்தின் வடக்குப் பகுதிகளான மச்சிலிப்பட்டணம் மற்றும் கஞ்சம் போன்ற பகுதிகளில் பண்ணையடிமைத்தனம் குறைந்தது. தெலுங்கு மாவட்டங்களில், அடிமைகள் மூன்று வகையானவர்களாக இருந்தனர் - ஜமீந்தார்களின் வேலையாட்கள், முஸ்லிம்களின் வேலையாட்கள், பண்ணையடிமைகள் போன்றோர் ஆவர்.

பரவல்

தொகு

1841 ஆம் ஆண்டய அடிமைத்தனம் பற்றிய சட்ட ஆணைக்குழு அறிக்கையானது அடிமைகள் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களில், பள்ளர், பறையர் என வகைப்படுத்தி அடிமைகளின் எண்ணிக்கையை சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.[3] தென் ஆற்காட்டில், அடிமைகளின் எண்ணிக்கையானது 1819 இல் 17,000 என இருந்தது. இது அப்பகுதி மக்கள் தொகையில் 4% க்கும் குறைவாகும். தஞ்சாவூர் பகுதியில் அடிமைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகக் கூறப்பட்டது, மதுரை பகுதியில் இது குறைவாக இருந்தது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் மொத்த மக்கள் தொகையில் 38% அடிமைகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பில் மாவட்டத்தின் நீர்வளமிக்க பகுதிகளில் அடிமைகளின் எண்ணிக்கையானது 10,000 என்றும் வறண்ட பகுதிகளில் 600 என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது. நெல்லூர் மாவட்டத்தில் அடிமைகள் எண்ணிக்கையானது மொத்த மக்கள் தொகையில் 1827 ஆம் ஆண்டில் 14.6% என்றும், 1930 இல் 16% என்றும் இருந்தது.   1930 ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 12.2% பேர் அடிமைகளாக ஆகியிருந்தனர்.[4]

சட்டம்

தொகு

1811 ஆம் ஆண்டய அடிமை வர்த்தகச் சட்டமானது, பிரித்தானிய எல்லைக்குள் அடிமைகளை இறக்குமதி செய்வதானது தண்டணைக்குரிய குற்றமாக ஆக்கியது. 1823 ஆம் ஆண்டில் குழந்தைத் தொழிலாளர் உழைப்பைத் தடுக்க, விதிமுறைகள் முன்மொழியப்பட்டது.[5] 1833 ஆம் ஆண்டில் அடிமை முறை ஒழிப்பு சட்டம் அரச இசைவு பெற்றது, ஆனால் இச் சட்டமானது கிழக்கிந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான பிரதேசங்கள் மற்றும் இலங்கை தீவு, செயிண்ட் எலனா தீவுவரை நீட்டிக்கப்படவில்லை.[6] 1843 ஆம் ஆண்டின் சட்டமானது இறுதியில் இந்தியாவில் அடிமை வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. இது 1862 ஆம் ஆண்டில் புதிய இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.[7]

குறிப்புகள்

தொகு
  1. British and Foreign Anti-slavery Society 1841, p. 5
  2. Kumar pp. 43–48
  3. British and Foreign Anti-slavery Society 1841, p. 4
  4. Kumar pp. 52–53
  5. British and Foreign Anti-slavery Society 1841, p. 27
  6. "3&4 Will. IV, cap. 73".
  7. Slavery & South Asian History.

நூற்பட்டியல்

தொகு
  • British and Foreign Anti-slavery Society (1841). Slavery and the slave trade in British India: with notices of the existence of these evils in the islands of Ceylon, Malacca, and Penang, drawn from official documents. T. Ward, and to be had at the office of the British and Foreign Anti-Slavery society.
  • Dharma (1965). Land and Caste in South India: Agricultural Labor in the Madras Presidency During the Nineteenth Century. CUP Archive.