செலெனா

அமெரிக்கப் பாடகி (1971–1995)

செலெனா என்று பரவலாக அறியப்படும் செலெனா கின்டானியா-பெரெசு (Selena Quintanilla–Pérez, 16 ஏப்ரல் 1971 – 31 மார்ச்சு 1995) அமெரிக்க பாடகர்-பாடலாசிரியரும் நடிகையும் ஒய்யார வரைகலைஞரும் ஆவார். "டெகனோ இசையின் அரசி" [1]என்றும் "மெக்சிக்கோவின் மடோனா" [2]என்றும் அழைக்கப்பட்டார். செலெனா மெக்சிக்கோ-அமெரிக்கத் தந்தைக்கும் அரை-செரோக்கீ தாயாருக்கும் கடைசிக் குழந்தையாகப் பிறந்தார். தனது பன்னிரெண்டாவது அகவையிலேயே செலெனோ யி லோசு டினோசு என்ற தமது இசைக்குழுவுடன் முதல் இசைத்தட்டை வெளியிட்டார். 1987 டெகனோ இசை விருதுகளில் அந்த ஆண்டுக்கான சிறந்த பெண் வாய்ப்பாட்டிற்கான விருதினைப் பெற்றார். இந்த விருதை அவர் தொடர்ந்து எட்டு முறை பெற்றுள்ளார். 1989இல் ஈஎம்ஐ இலத்தீனுடன் சாதனை உடன்பாடு கண்டார். அவர்களுடன் ஐந்து எசுப்பானிய-மொழி இசைத்தொகுப்புகளை வெளியிட்டார்; இவை ஒவ்வொன்றும் புகழிலும் விற்பனையிலும் வெற்றி கண்டன.

இயற்பெயர்செலெனா கின்டானியா
பிற பெயர்கள்செலெனா, செலெனா பெரெசு, டெகனோ இசையரசி
பிறப்பு(1971-04-16)ஏப்ரல் 16, 1971
சாக்சன் ஏரி, டெக்சாசு, ஐக்கிய அமெரிக்கா
இறப்புமார்ச்சு 31, 1995(1995-03-31) (அகவை 23)
கார்பசு கிறைஸ்ட், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்டெகனோ, இலத்தீன் பாப்பிசை, சமகால ரிதம் அண்ட் புளூஸ், பரப்பிசை
தொழில்(கள்)நடிகர், பாடகர்-பாடலாசிரியர், ஒய்யாரம் வரைகலைஞர்
இசைத்துறையில்1982 (1982)—1995 (1995)
வெளியீட்டு நிறுவனங்கள்ஈஎம்ஐ இலத்தீன், இக்யூ-புரொடக்சன்சு, எஸ்பிகே ரிகார்ட்சு
இணைந்த செயற்பாடுகள்செலெனா யி லோசு டினாசு, பார்ரியோ பாய்சு, அல்வரோ டொரெசு
இணையதளம்www.q-productions.com

"கோமோ லா பிளோர்" என்ற பாடல் அவரை அடையாளப்படுத்தும் பாடலாக அமைந்தது; 1992இல் அமெரிக்க பில்போர்டு ஹாட் லத்தீன் டிராக்சு தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்திருந்தது. அடுத்த ஆண்டு, செலெனா லைவ்! சிறந்த மெக்சிக்க/அமெரிக்க இசைத்தொகுப்பிற்கான கிராமி விருது பெற்றது. 1994இல் வெளியான அமோர் புரொகிபிடோ இசைத்தொகுப்பில் ஐந்து பாடல்கள் முதலிடத்தைப் பிடித்தன. இவ்வகைச் சாதனையை நிகழ்த்திய முதல் இசுப்பானிய பாடகர் செலெனா ஆகும். எக்காலத்தும் மிகவும் விரைவாக விற்பனையான இலத்தீன் பாடற்தொகுப்பு இதுவேயாகும். 1994இல் ஈஎம்ஐ தலைவர் செலெனா ஆங்கிலத்தில் பாட ஊக்குவித்தார்; அதற்கேற்ப செலெனாவும் ஆங்கிலத்தில் பாட பயிற்சி எடுத்து வந்தார்.

மார்ச்சு 31, 1995இல் அவரது நண்பரும் செலெனா உடையங்காடியின் முன்னாள் மேலாளருமான யோலாண்டா சால்டிவாரால் கொலை செய்யப்பட்டார். செலெனாவின் மரணம் இசுபானியச் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல மெழுகுவத்தி நினைவுக்கூட்டங்களும் பிற நினைவுக்கூட்டங்களும் அவரது விசிறிகளால் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அப்போது டெக்சாசு ஆளுநராக இருந்த ஜார்ஜ் வாக்கர் புஷ், ஏப்ரல் 16 நாளை "செலெனா நாளாக" அறிவித்தார்.[3] அவரது மொழிமாறிய முடிவுறாத இசைத்தொகுப்பு டிரீமிங் ஆஃப் யூ சூலை 18, 1995இல் வெளியானது. 1997இல், வார்னர் புரோஸ். நிறுவனம் அவரது வாழ்க்கையை ஒட்டிய செலெனா என்ற திரைப்படத்தை வெளியிட்டது. இதில் புவேர்ட்டோ ரிக்கோ நடிகை ஜெனிஃபர் லோபஸ் "செலெனா"வாக நடித்திருந்தார். இந்த வேடத்தின் மூலம் லோபஸ் பிரபலமானார்.

2005இல் செலெனா ¡வைவே! என்ற பாராட்டுக் கச்சேரி யூனிவிசனில் முதல்காட்சியாக வெளியானது. இந்த நிகழ்ச்சிக்கு அந்த தொலைக்காட்சியின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த மதிப்பீட்டெண் கிட்டியது. அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிகக் கூடுதலானோரால் காணப்பட்ட எசுப்பானிய மொழி நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது; 37 மில்லியன் மக்கள் இதனைக் கண்டனர். 2006இல் செலெனா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. செலெனாவின் நினைவாக மிராடொர் டெ லா பிளோர் என்ற வெண்கல உருவ அளவுச் சிலை அமைக்கப்பட்டது. இந்த நினைவகங்கள் டெக்சாசு மாநிலத்தின் கார்பசு கிறைஸ்ட்டில் உள்ளன. உலகெங்கும் இவரது இசைத்தொகுப்புகள் 90 மில்லியனுக்கும் கூடுதலாக விற்பனையாகியுள்ளன.[4]

மேற்சான்றுகள்

தொகு
  1. Mitchell 1995.
  2. New York Times 1995.
  3. Orozco, Cynthia E. Quintanilla Pérez, Selena. The Handbook of Texas online. Retrieved on May 29, 2009
  4. "Still Missing Selena: Here Are 6 Reasons Why". NBC News. பார்க்கப்பட்ட நாள் March 31, 2014.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
செலெனா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலெனா&oldid=3710816" இலிருந்து மீள்விக்கப்பட்டது