செல்லையா மெற்றாஸ்மயில்
செல்லையா மெற்றாஸ்மயில் (இறப்பு: பெப்ரவரி 9, 2010, அகவை 65) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த அவர், அண்ணாவிமாரைக் கெளரவிப்பதிலும் அவர்கள் பற்றிய ஆவணங்களைத் தயாரிப்பதிலும் காத்திரமான பங்காற்றியவர். "வேழம்படுத்த வீராங்கனை" என்ற நாடகத்தை நெறியாழ்கை செய்து பல முறை மேடையேற்றிய பெருமையும் இவருக்குரியது. பாரம்பரியக் கலைகள் தொடர்பான பல நூல்களையும் இறுவெட்டுக்களையும் வெளியிட்டவர். பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகத்தின் அமைப்பாளராக இருந்தவர்.
செல்லையா மெற்றாஸ்மயில் | |
---|---|
பிறப்பு | 1945 புதுக்குடியிருப்பு (முல்லைத்தீவு) |
இறப்பு | பெப்ரவரி 9, 2010 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி,கொழும்பு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு1945 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிறந்தவர். 1936 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் மெயில் என்ற படம் வந்த போது அந்தப் படத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் இவரது தந்தை இவருக்கு மெற்றாஸ்மயில் என்று பெயரைச் சூட்டினார். யாழ்ப்பாணம், தீவகம் ஆகிய கல்வி வலயங்களில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற பின் கிளிநொச்சி கல்வி வலயத்தில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்தவர். 1945 ஆம் ஆண்டு பிறந்த இவர் புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலத்தில் கல்வி கற்று சித்தியடைந்த பின்னர் யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் உயர்தர வகுப்புப் படித்து கொழும்பு பல்கலைக்கழகம் சென்றவர்.
இசை நாடக நடிகனாக
தொகுநாட்டுக்கூத்துக் கலைஞனாக விளங்கிய இவர், இசை நாடகக் கலையைப் பயில வேண்டும் என்ற ஆவலில் 1997 ஆம் ஆண்டு இசை நாடகத்தினை மூத்த கலைஞர்களிடையே பயின்று "சத்தியவான் சாவித்திரி" என்ற இசை நாடகத்தில் சத்தியவானாக நடித்தார். வள்ளி திருமணம் நாடகத்தில் விருத்தன் பாத்திரத்தை ஏற்று நடித்தார்.
நாட்டார் இசைப்பாடகனாக
தொகுநாட்டார் பாடல்களில் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான வன்னிப் பகுதி நாட்டார் பாடல்களை தொகுத்து 1980 ஆம் ஆண்டு "வன்னி வள நாட்டார் பாடல்" என்னும் நூலை வெளியிட்டார். இவரின் முயற்சியால இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் யாழ்சேவை மூலம் துறை சேர்ந்த கலைஞர்களைக் கொண்டு நாட்டார் பாடல்கள் நிகழ்ச்சி "நாட்டார் இசை மாலை" என இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இயக்கி வந்தார்.
கிராமியக் கலை ஆடவல்லோனாக
தொகுபாரம்பரியக் கலைகளான மயிலாட்டம், கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம், கரகம், காவடி, குதிரையாட்டம் போன்றவற்றைப் பயின்று ஆற்றுகை செய்திருக்கிறார். குறிப்பாக இவர் 1993 ஆம் ஆண்டில் இளங்கலைஞர் மன்றத்தில் ஆடிய ஒயிலாட்டம் நிகழ்வை விழா மலர் ஒன்றில் காணக் கிடைக்கின்றது. யாழ்ப்பாணம் குருசாமி அண்ணாவியாரிடம் ஒயிலாட்டம் கலையைக் கற்றவர்.
கூத்து இசை நாடகத் தயாரிப்பாளனாக
தொகுபடித்தவர்கள் மட்டத்தில் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து இவர் வழங்கிய நாட்டுக் கூத்து "கண்ணகி வழக்குரை". அதன் பின் "காத்தவராயன் கூத்து", "வேழம்படுத்த வீராங்கனை கூத்து" வள்ளுவர் வாக்கு இசை நாடகம், சத்தியவான் சாவித்திரி இசை நாடகம், வள்ளி திருமணம் இசை நாடகம் போன்றவற்றைத் தயாரித்தார்.
கூத்து நெறியாளனாக
தொகுவேழம் படுத்த வீராங்கனை போன்ற நாட்டுக் கூத்து இசை வடிவங்களினூடாக சிறந்த நெறியளானாக யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
1990 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கோவலன் கூத்தை மேடையேற்றி பாண்டியரசனாக நடித்தார். இந்தக் கூத்து ரூபவாகினியில் ஒளிபரப்பப்பட்டது.
எழுத்தாளனாக
தொகுஇவரின் ஐந்து முக்கிய படைப்புக்களாக,
- வன்னி வள நாட்டார் பாடல் (1981),
- ஆனையை அடக்கிய அரியாத்தை (1993),
- இசை நாடக மூத்த கலைஞர் வரலாறு (1999),
- மண் வாசனையில் மூன்று நாடகங்கள் (2000),
- மரபு வழி இசை நாடகங்கள் ஒன்பது (2001)
போன்றவை குறிப்பிடத்தக்கவை. அத்தோடு இவரது இரண்டு நூல்கள் வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்தியப் பரிசினையும், ஒரு நூல் மத்திய கலாச்சார அமைச்சின் கலைக்கழக சாகித்தியப் பரிசினையும் பெற்றுள்ளன.
பாரம்பரியக் கலைகளின் பாதுகாவலனாக
தொகுபாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நாட்டின் குழப்பமான சூழ்நிலையிலும் வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, மலையகம், மன்னார், உடப்பு, புத்தளம் ஆகிய இடங்களுக்கு சென்று பல பாடல்களைப் பெற்று ஆவணப்படுத்தியிருக்கின்றார்.
வெளியிட்ட இறுவட்டுகள்
தொகு- சம்பூர்ண அரிச்சந்திரா (இசை நாடகம்) 5 மணி நேரம்
- காத்தவராயன் (சிந்து நடைக்கூத்து ) - 6 மணி நேரம் ( 2 இறுவட்டுக்கள்)
- சத்தியவான் சாவித்திரி (இசை நாடகம்) - 3 மணி நேரம்
- நந்தனார் இசை நாடகம் ( இசை நாடகம்) - 1 1/2 மணி நேரம்
- சிறீ வள்ளி (இசை நாடகம்) - 1 1/2 மணி நேரம்
- கோவலன் கண்ணகி (இசை நாடகம்) - 2 3/4 மணி நேரம்
- சாரங்கதாரன் (இசைநாடகம்) - 2 1/2 மணி நேரம்
- பூதத்தம்பி (இசை நாடகம்) - 2 3/4 மணி நேரம்
- பவளக் கொடி (இசை நாடகம்) 3 1/4 மணி நேரம்
- நல்ல தங்காள் ( இசை நாடகம்) - 4 மணி நேரம்
- ஞான செளந்தரி ( இசை நாடகம்) - 5 1/4 மணி நேரம் ( 2 இறுவட்டுக்கள்)
ஈழத்தின் இசை நாடகக் கலைஞர்கள் பலரை ஒருங்கிணைத்துச் செய்த இந்த ஒலி ஆவணப்படுத்தல் முயற்சியின் விளைவாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் கோயில்களிலும், விழாக்களிலும் விடிய விடிய அரங்கேறும் முழு நீள இசை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களை அப்படியே முழு அளவிலாகப் பதிவு பண்ணிச் செய்த பெருமுயற்சியாக அமைந்தது. அந்த வகையில் செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் ஈழத்து இசை நாடகத் துறைக்கு ஆற்றிய பணி வரலாற்றில் பதிவு பண்ணத்தக்கதாக அமைந்து விட்டது.
செல்லையா மெற்றாஸ்மயில் அவர்களின் கலைப்பணியைக் கெளரவித்து தங்கக்கிரீடம் என்ற மலர் 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
உசாத்துணை
தொகு- ஈழத்தின் "தமிழ்க்கலைக்காவலன்" செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில், கானா பிரபாவின் பதிவு, பெப்ரவரி 11, 2010