சொல் (அமைதி)
தமிழில் சொல் அமையும் பாங்கு சொல்லமைதி எனப்படுகிறது. பொருள் தரும்படி சொல்லப்படுவன அனைத்தும் சொல் எனப்படும். [1] சொல்லில் பெயர், வினை, இடை, உரி என்னும் பாகுபாடுகள் உண்டு. மேலும் திசைச்சொல், வடசொல் என்று சொல் வழங்கும் இடம் நோக்கிய பாகுபாடுகளும் உண்டு. இவை ஒருபுறம் இருக்க, இந்தச் சொற்கள் அமையும் பாங்கு இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சொல்லும் ஒரு செடி அல்லது மரம் போன்றது. அதற்கு வேர் உண்டு. இதனை வேர்ச்சொல் என்பர். வடமொழி தன் மொழியிலுள்ள வேர்ச்சொற்களைத் 'தாது' என்று குறிப்பிடுகிறது. தாது என்றால் விதை என்று பொருள். பேசுவோர் வேரைத் தோண்டிப் பார்ப்பதில்லை. மொழியியலார் என இக்காலத்தில் குறிப்பிடப்படும் இலக்கண நூலார் இதனை ஆராய்ந்து கூறுகின்றனர். தொல்காப்பியம் சொல்லை, மொழி, கிளவி என்னும் சொற்களால் குறிப்பிடுகிறது. நன்னூல் இவற்றுடன் பதம் என்னும் சொல்லாலும் குறிப்பிடுகிறது.
தொல்காப்பியம் வினைச்சொல்லோடு பால் உணர்த்தும் இடைச்சொற்களும், காலம் உணர்த்தும் இடைச்சொற்களும் புணர்ந்து வளர்ந்து அமைவதைக் காட்டுகிறது. நன்னூல் பகுபதம் என்று குறிப்பிட்டுச் சொல்லின் அமைதியைப், பகுதி, விகுதி. இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் எனக் காட்டி விளக்குகிறது
சொல்லின் வளர்ச்சி
தொகு’படு’ என்பது ஒரு வினைச்சொல். இது செய்வினையாக (intransitive) வளரும்போது:
- படுத்தான், படுக்கிறான், படுப்பான், - முக்காலம் காட்டும் தெரிநிலை வினைமுற்று
- படுத்த, படுக்கிற, படுக்கும் (பாய்) - பெயரெச்சம்
- படுத்து(க் கிடந்தான்), படுக்க(ச் சென்றான்) - வினையெச்சம்
- படுத்தல், படுக்கை - பெயர்ச்சொல்
என்னும் பாங்கில் வளரும்.
’படு’ என்னும் சொல் செயப்பாட்டு வினையாக (transitive) வளரும்போது
- (துன்பப்) பட்டான், படுகிறான், படுவான், - முக்காலம் காட்டும் தெரிநிலை வினைமுற்று
- பட்ட, படுகிற, படும் (கண்) - பெயரெச்சம்
- பட்டு(க் கிடந்தான்) பட(ப் பிறந்தான்) - வினையெச்சம்
- படுத்துதல், படை - பெயர்ச்சொல்
என்னும் பாங்கில் வளரும்.
’நில்’ என்பது ஒரு வினைச்சொல். இது வளரும் பாங்கு:
- நின்றான், நிற்கிறான், நிற்பான் - செய்வினையின் முக்காலம் காட்டும் தெரிநிலை வினைமுற்று
- நின்ற, நிற்கின்ற, நிற்கும் - பெயரெச்சம்
- நின்று, நிற்க - வினையெச்சம்
- நிலை, நிலைத்தல், நிலைப்பாடு போன்றவை பெயர்
’நிறுத்து’ - செயப்பாட்டு வினை. இது வளரும் பாங்கு:
- நிறுத்தினான், நிறுத்துகிறான், நிறுத்துவான் - முக்காலம் காட்டும் தெரிநிலை வினைமுற்று
- நிறுத்திய, நிறுத்துகிற, நிறுத்தும் - பெயரெச்சம்
- நிறுத்தி(க் காட்டினான்), நிறுத்த(ச் சென்றான்) - வினையெச்சம்
- (பேருந்து) நிறுத்தம் - பெயர்
சொல் ஆக்கம்
தொகுவினைச்சொற்களைக் கொண்டு புதிய சொற்கள் படைக்கப்பட்டுள்ளன.
- ஊர் - ஊர்தி, வானூர்தி
- உந்து - பேருந்து, நகருந்து
- காண் - காட்டு
- ஓடு - ஓட்டு
- செய் - செய்வி
- கல் - கற்பி
துணைவினை சேர்தல்
- செய்துகொண்டிருந்தான் (கொண்டு)
- போதருவான் (தா)
- செய்யப்படும் (படு)
எதிர்வினை
- செய்தல் - செய்யாமை (ஆ)
- செய்திலன் (இல்)
அளபெடைச் சொல்லாக்கங்கள்
தொகு- தேம் (தேன்சுவை) - தேஎம் (இடம்)
- ஆய் (ஆய்தல்) - ஆஅய் (ஆய் என்னும் வள்ளல்)
- அளை (அளவளாவுதலைக் குறிக்கும் ஏவல் வினைமுற்று) - அளைஇ (வினையெச்சம்)
- பொரு (போரிடுமாறு ஏவும் சொல்) - பொரூஉ (வினையெச்சம்)
அடிக்குறிப்பு
தொகு- ↑ எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்காப்பியம் சொல்லதிகாரம் 155)