சோராபாய் அம்பாலாவாலி

இந்தியப் பாடகர் (1918-1990)

சோரபாய் அம்பாலாவாலி ( Zohrabai Ambalewali ) (1918 - 21 பிப்ரவரி 1990) 1930கள் மற்றும் 1940களில் பாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய ஓர் இந்தியப் பாரம்பரியப் பாடகியும் மற்றும் பின்னணிப் பாடகியும் ஆவார். 1940 களின் ஆரம்ப மற்றும் நடுப்பகுதியில் மிகவும் பிரபலமான பெண் பின்னணி பாடகர்களில் ஒருவராக இவர் கருதப்பட்டார்.

சோராபாய் அம்பாலாவாலி
பிறப்புசோராபாய்
1918
அம்பாலா, பஞ்சாப், பிரித்தானிய இந்தியா (நவீன அம்பாலா, அரியானா, இந்தியா)
இறப்பு21 பெப்ரவரி 1990(1990-02-21) (அகவை 71–72)
தேசியம்இந்தியர்
பணிபாடுதல்
செயற்பாட்டுக்
காலம்
1932–1953
அறியப்படுவதுராட்டன் (1944)
ஜீனத் (1945)
அன்மோல் காடி (1946)
வாழ்க்கைத்
துணை
பக்கீர் முகமது

இசையமைப்பாளர் நௌசாத் இசையில் 1944 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ராட்டன் (1944) படத்தில் இடம்பெற்ற " அங்கியன் மிலாகே ஜியா பர்மாகே" மற்றும் "ஆய் தீபாவளி, ஆய் தீபாவளி" மற்றும் சம்சாத் பேகத்துடன் சேர்ந்து அன்மோல் காடி (1946) படத்தில் இடம்பெற்ற "உரான் கடோலே பெ உத் ஜாவூன்" திரைப்படப் பாடல்களில் பாடியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர். இவர், ராஜ்குமாரி, சம்சாத் பேகம் மற்றும் அமிர்பாய் கர்நாடகி ஆகியோருடன், பாலிவுட் திரையுலகின் முன்னணி முதல் தலைமுறை பின்னணிப் பாடகர்களில் ஒருவராக இருந்தார். இருப்பினும், 1940 களின் பிற்பகுதியில், கீதா தத் மற்றும் லதா மங்கேஷ்கர் போன்ற புதிய குரல்களின் வருகையினால், சோராபாய் அம்பாலேவாலியின் தொழில் வாழ்க்கை மங்கிவிட்டது.

ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும்

தொகு

தற்போதைய அரியானாவில் உள்ள அம்பாலாவில், தொழில்முறை பாடகர்களின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். 'அம்பாலாவாலி' என்பது இவரது குடும்பப் பெயர். குலாம் உசைன் கான் மற்றும் உஸ்தாத் நசீர் உசைன் கான் ஆகியோரின் கீழ் தனது இசைப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர், இந்துஸ்தானி இசையின் ஆக்ரா கரானாவில் (இசைப்பள்ளி) இசையில் பயிற்சி பெற்றார்.[1]

தொழில் வாழ்க்கை

தொகு

அம்பாலாவாலி தனது 13 வயதில், அனைத்திந்திய வானொலியில் ஒரு பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முக்கியமாக பாரம்பரிய மற்றும் அரை பாரம்பரிய பாடல்களைப் பாடினார். இவரது சில தும்ரிகளை எச். எம். வி இசைத்தட்டு நிறுவனம் பதிவு செய்து வெளியிட்டது. இறுதியில் பிரானசுகி நாயக் இசையமைத்த தகு கி லட்கி (1933) திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.[1] இலாகூரைத் தளமாகக் கொண்ட திரைப்படத் துறையில் ஆரம்ப ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் மும்பைக்கு குடிபெயர்ந்தார்.[2] இசை இயக்குநர் நௌசாத்தின் கீழ் ராட்டன் (1944) என்ற திரைப்படத்தின் மூலம் இவரது முதல் வெற்றி இருந்தது. மேலும் "ஆயி தீபாவளி ஆயி தீபாவளி" மற்றும் "அகியான் மிலா கே, ஜியா பர்மா கே" போன்ற வெற்றி பாடல்களும் பின்னர் வெளிவந்தன.[3] இசை இயக்குநர் நௌசாத்துக்காக அன்மோல் காதி (1946), மேளா (1948), ஜாதூ(1951) போன்ற வெற்றி படங்களில் பாடினார்.[4]நூர்ஜஹான்[5]

மற்றும் கல்யாணி ஆகியோருடன் ஜீனத் (1945) படத்தில் "அஹென் நா பாரீன் ஷிக்வே நா கியே" என்ற கவ்வாலி பாடினார். இது தெற்காசிய படங்களில் பெண் குரல்களில் பதிவு செய்யப்பட்ட முதல் கவ்வாலி பாடலாகும். இது பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.[5]

1948 இல் லதா மங்கேஷ்கர், கீதா தத் மற்றும் ஆஷா போஸ்லே போன்ற இசைக்கலைஞர்கள் வருவதற்கு சற்று காலம் முன்பு , ஷம்ஷாத் பேகம், குர்ஷித், அமீர்பாய் கர்நாடகி போன்ற பாடகர்களுடன், கனமான தும்ரி பாணியில் முன்னணி பின்னணி பாடகர்களுடன் இந்தித் திரைப்படங்களில் பாடிவந்தார்.[5]

பிற்கால வாழ்க்கை

தொகு

அம்பாலாவாலி 1950 களில் திரைப்படத் துறையில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான தனது மகள் ரோசன் குமாரியின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடினார். ரோசன் குமாரி சத்யஜித் ராயின் ஜல்சாகர் (1958) படத்திலும் நடித்த்தவர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Zohrabai, Amirbai and Rajkumari". Women on Record. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019. Profile of Zohrabai Ambalewali on womenonrecord.com website
  2. Sundar, Pavitra (2007). Sounding the Nation: The Musical Imagination of Bollywood Cinema. University of Michigan. p. 73.
  3. Gokulsing, K. Moti; Dissanayake, Wimal (2013). Routledge Handbook of Indian Cinemas. Routledge. pp. 264–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-77284-9.
  4. "Zohra Bai Ambala Wali (1918-90)". பார்க்கப்பட்ட நாள் 4 July 2019. Profile of Zohrabai Ambalewali on cineplot.com website
  5. 5.0 5.1 5.2 Aziz, Ashraf (2003). Light of the universe: essays on Hindustani film music. Three Essays Collective. pp. 14, 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-88789-07-8.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோராபாய்_அம்பாலாவாலி&oldid=4161761" இலிருந்து மீள்விக்கப்பட்டது