ஜன்னிய இராகம்

(ஜன்னிய இரகங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜன்னிய இராகங்கள் என்பது கருநாடக இசையில் மேளகர்த்தா இராகங்கள் என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இவை பிறந்த இராகம் அல்லது சேய் இராகம் என்றும் அழைக்கப்படுகின்றன. பண்டைத் தமிழிசையில் இதற்கு திறம் என்றும் பெயர்.[1][2]

வகைகள்

தொகு

ஜன்னிய இராகங்கள் கணக்கில் அடங்காதன. இவற்றை 5 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன:

  1. ஜன்னிய சம்பூர்ண இராகம் (வர்ஜமற்ற இராகம்).
  2. வர்ஜ இராகம்.
  3. வக்ர இராகம்.
  4. உபாங்க, பாஷாங்க இராகம்.
  5. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்கள்.

ஜன்னிய சம்பூர்ண இராகம்

தொகு

ஆரோகணமும் அவரோகணமும் சம்பூர்ணமாக உள்ள ஜன்னிய இராகம், ஜன்னிய சம்பூர்ண இராகம் ஆகும். உ+ம் : பைரவி ஆரோகணம் : ஸ ரி க ம ப த நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

வர்ஜ இராகம்

தொகு

ஜன்னிய இராகங்களில் ஆரோகணத்திலாவது அல்லது அவரோகணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது ஒரு ஸ்வரம் அல்லது இரண்டு ஸ்வரங்கள் விலக்கப்பட்டிருக்கும். அதுவே வர்ஜ இராகம் ஆகும். இவ்வாறு விலக்கப்பட்ட ஸ்வரங்களிற்கு வர்ஜ ஸ்வரங்கள் எனப்படும்.

ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஒரு ஸ்வரம் வர்ஜமாக இருக்கும் போது (அதாவது ஆறு ஸ்வரங்களைக் கொண்ட ஆரோகண அவரோகணம் உள்ள இராகம்) ஷாடவ இராகம் எனப் படும். உ+ம் : சிறீரஞ்சனி ஆரோகணம் : ஸ ரி க ம த நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ம க ரி ஸ

ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இரு ஸ்வரங்கள் வர்ஜமாக இருக்கும் போது ஔடவ இராகம் எனப்படும். உ+ம் : மோகனம் ஆரோகணம் : ஸ ரி க ப த ஸ் அவரோகணம் : ஸ் த ப க ரி ஸ

அபூர்வமாக மூன்று ஸ்வரங்கள் வர்ஜமாக இருக்கும் போது ஸ்வராந்தர இராகம் எனப்படும். உ+ம் : மகதி ஆரோகணம் : ஸ க ப நி ஸ் அவரோகணம் : ஸ் நி ப க ஸ

பண்டைத் தமிழிசையில் ஷாடவ இராகம் பண்டியம் என்றும், ஔடவ இராகம் திறம் என்றும் ஸ்வராந்தர இராகம் திரத்திறம் என்றும் அழைக்கப்படும்.

சம்பூர்ண, ஷாடவ, ஔடவ கலப்பினால் எட்டு வகையான வர்ஜ இராகங்கள் உண்டாகின்றன.

ஜன்ய இராகம் இராகம் ஆரோகணம் அவரோகணம்
ஷாடவ ஷாடவம் சிறீரஞ்சனி ஸ ரி க ம த நி ஸ் ஸ் நி த ம க ரி ஸ்
ஔடவ ஔடவம் மோகனம் ஸ ரி க ப த ஸ் ஸ் த ப க ரி ஸ
ஷாடவ ஔடவம் நாட்டைக்குறிஞ்சி ஸ ரி க ம த நி ஸ் ஸ் நி த ம க ஸ
ஔடவ ஷாடவம் மலஹரி ஸ ரி ம ப த ஸ் ஸ் த ப ம க ரி ஸ
ஷாடவ சம்பூர்ணம் காம்போஜி ஸ ரி க ம ப த ஸ் ஸ் நி த ப ம கரி ஸ
சம்பூர்ண ஷாடவம் நீலாம்பரி ஸ ரி க ம ப த நி ஸ் ஸ் நி ப ம க ரி ஸ
ஔடவ சம்பூர்ணம் பிலகரி ஸ ரி க ப த ஸ் ஸ் நி த ப ம க ரி ஸ
சம்பூர்ண ஔடவம் சாரமதி ஸ ரி க ம ப த நி ஸ் ஸ் நி த ம க ஸ

வக்ர இராகம்

தொகு

ஒரு ஜன்ய இராகத்தின் ஆரோகணத்தில் அல்லது அவரோகணத்தில் அல்லது இரண்டிலும் சில ஸ்வரங்கள் ஒழுங்கான வரிசையில் இல்லாமல் முன்னும் பின்னுமாக செல்லுமானால் அந்த இராகம் வக்ர இராகம் எனப்படும். வக்ர இராகங்கள் மூன்று வகைப்படும்.

1. ஆரோகணம் மட்டும் வக்ரமாக உள்ளமை. உ+ம் : ஆனந்தபைரவி ஆரோகணம் : ஸ க ரி க ம ப த ப ஸ் அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

2. அவரோகணம் மட்டும் வக்ரமாக உள்ளமை. உ+ம் : சிறீராகம் ஆரோகணம் : ஸ ரி ம ப நி ஸ் அவரோகணம் : ஸ் நி ப த நி ப ம ரி க ரி ஸ

3. ஆரோகணமும் அவரோகணமும் வக்ரமாக உள்ளவை. (உபய வக்ர இராகங்கள்) உ+ம் : ரீதிகௌளை ஆரோகணம் : ஸ க ரி க ம நி த ம நி நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ம க ம ப ம க ரி ஸ

உபாங்க இராகம்

தொகு

தாய் இராகத்திற்கு உரிய ஸ்வர வகைகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் இராகம் உபாங்க இராகம் எனப்படும். இவை வர்ஜமாகவோ அல்ல்து வக்ரமாகவோ அமையலாம். உ+ம் : ஹம்சத்வனி ஆரோகணம் : ஸ ரி க ப நி ஸ் அவரோகணம் : ஸ் நி ப க ரி ஸ

பாஷாங்க இராகம்

தொகு

தாய் இராகத்தைச் சேர்ந்த ஸ்வர வகைகளைத் தவிர வேறு ஸ்வரஸ்தானங்களையும் (அன்னிய ஸ்வரங்களை) எடுத்துக்கொள்ளும் இராகம் பாஷாங்க இராகம் எனப்படும். சில பாஷாங்க இராகங்களில் ஆரோகண அவரோகணத்திலேயே அன்னிய ஸ்வரம் இடம் பெறும். உ+ம் : பைரவி ஆரோகணம் : ஸ ரி க ம ப த* நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ இது 20 வது மேளமாகிய நடபைரவியின் ஜன்யமாகும்.

வேறு சில பாஷாங்க இராகங்களில் ஆரோகண அவரோகணத்தில் அன்னிய ஸ்வரம் இடம் பெறாமல் சஞ்சாரத்தில் மட்டும் வரும். உ+ம் : காம்போஜி பிரயோகம் : ஸ் நி ப த ஸா

பாஷாங்க இராகம் மேலும் மூன்று வகைப்படும். அவையாவன :

1. ஏகான்ய ஸ்வர பாஷாங்க இராகம் - இது ஒரு ஸ்வரத்தை உடைய இராகமாகும். உ+ம் : முகாரி, பைரவி, காம்போஜி, பிலஹரி

2. த்வி அன்னிய ஸ்வர பாஷாங்க இராகம் - இது இரண்டு ஸ்வரங்களை உடைய இராகமாகும். உ+ம் : புன்னாகவராளி, அடாணா

3. த்ரி அன்னிய ஸ்வர பாஷாங்க இராகம் - இது மூன்று ஸ்வரங்களை உடைய இராகமாகும். உ+ம் : ஆனந்தபைரவி, ஹிந்துஸ்தான் காபி, ஹிந்துஸ்தான் பெஹாக்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. A practical course in Carnatic music by Prof. P. Sambamurthy, 15th edition published 1998, The Indian Music publishing house
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜன்னிய_இராகம்&oldid=4103621" இலிருந்து மீள்விக்கப்பட்டது