ஜயத்திரதன்

(ஜயத்ரதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜெயத்திரதன் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவன். சிந்து நாட்டு அரசன் மற்றும் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன். இவனது தந்தை விருத்தக்ஷத்ரன். ஜயத்ரதன் பிறந்தபோது ஓர் அசரீரி ’இவன் போரில் புகழ்படைத்து வீர சுவர்க்கம் அடைவான்’ எனக்கூறியது கேட்டு ஜயத்ரதன் தந்தை, ’என் மகன் தலையை தரையில் விழும்படி செய்பவன் தலை சுக்கு நூறாக வேண்டும்’ என்றான். [1]

முன் வரலாறு

தொகு

காம்யக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தபோது,திரௌபதி தனித்து இருந்தாள்.அப்போது அங்கு வந்த சிந்து நாட்டு மன்னன் ஜயத்ரதன் ஆசிரமத்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த திரௌபதியை கண்டதும் காதல் கொண்டான்.அதை அவளிடம் வெளிப்படுத்தினான்.காமவயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான்.அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.

வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஜயத்ரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர்.தேர் சென்ற சுவடை கொண்டு ஜயத்ரதனுடன் போரிட்டனர்.அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி தருமரிடம் அழைத்து வந்தான் பீமன். தருமரின் ஆணையால் அவனை மொட்டையடித்து அனுப்புகின்றனர். நாணி தலைகுனிந்து திரும்பிய ஜயத்ரதன்,கங்கைக் கரைக்குச் சென்று பரமசிவனை நோக்கி கடும் தவமிருந்து அவரிடம் பாண்டவர்களை கொல்லத்தக்க வலிமையை வேண்டுகிறான்.கண்ணனின் துணை இருக்கும் வரை,பாண்டவர்களை யாராலும் கொல்ல முடியாது. ஆனாலும் ஜயத்ரதன் விடவில்லை. பாண்டவர்களுக்கு மிகப்பெரும் மனவலியை போரில் உண்டாக்க வரம் கேட்கிறான். அவன் வாக்கினையே அவனுக்கெதிராக ஈசன் திருப்புகிறார். அதன்படி,"ஒரே ஒரு நாளிற்கு, அர்ஜுனன்-கண்ணன் இணையை தவிர்த்து, போர் களத்தில் ஜயத்ரதன்  யாரைவேண்டுமானாலும் எளிமையாய் தோற்கடிக்கும் ஆற்றலை பெறுவான். அந்த நாளையும் ஜயத்ரதனே தேர்வு செய்துகொள்ளலாம்" என வரம் கொடுத்துவிட்டு மறைந்து விடுகிறார்.

குருச்சேத்திரப் போர்

தொகு

அபிமன்யு வதம் - 13ஆம் நாள்

தொகு

பதின்மூன்றாம் நாள் குருச்சேத்திரப் போரில் துரியோதனன் திட்டப்படி துரோணர் சக்கர வியூகம் அமைத்துப் போரை நடத்துகிறார். அன்றைய போரின் போது யுதிஷ்டிரரை சிறைப்பிடிக்க எண்ணி சக்கரவியூகமாக வளைத்து விடுகிறார்கள். இந்த அமைப்பை உடைத்து செல்லத் தெரிந்தவர்கள் பாண்டவர் தரப்பில் மூவர் மட்டுமே, அவர்கள் அருச்சுனன், கிருஷ்ணர் மற்றும் அபிமன்யு. ஆனால் அபிமன்யுவுக்கு உள்ளே போகத் தெரியுமே தவிர வெளியே வரத் தெரியாது. இருந்தாலும் அருச்சுனரும் கிருஷ்ணரும் அச்சமயம் யுத்த களத்தில் வேறிடத்தில் இருந்ததால் அபிமன்யு மட்டும் போகத் துணிகிறான். பின்னாலேயே பீமனும் மற்ற வீரர்களும் அவனுடனேயே உள்ளே நுழைவதாக ஏற்பாடு. ஆனால், யுதிஷ்டிரர் மீட்கப்பட்டு வெளி வந்த மறுகணம் அவர் உள்பட அபிமன்யுவைப் பின் தொடர்ந்த நான்கு பாண்டவர்களையும் ஜெயத்ரதன் முன்னேற விடாமல் தடுத்து விடுகிறான். (அர்ச்சுனன் தவிர மற்ற பாண்டவர்கள் நால்வரையும் எதிர்கொண்டு தடுக்கும் பலத்தினை அவன் வரமாய்ப் பெற்ற கிளைக்கதையும் மகாபாரதத்தில் உண்டு). அபிமன்யுவைத் தனியாக வளைத்து விடுகிறார்கள். துரோணர் ஆச்சர்யத்தில் கண்பிதுங்கிப் போகும் அளவுக்கு அத்தனை பேரையும் தனியாக சமாளிக்கிறான் சிறுவன். கடும் போராட்டத்துக்குப் பிறகு, அவனை வீழ்த்திக் கொன்று விடுகிறார்கள். அதை அறிந்த அருச்சுனன் அடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் ஜயத்ரதனை கொல்வதாகவும் அவ்வாறு இயலாவிடில் தீப்புகுவதாகவும் சபதம் செய்கிறான்.

ஜயத்திரதன் வதம்

தொகு

இதனை பயன்படுத்தி அருச்சுனனை தீப்புக வைக்க துரியோதனன் ஜயத்திரதனை அடுத்த நாள் போரில் ஈடுபடாமல் ஒளிந்திருக்கச் செய்கிறான். கதிரவன் மறையும் நேரம் நெருங்கியும் ஜயத்திரதனைக் காணாது பாண்டவர்கள் கலக்கமடைகின்றனர்.அப்போது கிருஷ்ணர் தனது சுதர்சன சக்கரத்தால் சூரியனைத் தற்காலிகமாக மறைக்க ஜயத்திரதன் வெற்றிக்களிப்புடன் வெளிப்படுகிறான். கிருஷ்ணர் சக்கரத்தை இப்போது விலக்கி கொள்ள பகல்பொழுது மீள்கிறது. அருச்சுனன் அப்போது விட்ட அம்பு ஒன்று ஜெயத்திரதன் தலையை கவ்வி தன்னுடன் மேலே எடுத்து செல்கிறது. அவனது தந்தை பெற்ற வரமொன்றின்படி ஜெயத்திரதன் தலையை யார் தரையில் தள்ளினாலும் தள்ளுபவர் தலை சுக்கு நூறாக வெடித்து விடும். ஆகவே கண்ணன் அறிவுரையில் அருச்சுனன் அடுத்த மூன்று அம்புகள் செலுத்தி அத்தலையை ஊருக்கு வெளியே ஒரு பர்ணசாலைக்கு செலுத்துகிறான். அங்கு ஜெயத்திரதனின் தந்தை மடியில் அத்தலை போய் விழுகிறது. என்னவோ தன் மடியில் விழுந்து விட்டதே என்பதற்காக அதைச் சட்டென்று உதறிவிட தலை தரையில் விழ ஜயத்திரதனின் தந்தையின் தலை உடைகிறது.[2]

அர்ச்சுனனுக்கு கிருஷ்ணனின் "பொருள் பொதிந்த" கண்டனம்

தொகு

"பாரதப் போரில் நீ ஒரு தர்மத்தை நிலைநாட்டுவதற்காக உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் கருவி மட்டுமே. உன்னை யார் சபதம் செய்யச் சொன்னது? அதுவும் கால நிர்ணயம் செய்து? சூரியனின் பயணத்துடன் உன் அபிலாஷைகளை ஏன் முடிச்சிடுகிறாய்? யாருக்காகவும் நிற்காது காலம், அதனைக் கருத்தில் கொள். நேர நிர்ணயம் செய்து உன் சபதங்களை எடுக்காதே. அதனால் விளையப் போவது பதற்றம் மட்டுமே. உன்னுடைய இயல்பான திறமை கூட அதனால் பங்கப்பட்டதை இன்று அனுபவ பூர்வமாகக் கண்டாய் அல்லவா? நான் மட்டும் சூரியனை மறைத்திருக்கா விட்டால் உன் கதி என்னவாகி இருக்கும் என்று யோசித்துப் பார்"

இரண்டு முறை சூரிய அஸ்தமனம் சாத்தியமா?

தொகு

டாக்டர் வார்டெக் என்பவர் (மகாபாரத யுத்தம் கிமு.5561 அக்டோபர் 16 ஆம் நாள் தொடங்கி நவம்பர் 2 ஆம் நாள் முடிந்தது என்று ஏராளமான ஆதாரங்களுடன் எழுதியுள்ள கட்டுரை நூலில்) இரட்டை சூரியோஸ்தமனம் அறிவியல் பூர்வமாக சாத்தியமே என்று விளக்கி உள்ளார். அவருடைய விளக்கம்:

சூரியஒளி நேர்கோட்டில் பயணம் செய்தாலும், அது வளிமண்டலத்தைக் கடக்கும் போது ஒளிச் சிதறலுக்கு ஆட்படுகிறது. அதுவே தொடுவானத்துக்குக் கீழே சூரியன் இருப்பது போன்ற காட்சியைத் தருகிறது. கானல் நீர் ஏற்படும் விதம் போலத்தான் இதுவும். பூமிப் பரப்பினை ஒட்டி இருக்கும் காற்றின் வெப்பநிலைக்கும் அதனை அடுத்துள்ள காற்றடுக்கின் வெப்ப நிலைக்கும் இருக்கும் வித்தியாசமே கானல் நீர் ஏற்படக் காரணம். அதாவது பூமிப் பரப்பின் சூட்டினால் அதனை ஒட்டி இருக்கும் காற்றும் சூடடைந்து அடர்த்தி குறைந்து இருக்கிறது. அதற்கு மேலே இருக்கும் காற்றடுக்கு அடர்த்தி அதிகமாக இருக்கிறது. ஒளி அடர்த்தி அதிகமான ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைந்த ஊடகத்தினுள் செல்லும் போது விலகல் ஏற்படும். ஒரு பகுதி ஒளி விலகி பூமிப்பரப்புக்கு இணையாகவும், இன்னொரு பகுதி பூமியில் பட்டுத் தெரிப்பதாலும் தூரத்து மலையின் தலைகீழ் பிம்பம் பூமிப்பரப்புக்குக் கீழே மாயபிம்பமாகத் தெரியும். அதேபோல், சூடான கீழ்ப்பரப்புக் காற்றின் மீது பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி ஒரு திரவக் கண்ணாடி போல் பூமிப்பரப்பில் விரிய அது ஒரு மாய தொடுவானத்தினைக் காட்சிப்படுத்துகிறது. நிஜமான தொடுவானம் வானத்தின் பிரதிபலிப்பில் மறைந்து விடுகிறது.

மகாபாரத யுத்தத்தின் போதும் இதே தான் நிகழ்ந்திருக்கும். நெருப்பு சார்ந்த ஆயுதங்களின் பிரயோகங்களால் யுத்த பூமி சூடாகி இருக்க, அதன் மேலான காற்று அடர்த்தி குறைவாகி எழும்பி இருக்க, மாலைச் சூரியனின் வட்டவடிவம் மாய நீள்வட்ட வடிவமாகி மாயத் தொடுவானத்தின் கீழ் மறைந்தது போன்ற தோர்றம் உருவாகி இருக்கும். அந்தக் கணத்தில் ஜயத்ரதன் வெளிப்பட்டிருக்கக் கூடும். அடுத்த கணங்களில் வெப்ப வேறுபாடு குறைய நிஜத் தொடுவானத்தில் சூரியன் தோற்றமளித்துப் பின் மறைந்திருக்கும். இந்த இடைவெளியில் ஜயத்ரதனின் வதம் நிகழ்ந்திருக்கும்.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ஸ்ரீமஹாபாரத ஸாரம்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம் 784
  2. ஜெயத்ரதனைக் கொன்ற அர்ஜுனன்!
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜயத்திரதன்&oldid=2780984" இலிருந்து மீள்விக்கப்பட்டது