ஜிகாத் (அரபு மொழி: جهاد‎, ஜிஹாது) எனும் அரபு மொழிச் சொல்லுக்கு முயற்சித்தல், கடுமையாக உழைத்தல், போராடுதல், தற்காப்பு போன்ற பல்வேறு பொருள்கள் உண்டு[1][2]. ஜிஹாதை மேற்கொள்ளுபவர் முஜாஹித் என அழைக்கப்படுகிறார். முஜாஹிதீன் என்பது இதற்கான பன்மை சொல்லாகும்[3]. ஜிஹாத் தொடர்பான பல வசனங்கள் குர்ஆனில் காணப்படுகின்றன.[4][5] இது கடவுளின் வழியில் உழைத்தல், முயற்சித்தல் மற்றும் போராடுதலை குறிக்கும் (striving in the way of God (al-jihad fi sabil Allah).[6][7][8].

தொடக்க இசுலாமிய இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட கொடி[சான்று தேவை]

முஸ்லிம்[9] மற்றும் முஸ்லிமல்லாத [10] அறிஞர்கள் பலர், ஜிஹாத் எனும் சொல்லுக்கு இரண்டு விதமான பொருளை தருகின்றனர். (மன இச்சைகளுக்கு எதிரான) "உள்ளக ஆன்மீக போராட்டம்" (inner spiritual struggle) ஒரு பொருளாகவும் [11], இஸ்லாமிய எதிரிகளுடனான உடல்ரீதியான போராட்டம் (outer physical struggle) மற்றொரு பொருளாகவும் கையாளப்படுகின்றது.[12] அகிம்சை போராட்டம் மற்றும் வன்முறை போராட்டம் ஆகிய இரண்டும் இரண்டாவது பொருளில் சேரும்.[6][13][14]

இது புனிதப்போர் ("Holy War")[15][16][17] எனவும் பரவலாக மொழிப்பெயர்க்கப்படுகின்றது. இது சர்ச்சைக்குரிய மொழிப்பெயர்ப்பாகும். பெரும்பான்மையான இஸ்லாமியர்களும், அறிஞர்களும் 'புனித போர்' என்ற மொழியாக்கத்தை ஏற்பதில்லை. [18][19] மொழியியலாளரான பெர்னார்டு லீவிஸ் (Bernard Lewis) ஜிஹாத் என்பது ஆயுதப் போராட்டம் என்ற பொருளிலேயே பலராலும் புரிந்துகொள்ளப்படுவதாக குறிப்பிடுகிறார்.[20] ஜாவித் அஹமத் கமிதி (Javed Ahmad Ghamidi) ஜிஹாதானது தவறாக செயல்படுபவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் ஆயுத நடவடிக்கையையும் உள்ளடக்கியது என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் கருத்தொற்றுமை கொண்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்.[21]

சுன்னி இசுலாமில் அதிகாரபட்சமாக இடமில்லாத போதும் சில வேளைகளில் ஜிகாத் இசுலாமின் ஆறாவது தூணாகவும் அழைக்கப்படுவதுண்டு.[22] சியா இசுலாமில் ஜிஹாத் 10 முக்கிய கடமைகளில் ஒன்றாகும். பொதுவாக, ஜிஹாதின் ஒரு பகுதியான ஆயுத போராட்டம் கலீபாக்களால் தான் அறிவிக்கப்பட வேண்டும், ஆனால் இஸ்லாமியர்கள் கலீபாக்களின் மத அதிகாரத்தை (spiritual authority) ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் 1923 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கலீபாக்கள் இடம் வெற்றிடமாகவே உள்ளது. சுன்னி இசுலாமைச் சாராதவர்கள் ஆயுத போராட்டத்திற்கு தமது ஆட்சியாளர்கள் அறைகூவல் விடுத்தால் போதும் என எண்ணுகின்றனர்.

தொடக்கம்

தொகு

நவீன காலத்திய அரபி மொழியில் ஜிகாத் என்பது மதம் சார்ந்த காரணங்களுக்காகவோ அல்லது மதச்சார்பற்ற காரணங்களுக்காகவோ போராடுவதைக் குறிக்கிறது. இதில் ஜிகாத் என்பதற்கு சண்டை போடுதல், போர் புரிதல், ஜிகாத், புனிதப்போர் மற்றும் சமயப் பணி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[23] மேலும் இதன் அர்த்தம் குரானில் கூறப்பட்டபடி முகம்மது நபி செய்த செயல்களால் பொருள் கொள்ளப்படுகிறது.[24][25] குரானிலும் அதற்குப் பின்னான இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளிலும் ஜிகாத்தானது கடவுளின் வழியில் (in the path of God) என பின்பற்றப்பட்டது.[26] மேலும் மதச்சார்பு இல்லாமல் போர் (crusade) செய்வதையும் ஜிகாத் என்ற அர்த்தத்தில் பொருள் கொள்ளப்பட்டது.[27]

குரானில் ஜிகாத்

தொகு

குரானில் 41 வசனங்களில் ஜிகாத் மற்றும் அதன் கிளைச் சொற்கள் இடம்பெற்றுள்ளதாக அஹ்மத் அல் தாவூதி கூறுகின்றார். இதில் 11 வசனங்கள் மக்காவில் இருந்தபோதும், 30 வசனங்கள் மதினாவில் இருந்த போதும் அருளப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.[28] உறுதி, உழைத்தல், கட்டாயப்படுத்துதல், அழைப்பு பணி, ஆயுத போராட்டம் போன்ற பல்வேறு பொருள்களில் குரானில் ஜிகாத் பயன்படுத்தப்பட்டுள்ளது.[29]

அ) உழைத்தல் என்ற பொருளில் குரான் வசனங்கள் 9:79, 29:6, 29:69 ஆகியவற்றில் ஜிகாத் குறிப்பிடப்பட்டுள்ளது.[30]

தாராளமாக செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதோரையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.[31]

உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.[32]

நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.[33]

இந்த குரான் வசனங்களில் 'உழைப்பு, உழைப்பவர், உழைக்கிறார், உழைப்போர்' போன்றவற்றை குறிக்க ஜுஹ்த, ஜாஹத, ஜாஹிது, ஜாஹதூ ஆகிய ஜிகாத் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.[34][35][36][37]

ஆ) வற்புறுத்துதல் என்ற பொருளில் ஜிகாத், குரான் வசனங்கள் 29:8, 31:15 ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது.[38]

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.[39]

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.[40]

இந்த இரண்டு குரான் வசனங்களில் 'உன்னை வற்புறுத்தினால்' என்பதற்கு ஜாஹதாக என்ற ஜிகாத் கிளைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.[41][42][43]

இ) ஜிகாத் என்பதற்கு உறுதி என்று பொருள் தரக்கூடிய குரான் வசனங்கள் 5:53, 6:109, 16:38, 24:53, 35:42-43 ஆகியவை ஆகும். இந்த வசனங்களில் 'உறுதி' என்பதை குறிக்க ஜஹத என்ற ஜிகாத் கிளைச் சொல் இடம்பெற்றுள்ளது.[44]

ஈ) ஜிகாத் என்பதற்கு அழைப்பு பணி என்று பொருள் தரக்கூடிய குரான் வசனங்கள் 22:78, 25:52, 9:73 ஆகியவை ஆகும்.[45]

இவை அல்லாத ஏனைய வசனங்களில் ஜிஹாத் என்பது ஆயுத போராட்டம்/இராணுவ நடவடிக்கை என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. ஆயுத போராட்டமாக இருக்கும் பட்சத்தில் ஜிகாத் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதற்கு குரானில் வழிகாட்டுதல்கள் காணப்படுகின்றன.[46]

அநீதி இழைக்கப்படும் சூழலிலும்[47], பலகீனமான ஆண்களையும், பெண்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் பொருட்டும்[48] ஆயுத போராட்டம் நடத்தப்படலாம் என்று குரான் கூறுகின்றது. மேலும், உடன்படிக்கைகள் முறிக்கப்படும் போதும், சொந்த நிலத்தை விட்டு மக்கள் வெளியேற்றப்படும் சூழலிலும் ஆயுத போராட்டத்தை நடத்திக்கொள்ள குரான் அனுமதிக்கின்றது[49][50].

எப்படியான சூழல்களில் ஆயுதப்போராட்டம் நடத்தப்படக்கூடாது என்பதற்கும் குரானில் வழிகாட்டுதல்கள் காணப்படுகின்றன.[51] மதத்தை பரப்ப போர் செய்யக்கூடாது[52][53][54] என்றும், போரை முதலில் துவக்கக்கூடாது[55][56] என்றும், சமாதானம் செய்துக்கொள்ள விரும்புபவர்களுடனும்[57][58], விலகிக்கொள்ள விரும்புபவர்களுடனும் சண்டையிட கூடாது[59] என்றும் குரான் விதிமுறைகளை வகுத்துள்ளது.

ஜிகாத் எனும் சொல் அரபு மொழியில் குரானின் காலத்திற்கு முன்னர் காணப்படவில்லை. தொடக்க காலத்தில் முஸ்லீம்களின் அருகில் இருந்த எதிரிகளைக் குறிக்கும் பொருட்டே ஜிகாத் எனும் சொல் குரானில் குறிப்பிடப்பட்டது, அதன் பின்னான காலங்களில் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் குரானின் ஜிகாத் எனும் வார்த்தை காலத்திற்கேற்ப முஸ்லீம் அல்லாதவர்களுக்கு எதிரான எனப் பொருள்கொள்ளப்பட்டது என ஜோனதன் பெர்க்கி (Jonathon Berkey) கூறுகிறார்.

ஹதீஸில் ஜிகாத்

தொகு

குரானைப் போல, நபிமொழி தொகுப்புகளான ஹதீஸ்களிலும் ஜிகாத் பல்வேறு அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளது.[60] 'தன்னுடைய உள்ளத்தை எதிர்த்து போராடுவதே ஜிகாத் (உள்ளக ஆன்மீக போராட்டம்)' என்று முஹம்மது நபி கூறியதாக நஸயி நூலில் வரும் ஹதீஸ் பதிவு செய்கிறது.

தனது உள்ளத்தை எதிர்த்துப் போரிட்டவனே போராளியாவான் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.[61]

பெற்றோருக்கு பணிவிடை செய்வதை ஜிகாத் என்று முஹம்மது நபி குறிப்பிட்டதாக புகாரி நபிமொழி தொகுப்பில் காணப்படுகின்றது.

ஒரு மனிதர் நபி அவர்களிடம் வந்து ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி அவர்கள், "உன் தாயும் தந்தையும் உயிருடன் இருக்கின்றார்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், "ஆம்" என்று பதிலளித்தார். "அப்படியென்றால் அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய்" என்று கூறினார்கள்.[62][63]

பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் (புனித யாத்திரை) செய்வதே ஜிஹாத் என்ற பொருளிலும் ஹதீஸ்களில் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளது.

"அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?" என்று நான் கேட்டேன். அதற்கு நபி அவர்கள், "சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் ஆகும்" என்றார்கள். நபி அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை என்று முஹம்மது நபியின் மனைவி ஆயிஷா அறிவிக்கிறார்.[64][65][66]

அநியாயக்கார தலைமையிடம் நீதியை எடுத்துரைப்பதே சிறந்த ஜிகாத் என்று முஹம்மது நபி கூறியதாக அபூதாவுத் மற்றும் அஹ்மத் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி அவர்களிடம் ஒருவர் வந்து, "ஜிஹாதில் சிறந்தது எது?" என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள், "அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்" என்று பதிலளித்தார்கள்.[67][68][69]

முகம்மது நபியிடம் ஜிகாத்தின் சிறப்பைப் பற்றிக் கேட்டபோது,

"ஜிகாத்தின் சிறப்பென்பது, உனது குதிரை வன்முறையில் கொல்லப்பட வேண்டும் மற்றும் உனது இரத்தம் தெறிக்க வேண்டும்" என்றார். (The best jihad is the one in which your horse is slain and your blood is spilled)[70]

பிற இஸ்லாமியக் குழுக்களின் பார்வை

தொகு

ஜிகாத் குறித்து பிற இஸ்லாமிய குழுக்களின் பார்வை கீழே,

அஹமதியா

தொகு

ஜிகாத் என்பது மதத்தைக் காத்துக் கொள்வதற்கான ஒன்றாகும் அதில் வன்முறையை கடைசி வாய்ப்பாக மட்டுமே கொள்ள வேண்டும்.[71]

குரானியர்கள்

தொகு

குரானியர்கள் ஜிகாத்தை புனிதப் போராகக் கருதுவதில்லை. ஜிகாத் என்பது திண்டாட்டம் என்றே பொருள் கொள்கின்றனர். இது இராணுவ மற்றும் இராணுவம் அல்லாத இடங்களிலும் பொருள்படும் ஒன்று. போர் என வரும் போது தற்காத்தல் எனும் பொருளிலேயே ஜிகாத் கொள்ளப்படுகிறது.[72][73]

சூஃபி

தொகு

சூஃபிக்கள் ஜிகாத்தை பெரிய ஜிகாத் மற்றும் சிறிய ஜிகாத் என இரண்டாகப் பார்க்கின்றனர். தன் மனதை வெல்வது எனும் பொருளில் பெரிய ஜிகாத்தும், வெளிப்புற போர்கள் மற்றும் கலவரத்தை சைதானுடனான போர் என சிறிய ஜிகாத்தையும் வகைப்படுத்துகின்றனர்.

பஹாய்

தொகு

இவர்கள் ஜிகாத் எழுத்து வடிவத்திலிருந்து நீக்கப்பட்ட ஒன்று எனக் கருதுகின்றனர்.[1]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. Chapter: “Jihad” in the Arabic Language, Louay Fatoohi, Jihad in the Qur’an : The Truth from the Source, Third edition, Luna Plena Publishing, UK. p.12-13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-906342-06-7
 2. Abou El Fadl, Khaled (January 23, 2007). The Great Theft: Wrestling Islam from the Extremists. HarperOne. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0061189036
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-15. பார்க்கப்பட்ட நாள் 2016-04-12.
 4. In 23 Quranic verses according to this search search of searchtruth.com
 5. In 164 verse according to Yoel Natan. Natan, Yoel. "164 Jihad Verses in the Koran". answering-Islam.org. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
 6. 6.0 6.1 Morgan, Diane (2010). Essential Islam: A Comprehensive Guide to Belief and Practice. ABC-CLIO. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-36025-1. பார்க்கப்பட்ட நாள் 5 January 2011.
 7. Merriam-Webster's Encyclopedia of World Religions. (1999). Ed. Wendy Doniger. Merriam-Webster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-044-2. , Jihad, p. 571
 8. Medieval Islamic Civilization: An Encyclopedia. (2005). Ed. Josef W. Meri. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-96690-6. , Jihad, p. 419
 9. "Jihad and the Islamic Law of War". Archived from the original on 2013-08-18. பார்க்கப்பட்ட நாள் 2015-01-09.
 10. Rudolph Peters, Islam and Colonialism. The doctrine of Jihad in Modern History (Mouton Publishers, 1979), p. 118
 11. SHAYKH MUHAMMAD HISHAM KABBANI (CHAIRMAN, ISLAMIC SUPREME COUNCIL OF AMERICA) AND SHAYKH SERAJ HENDRICKS (HEAD MUFTI, CAPE TOWN, SOUTH AFRICA), Jihad: A Misunderstood Concept from Islam. Released by Islamic Supreme council of America.
 12. Morgan, Diane (2010). Essential Islam: A Comprehensive Guide to Belief and Practice. ABC-CLIO. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-36025-1. Retrieved January 5, 2011
 13. "Jihad". பார்க்கப்பட்ட நாள் 20 February 2012.
 14. DeLong-Bas (2010), p. 3
 15. Lloyd Steffen, Lloyd (2007). Holy War, Just War: Exploring the Moral Meaning of Religious Violence. Rowman& Littlefield. p. 221.
 16. cf., e.g., BBC news article Libya's Gaddafi urges 'holy war' against Switzerland
 17. Rudolph Peters, Jihad in Medieval and Modern Islam (Brill, 1977), p. 3
 18. Patricia Crone, Medieval Islamic Political Thought (Edinburgh University Press, 2005), p. 363
 19. Chapter: “Jihad” in the Arabic Language, Louay Fatoohi, Jihad in the Qur’an : The Truth from the Source, Third edition, Luna Plena Publishing, UK
 20. Bernard Lewis, The Political Language of Islam (University of Chicago Press, 1988), p. 72. Cf. William M. Watt, Islamic Conceptions of the Holy War in: Thomas P. Murphy, The Holy War (Ohio State University Press, 1974), p. 143
 21. dead link Ghamidi, Javed (2001). "The Islamic Law of Jihad". Mizan. Dar ul-Ishraq. இணையக் கணினி நூலக மைய எண் 52901690.
 22. John Esposito(2005), Islam: The Straight Path, pp.93
 23. Cowah, J. Milton (ed.). Hans Wehr, A Dictionary of Modern Written Arabic (3rd ed.). Beirut: Librairie Du Liban. p. 142.
 24. Rudolph Peters, Jihād (The Oxford Encyclopedia of the Islamic World); Oxfordislamicstudies.. Retrieved February 17, 2008.
 25. Jonathon P. Berkey, The Formation of Islam; Cambridge University Press: Cambridge, 2003
 26. For a listing of all appearances in the Qur'an of jihad and related words, see Muhammad Fu'ad 'Abd al-Baqi, Al-Mu'jam al-Mufahras li-Alfaz al-Qur'an al-Karim (Cairo: Matabi' ash-Sha'b, 1278), pp. 182–83; and Hanna E. Kassis, A Concordance of the Qur'an (Berkeley: University of California Press, 1983), pp. 587–88.
 27. "Oxford Islamic Studies Online". Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
 28. Al-Dawoody, Ahmed (2011). The Islamic Law of War: Justifications and Regulations. Palgrave Macmillan. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780230111608
 29. Al-Dawoody, Ahmed (2011). The Islamic Law of War: Justifications and Regulations. Palgrave Macmillan. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780230111608
 30. http://corpus.quran.com/wordbyword.jsp
 31. குரான் 9:79
 32. குரான் 29:6
 33. குரான் 29:69
 34. http://corpus.quran.com/wordbyword.jsp
 35. குரான் 9:79
 36. குரான் 29:6
 37. குரான் 29:69
 38. http://corpus.quran.com/wordbyword.jsp
 39. குரான் 29:8
 40. குரான் 31:15
 41. http://corpus.quran.com/wordbyword.jsp
 42. குரான் 29:8
 43. குரான் 31:15
 44. http://corpus.quran.com/wordbyword.jsp
 45. http://corpus.quran.com/wordbyword.jsp
 46. Jihad, BBC, August 3, 2009
 47. குரான் 22:39-40
 48. குரான் 4:75
 49. குரான் 9:13
 50. குரான் 22:40
 51. Jihad, BBC, August 3, 2009
 52. குரான் 2:256
 53. குரான் 9:6
 54. குரான் 109:6
 55. குரான் 2:190
 56. குரான் 9:12-13
 57. குரான் 4:90
 58. குரான் 8:61
 59. குரான் 2:192
 60. புகாரி, முஸ்லிம், நஸயி, அஹ்மத், அபூதாவுத்
 61. அறிவிப்பவர்: ஃபுழாலத் பின் உபைத், நூல்: திர்மிதி 1546
 62. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர், நூல்: புகாரி 3004
 63. புகாரி 5972
 64. அறிவிப்பவர்: ஆயிஷா, நூல்: புகாரி 1861
 65. புகாரி 1520
 66. புகாரி 2784
 67. அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப், நூல்: அஹ்மத் 18074
 68. அபூதாவூத் 3781
 69. நஸயீ 4138
 70. Ibn Nuhaas, Book of Jihad, Translated by Nuur Yamani, p. 107
 71. "Ahmadiyya Community, Westminster Hall Debate". TheyWorkForYou.com. பார்க்கப்பட்ட நாள் 28 October 2010.
 72. Dr. Aisha Y. Musa, Towards a Qur’anically-Based Articulation of the Concept of “Just War” பரணிடப்பட்டது 2013-04-26 at the வந்தவழி இயந்திரம், International Institute of Islamic Thought, Retrieved May 5, 2013
 73. Caner Taslaman, THE RHETORIC OF "TERROR" AND THE RHETORIC OF "JIHAD" பரணிடப்பட்டது 2013-07-03 at the வந்தவழி இயந்திரம், canertaslaman.com, Retrieved April 28, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிகாத்&oldid=3665624" இலிருந்து மீள்விக்கப்பட்டது