டைபர் நதிக்கரை புனித மரியா கோவில்

டைபர் நதிக்கரை புனித மரியா கோவில் (Basilica of Our Lady in Trastevere) என்பது அன்னை மரியாவின் வணக்கத்திற்கு உரோமை நகரில் கட்டப்பட்ட மிகப் பழமையான ஒரு வழிபாட்டிடம் ஆகும்.[1] இக்கோவிலின் (இத்தாலியம்: Basilica di Santa Maria in Trastevere) தரை வரைவும் சுவர்க் கட்டடமும் கி.பி. சுமார் 350ஆம் ஆண்டைச் சார்ந்தவை. இக்கோவிலில்தான் திருப்பலி ஒரு பொதுநிகழ்வாக முதன்முறையாக நடந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

டைபர் நதிக்கரை புனித மரியா கோவில்
Basilica of Our Lady's in Trastevere
Basilica di Santa Maria in Trastevere (இத்தாலியம்)
டைபர் நதிக்கரை புனித மரியா கோவிலின் முகப்புத் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இத்தாலி உரோமை, இத்தாலியா
புவியியல் ஆள்கூறுகள்41°53′22″N 12°28′11″E / 41.88944°N 12.46972°E / 41.88944; 12.46972
சமயம்கத்தோலிக்க திருச்சபை
நிலைஇளம் பெருங்கோவில்
தலைமையோசப் க்ளெம்ப்

வரலாறு

தொகு
 
கோவில் மணிக்கூண்டின் மேல்பகுதியில் அன்னை மரியாவும் குழந்தை இயேசுவும்.

கோவிலின் உள்ளே இருக்கின்ற ஆயர் இருக்கையின் மேல் உள்ள எழுத்துப்படி, இக்கோவில்தான் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் கோவில். இதற்கு மாறாக, சிலர் மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் கோவில் புனித மரியா பெருங்கோவில் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், இக்கோவில் உரோமையில் அமைந்துள்ள மிகப்பழமையான கோவில்களுள் ஒன்று என்பதில் ஐயமில்லை. ஓய்வுபெற்ற போர்வீரர்களின் புகலிடமாக இருந்த "சிறப்பு உணவகம்" (இலத்தீன்: Taberna meritoria என்னும் விடுதி இவ்விடத்தில் பண்டைய உரோமையர் காலத்தில் இருந்தது. அந்த விடுதி இருந்த இடத்தில் கிறித்தவர்கள் கி.பி. 220 அளவில் ஒரு "வீட்டுக் கோவில் சபையை" (house-church) உருவாக்கினார்கள். அதற்கு முதலாம் கலிஸ்டஸ் (217-222) என்னும் திருத்தந்தை உதவினார்.

மேற்கூறிய உணவகத்தின் உடைமையாளர்கள் முதலில் அதைக் கிறித்தவர்களின் பயன்பாட்டுக்குக் கொடுக்க முன்வரவில்லை. அப்போது உரோமை மன்னர் செப்திமுஸ் செவேருஸ் என்பவர் தலையிட்டு, கிறித்தவ வழிபாட்டுக்காக அந்த உணவகத்தைக் கொடுத்தார். "எந்த முறையில் வழிபடுபவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு அந்த இடத்தை ஒதுக்குவது முறையே" என்று மன்னர் கூறினார்.

திருத்தந்தை கலிஸ்டஸ் பெயருக்கு உரியதாக இருந்த அக்கிறித்தவக் கோவிலை கிபி. 340இல் முதலாம் ஜூலியுஸ் என்னும் திருத்தந்தை விரித்து, பெரிய அளவில் கிபி 340இல் கட்டினார். அவருடைய ஆதரவின் கீழ் விரிவாக்கப்பட்ட கோவிலுக்கு "ஜூலியுஸ் கோவில்" (titulus Iulii) என்னும் பெயர் வழங்கலாயிற்று.

கோவில் சீரமைப்பு வேலை

தொகு
 
மரியா கோவிலின் பரந்த வெளி முற்றம். 17ஆம் நூற்றாண்டு இறுதித் தோற்றம்.

மரியா கோவிலில் முதல் சீரமைப்புப்பணி 5ஆம் நூற்றாண்டிலும் 8ஆம் நூற்றாண்டிலும் நடந்தது.

திருத்தந்தை இரண்டாம் இன்னசெண்ட் காலத்தில் (1140-1143) மரியா கோவில் அதன் பழைய அடித்தளத்தின் மீதே மீண்டும் புதிதாகக்கட்டப்பட்டது. இரண்டாம் அனகிலேத்துஸ் என்பவர் 1130-1138 காலத்தில் எதிர்-திருத்தந்தையாக இருந்தார். அவர் இறந்ததும் அவரது உடல் டைபர் நதிக்கரை புனித மரியா கோவிலில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.

திருத்தந்தை இரண்டாம் இன்னசெண்டுக்கு எதிராக எழுந்த எதிர்-திருத்தந்தையின் உடல் மரியா கோவிலில் அடக்கம் செய்யப்பட்டதை அவர் விரும்பவிலை. எனவே அக்கல்லறையையும் அதோடு கோவிலையும் இன்னசெண்டு பிரித்தெடுத்தார். அனிசேட்டஸ் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் தமக்கென்று ஒரு கல்லறை எழுப்பினார் திருத்தந்தை இன்னசெண்ட்.

மரியா கோவிலின் உள்ளே எழுகின்ற அயோனிய தூண்கள் (ionic capitals)[2] மிகுந்த கலைவேலைப்பாடு கொண்டவை. அத்தூண்கள் மன்னர் கரக்கால்லாவின் பொதுக்குளியகம் (Baths of Caracalla)[3] அல்லது, ஜனிக்குலம் குன்றிலிருந்த ஐசிஸ் (Isis)[4] கடவுளின் கோவிலிலிருந்து வந்திருக்க வேண்டும். அத்தூண்களில் செதுக்கப்பட்டிருந்த முகங்கள் ஐசிஸ், செரப்பிஸ், ஹார்ப்பொக்ராட்டெஸ் ஆகிய தெய்வங்களுக்குரியது என்று 19ஆம் நூற்றாண்டில் கலை வரலாற்றாசிரியர்கள் கண்டுபிடித்தனர். இத்தகவலை அறிந்த திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் பிற சமய தெய்வங்களின் முகங்களைத் தூணிலிருந்து அகற்றிவிட 1870இல் ஆணை பிறப்பித்தார்.

இன்றைய கோவிலின் முன்னோடி

தொகு

இன்றைய மரியா கோவிலின் முன்னோடியான கோவில் நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது. அந்தப் பழைய கோவிலோ அதற்கு முன்னரே இருந்த "உடைமைக் கோவிலின்" (titular church) மேல் எழுந்தது. இந்த மரியா கோவில் 222இல் இறந்த திருத்தந்தை கலிஸ்துசுக்கு "உடைமையாக" இருந்தது என்று "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) கூறுகிறது. அத்திருத்தந்தையின் மீபொருள்கள் இக்கோவிலின் பீடத்துக்கு அடியில் வைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன.

 
மரியா கோவில் வெளிப்பகுதி கற்பதிகை ஓவியம். அன்னையும் குழந்தை இயேசுவும் விளக்கேந்திய 10 பெண்கள் சூழ அரியணையில் வீற்றிருத்தல். காலம்: 12ஆம் நூற்றாண்டு.

கோவிலின் உள்பகுதி

தொகு
 
மரியா கோவிலின் உட்புறத் தூயகப் பகுதிக் கூரையில் அமைந்துள்ள கற்பதிகை ஓவியம். காலம்: 13ஆம் நூற்றாண்டு.
 
வானதூதர் மரியாவுக்கு வாழ்த்து வழங்குகிறார். கற்பதிகை ஓவியம். ஓவியர்: பியேத்ரோ கவால்லீனி. ஆண்டு: 1291.
  • பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மரியா கோவிலில் இருந்த நடுநீளப் பகுதி அப்படியே இன்றுவரை உள்ளது. அந்தக் கட்டட வரைவு அதற்கு முற்பட்ட காலத்திலேயே இருந்த முந்தைய வரைவுகளால் நிர்ணயிக்கப்பட்டது.
  • நடுநீளப் பகுதியை ஒட்டி, வலதுபுறமும் இடதுபுறமும் உள்ள பகுதிகளைப் பிரிக்கின்ற 22 கற்தூண்கள் அழகுவாய்ந்தவை. அவை அயோனிய மற்றும் கொரிந்திய பாணியில் அமைந்தவை. இத்தூண்கள் மன்னர் காரக்கால்லாவின் பொதுக்குளியகத்திலிருந்து வந்திருக்கலாம்.
 
அவிலா தெரேசா சிறுகோவில். கலைஞர்: அந்தோனியோ கெரார்டி. காலம்: 1638-1702. டைபர் நதிக்கரை புனித மரியா கோவில், உரோமை.
  • மைய நுழைவுவாயிலின் நிலையும் அவ்வாறே வந்திருக்கலாம்.
  • கோவிலின் உள்ளே பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல அழகிய கற்பதிகை ஓவியங்களுள்ளன:
  • பியேத்ரோ கவால்லீனி (1291) வரைந்த "அன்னை மரியாவின் வாழ்வு நிகழ்ச்சிகள்" தொடர் கற்பதிகை ஓவியங்களாகப் பீடத்தின் மேலமைந்த உட்கூரைப் பகுதியை நோக்கிச் செல்கின்றன. பீடத்துக்கு மேலே உட்கூரையில் "மரியா அரசியாக முடிசூட்டப்படுகின்ற" அழகிய கற்பதிகை ஓவியம் உள்ளது.
  • "மரியாவின் விண்ணேற்பு" என்னும் ஓவியத்தை தொமேனிக்கீனி ('Domenichini) என்பவர் கோவில் நடு உள்கூரையில் எண்கோண இடத்தில் வரைந்தார்.
  • கோவிலினுள்ளே இடது புறம் ஐந்தாவது சிற்றாலயம் அந்தோனியோ கெரார்டி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது "அவிலா சிறுகோவில்" (Avila Chapel) என்று அழைக்கப்படுகிறது.

பரோக் கலைப்பாணியில் புதுமையான முறையில் அமைந்தது இச்சிறுகோவில். அதன் கீழ்ப்பகுதி சிறிது இருளடைந்து உள்ளது. மேலே குவிமாடம் எழுகின்றது. குவிமாடத்தின் நடு உச்சியில் ஒளி பாயும் கண் போன்ற துளை உள்ளது. அதிலிருந்து நான்கு வானதூதர் வெளிப்படுவது தெரிகிறது. அவர்கள் ஒரு கோவில் கட்டடத்தைத் தாங்கிநிற்கின்றனர். குவிமாடம் முழுவதும் ஒளியால் நிறைந்துள்ளது. ஒளி வருகின்ற சாளரங்கள் பார்வையாளரின் கண்களுக்கு மறைந்துள்ளன. இவ்வாறு புதுமையான முறையில் அமைந்துள்ளது இச்சிறுகோவில்.

கோவிலில் பாதுகாக்கப்படும் மீபொருள்கள்

தொகு

மரியா கோவிலில் புனித அப்போலோனியா என்பவரின் தலைப்பகுதியின் மீபொருள் பாதுகாக்கப்படுகிறது.

இயேசு சிலுவையில் தொங்கியபோது அவருக்கு கடற்காளானில் புளித்த திராட்சை இரசத்தைத் தோய்த்துக் குடிக்கக் கொடுத்தார்கள் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் உள்ளது (காண்க: மத்தேயு 27:48; மாற்கு 15:36; யோவான் 19:29). அந்தக் கடற்காளனின் ஒரு பகுதி மீபொருளாக மரியா கோவிலில் பாதுகாக்கப்படுகிறது.

மேலும், மரியா கோவிலில் திருத்தந்தை முதலாம் கலிஸ்டஸ், இரண்டாம் அனகிலேத்துஸ், திருத்தந்தை முதலாம் கலிஸ்டஸ் ஆகியோரின் மீபொருள்கள் பாதுகாக்கப்படுகின்றன.

மரியா கோவிலின் வெளிப்புறம்

தொகு
 
மரியா கோவில் முற்றத்தில் நீரூற்று.
  • உரோமானிய கலைப்பாணியில் (romanesque) அமைந்த மணிக்கூண்டு 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அம்மணிக்கூண்டின் உச்சப் பகுதியில் ஒரு குழியிடத்தில் அன்னை மரியா தம் குழந்தை இயேசுவைக் கைகளில் தாங்கியிருப்பது போல செய்யப்பட்ட ஒரு கற்பதிகை ஓவியம் உள்ளது.
  • கோவிலின் முன்பக்க உயர் மண்டபத்தில் அமைந்துள்ள கற்பதிகை ஓவியங்கள் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகின்றன. நடுவில் அன்னை மரியா ஓர் அரியணையில் அமர்ந்திருக்கின்றார். அவரது மடியில் குழந்தை இயேசு பால்குடித்துக்கொண்டிருக்கிறார். இருபுறமும் பக்கத்துக்கு ஐவராக பத்துப் பெண்கள் கையில் விளக்கு ஏந்தி நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களது கண்கள் மரியாவையும் இயேசுவையும் நோக்கித் திரும்பியிருக்கின்றன.
  • கோவிலின் முகப்பு கார்லோ ஃபோந்தானா என்னும் கலைஞரால் 1702இல் சீரமைக்கப்பட்டது.
  • எண்கோண வடிவில் அமைந்த நீரூற்றுக் கட்டடம் கோவிலின் முற்றத்தில் உள்ளது. 1472ஆம் ஆண்டு வரையப்பட்ட படத்தில் அந்த ஊற்றும் உள்ளது. அதையும் கார்லோ ஃபோந்தானா சீரமைத்தார்.[5]

ஆதாரங்கள்

தொகு
  1. டைபர் நதிக்கரை புனித மரியா கோவில்
  2. அயோனிய தூண்கள்
  3. கரக்கால்லாவின் பொதுக்குளியகம்
  4. ஐசிஸ் கடவுள்
  5. "நீரூற்று". Archived from the original on 2009-10-25. பார்க்கப்பட்ட நாள் 2009-10-25.
  • Chris Nyborg, "Santa Maria in Trastevere" 2002

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Santa Maria in Trastevere
என்பதில் ஊடகங்கள் உள்ளன.