தஞ்சாவூர் பாலசரஸ்வதி
தஞ்சாவூர் பாலசரஸ்வதி (T. Balasaraswati, மே 13, 1918 - பெப்ரவரி 9, 1984) தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நாட்டிய ஆசிரியரும் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர்.
தஞ்சாவூர் பாலசரஸ்வதி Tanjore Balasaraswati | |
---|---|
பிறப்பு | சென்னை, இந்தியா | மே 13, 1918
இறப்பு | பெப்ரவரி 9, 1984 சென்னை, இந்தியா | (அகவை 65)
பணி | பரதநாட்டியக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1925-1984 |
பெற்றோர் | கோவிந்தராஜுலு, ஐயம்மாள் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபாலசரசுவதியின் முன்னோர் தஞ்சை மராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், நடனக் கலைஞருமாக இருந்தவர். புகழ் பெற்ற வீணை தனம்மாள் இவரது பாட்டியின் சகோதரியாவார். தாயார் ஐயம்மாள் ஒரு சிறந்த பாடகி. தந்தை கோவிந்தராஜுலுவும் ஓர் இசைக் கலைஞர் ஆவார்.[1]
பாலசரஸ்வதி, தனது மூன்று வயதிலேயே இவர்களது குடும்ப நண்பரும், பிரபலமான பரதநாட்டியக் கலைஞருமான மயிலாப்பூர் கௌரி அம்மாளிடம் நடனம் கற்க ஆரம்பித்தார். பின்னர் கந்தப்பா நட்டுவனாரிடம் நடனம் கற்க ஒழுங்கு செய்தவர் பிரபலமான வாய்ப்பாட்டுக் கலைஞர் அரியக்குடி இராமானுச ஐயங்கார் ஆவார். கந்தப்பா நட்டுவனாரின் தந்தை நெல்லையப்பா நட்டுவனார் பந்தனைநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்று தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வரின் மருகர் ஆவார்.கந்தப்பா நட்டுவனாரும் அவர்கள் பேணிவந்த நடனக்கலை மரபிலேயே அக்கலையை பாலசரசுவதிக்குப் புகட்டினார்.[1]
ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்றது.[1] சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஐரோப்பார, கிழக்காசியா, வட அமேரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பரத நாட்டியத்தை அரங்கேற்றினார். வெஸ்லின் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக் கழகக் கல்லூரி, வாசிங்டன் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஒரே இந்தியப் பெண் இவர்தான். அன்னா கிசல் காஃப் என்னும் நடன விமர்சகர் இவரை உலகின் மிகச் சிறந்த நடனக் கலைஞர் என பாராட்டியுள்ளார்.[2] அமெரிக்காவின் ஈடிணையற்ற நடன பொக்கிஷங்கள்: முதல் நூறு பேர்’ என்ற புகழ்பெற்ற பட்டியலில் சேர்க்கப்பட்ட மேற்குலகைச் சேராத ஒரே கலைஞர் பாலசரஸ்வதிதான்.
வழிவழியாகக் கையளிக்கப்பட்ட பரதக் கலையை சாஸ்திரத்துக்கு உள்ளே அடைக்கும் முயற்சியை தொடர்ந்து பாலசரஸ்தி எதிர்த்தார், மேலும் இந்தக் கலையை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டுமே உரியதாக ஆக்கிய பிராமணிய ஆக்கிரமிப்பை எதிர்த்ததால், அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கான அங்கீகாரங்கள் பெரிதாக இந்தியாவில் அளிக்கப்படவில்லை அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் புறக்கணிப்பானது தொடர்கிறது. என்று பாலசரஸ்தியின் மருமகனும் மிருதங்கக் கலைஞருமான டக்ளஸ் எம். நைட் குறிப்பிட்டுள்ளார்.[3]
பாலசரஸ்வதி வரலாற்றை ‘பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்’ என்ற நூலை டக்ளஸ் எம். நைட் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அரவிந்தன் மொழிபெயர்ப்பில் இந்நூல் தமிழிலும் 2017ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.
விருதுகள்
தொகு- சங்கீத நாடக அகாதமி விருது, 1955[4]
- சங்கீத கலாநிதி விருது, 1973 ; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது, 1975[5] ; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை
- சங்கீத கலாசிகாமணி விருது, 1981, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
- பத்ம பூசன் விருது
- பத்ம விபூசண் விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 சிவசாமி, வி., பரதக்கலை (1988), யாழ்ப்பாணம், இலங்கை
- ↑ முனைவர் ம. செ. இரபிசிங் (அக்டோபர் 3 2017). "நடனத்தின் ஆணிவேராக திகழும் ஆடற்கலை ஆசான்கள்". தி இந்து தமிழ்.
- ↑ ஆசை (13 மே 2018). "பாலாவின் பெயர் மறைக்கப்படுவதில் அரசியல் இருக்கிறது!: டக்ளஸ் எம்.நைட் நேர்காணல்". செவ்வி. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 மே 2018.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ "தமிழ் இசைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்". Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2014-09-06.
வெளியிணைப்புக்கள்
தொகு- 20/21 ஆம் நூற்றாண்டுகளின் 100 தமிழர்கள்: டி. பாலசரஸ்வதி (ஆங்கில மொழியில்)
- பாலசரஸ்வதி - பரதநாட்டியக் கலைஞர் (ஆங்கில மொழியில்)
- Fire and Grace பரணிடப்பட்டது 2007-05-03 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Balasaraswati – the queen of abhinaya (ஆங்கில மொழியில்)
- Bala (1976) - Satyajit Ray Documentary on T. Balasaraswati