தண்டபாணி சுவாமிகள்

தமிழ்ப் புலவர்

தண்டபாணி சுவாமிகள் (நவம்பர் 28, 1839 - சூலை 5, 1898) தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர் ஆவார்.[1] தமிழுக்கும், தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர். இவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், திருப்புகழ்ச் சுவாமிகள், முருகதாச சுவாமிகள்[2] என்றும் அழைக்கப்பட்டவர். இவரது இலக்கண நூல்கள் முன்னோரின் கருத்துக்களோடு முரண்பட்டவை அல்ல. எனினும் பிற இலக்கண ஆசிரியர்களைப் போல முன்னோர் இலக்கண நூற்பாக்களை இவர் எடுத்தாளவில்லை. தமிழ் மொழியின் வளர்ச்சி நிலையைக் கருத்தில் கொண்டு இலக்கணம் பாடியுள்ளார். 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ’ஆங்கிலியர் அந்தாதி’ பாடியவர்.[3]

இளமை

தொகு

தமிழ்நாட்டில், திருநெல்வேலியில் நெற்கட்டும் செவ்வல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில்நாயகம் பிள்ளை - பேச்சிமுத்து ஆகியோருக்கு 1839 இல் பிறந்தார். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம்.[4] தந்தையின் நண்பரான சீதாராம நாயுடு என்பவரால் இவருக்கு முருகன் மீது பக்தி உருவாயிற்று. ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமை பெற்றார். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார். அந்த வயதில், "பூமி காத்தாள்" என்ற அம்மனுக்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்ற காரணத்தைக் கூறி, பாடுதற்கு அரிய வெண்பாவில் அதைப் பாடினார். கவிதை பொழியும் இவருடைய ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராம நாயுடு இவருக்கு "ஓயா மாரி" என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். தனது பதின்மூன்று வயதில் ’வண்ணம்’ என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததால் வண்ணச்சரபம் என்றும், முருகன் புகழ் பாடியதால் இவர் "முருகதாசர்" என்றும் அழைக்கப்பட்டார். இவர் முருகனின் திருப்புகழை விரும்பிப் பாடிக்கொண்டே இருந்ததால் "திருப்புகழ்ச் சுவாமிகள்" என்றும் சிறப்பிக்கப்பட்டார். அரையில் கௌபீனமும், கையில் தண்டமும் கொண்டிருந்ததால் தண்டபாணி சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.[5]

அவிநாசி முதல் வேளூர் வரையிலான 218 ஊர்களுக்கும், கேரளம் மற்றும் இலங்கைக்கும் இவர் சென்றுள்ளார்.

இயற்றிய நூல்கள்

தொகு

தண்டபாணி சுவாமிகள் ‘சர்வதாரணி’ எனும் எழுத்தாணி மூலம் பனையோலையில் படைத்த பாடல்கள் பலவாகும். இவர் பாடிய தமிழிசைப் பாடல்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவை. அவற்றில் பாதி பாடல்களுக்கு மேல் இவராலேயே கிழித்தெறியப்பட்டன. எஞ்சியுள்ளவை 50 ஆயிரம் பாடல்கள்.

  • குருபர தத்துவம் என்ற பெயரில் தன் வரலாற்று நூலை எழுதினார். இது 1,240 விருத்தப்பாக்களால் ஆனது.
  • புலவர் புராணம் என்ற பெயரில் 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாகும்.
  • அருணகிரிநாதசுவாமிகள் புராணம் என்ற பெயரில் அருணகிரிநாதர் வரலாற்றை எழுதினார்.
  • வைணவப் பெரியார்களான பெரியாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள் முதலியவர்களை உயர்வாகப் பாடியுள்ளார். பழந்தமிழ்ப் புலவர்கள் மற்றும் ஒளவையாரையும், திருவள்ளுவரையும் பலவாறு போற்றியுள்ளார்.

தமிழைத் துதிக்கும் பின்வரும் நூல்களை இயற்றினார்:

  • முத்தமிழ்ப் பாமாலை
  • தமிழ்த் துதிப் பதிகம்
  • தமிழலங்காரம்

நூல்கள்

தொகு
  • திருவரங்கத் திருவாயிரம்
  • சடகோபர் சதகத்தந்தாதி
  • பெருமாளந்தாதி

தோத்திரப் பாடல்கள்

தொகு
  • அறுசமயக் கடவுள்கட்கு ஆயிரம் ஆயிரமாக ஆறாயிரம் பாடல்கள்

வரலாற்று நூல்கள்

தொகு

இலக்கண நூல்கள்

தொகு

நாடக நூல்

தொகு
  • முசுகுந்த நாடகம்

நீதி நூல்

தொகு
  • மனுநெறித் திருநூல்
  • நான்குநூல்

சமூக நூல்

தொகு
  • ஆங்கிலியர் அந்தாதி
  • கௌமார முறைமை
  • தியானாநுபூதி
  • சத்திய வாகசம்(உரைநடை நூல்)

தமிழில் வழிபாடு செய்யவேண்டும் என்னும் கருத்துடைய இவர் தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனின் அது பேய் எனப் பாடுகிறார். [6]

தமிழிசை வளர்ச்சியில் இவருக்குத் தனி இடம் உண்டு. தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்துப் பாடப்பட்டுவந்த காலத்தில் இவர் தமிழில் வண்ணம் பாடியும், வண்ணத்தியல்பு என்னும் இலக்கணநூல் யாத்தும் தமிழிசைக்கு உயிரூட்டினார்.[7]

சொல்லாய்வு

தொகு

தமிழ்ச்சொல் "புகல்" என்பது இந்தியில் "போல்" என்று மருவிவிட்டது என்றார். அதை, "புகல் எனும் சொல்லினைப் போல் எனச் சொல்லுதல் போல்இகல் இந்துத்தானியும் பலசொல செந்தமிழிற் கொண்டு இயம்புகின்றார்" என்று பாடினார்.[7]

இலக்கண ஆய்வு

தொகு

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற தமிழின் ஐந்திலக்கணத்தை விட புலமைக்கு இலக்கணம் கூறும் ஆறாம் இலக்கணத்தை இவர் கற்பித்தார். சிற்றிலக்கியங்களில் முன்னிலை நாட்டம், மஞ்சரி, ஆயிரம், முறைமை, விஜயம், நூல், சூத்திரம் என்ற புதுமை இலக்கிய வகைகளை வழங்கினார்.[7]

இவர் பழகிய பெரியோர்கள்

தொகு

புரட்சிக் கருத்துக்கள்

தொகு

இல்லறத்தை மேன்மையுடையது என்றார். பெண்மையை உயர்த்திக் கூறி, பெண் உரிமைக்குக் குரல் கொடுத்த இவர், பெண்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண் கல்வி மறுப்பவர்களை, "நாரியரும் கற்கை நலம் என்று உரைக்குநரைப் பாரில் இகழ்வார் பலர்" என்று கூறி மனம் வருந்தினார். கணவனை இழந்த பெண் மறுமணம் புரிந்து கொள்ளலாம் என்ற புரட்சிகரமான கருத்தைக் கூறியுள்ளார் தண்டபாணி சுவாமிகள்.[7]

தண்டபாணி சுவாமிகள், இம்மண்ணை ஆங்கிலேயர் ஆண்டு வருவதைக் கண்டு, அந்நியர் ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்து,

"நிரைபடப் பசு அனந்தம் கொன்று தினும்
நீசர் குடை நிழலில் வெம்பித்
தரைமகள் அழும் துயர் சகிக்கிலேன்" என்று பாடினார்.[7]

இறுதிக் காலம்

தொகு

இறுதிக் காலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு உணவுகளை உட்கொண்டார். கடும் தவத்தால் இவரது உடலில் வெப்பம் மிகுதியாகி, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு 1898 ஆம் ஆண்டு இறந்தார்.[7]

உசாத்துணைகளும் குறிப்புகளும்

தொகு
  1. "தண்டபாணி சுவாமிகள் 10".
  2. 72 தமிழ்க் கவிஞர்களின் சரிதம் தந்த முருகதாஸ் சுவாமிகள்
  3. ஆங்கிலியர் அந்தாதி. முத்தமிழ் அருள்நெறி மன்றம். 1985.
  4. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வரலாறு. சரவணம்பட்டி, கோவை.: சிரவை கௌமார சபை வெளியீடு. 1998.
  5. விடுதலை வேள்வியில் தமிழகம். மனிதம் பதிப்பகம். 2012. pp. 117–122.
  6. தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனில் அஃது உணர், அலகையின் தாழ்வு எனல்
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்[தொடர்பிழந்த இணைப்பு], முனைவர் மலையமான், தினமணி இதழ், ஆகஸ்டு 30, 2009
  • புலவர் இரா இளங்குமரன் எழுதிய ;இலக்கண வரலாறு' என்னும் நூலை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட முனைவர் ச.வே. சுப்பிரமணியன் குறிப்புரை தமிழ் இலக்கண நூல்கள் 2007, பக்கம் 724, நூல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டபாணி_சுவாமிகள்&oldid=4094780" இலிருந்து மீள்விக்கப்பட்டது