தமிழகத்தில் பெருங்கற்காலம்

தமிழகத்தில் பெருங்கற்காலம் கி.மு. 1000 - 300 வரை நிலவியது.[1] இக்காலத்திலேயே விவசாயமும் நில ஆக்கிரமிப்புகளும் போர்களும் பெரிதும் நடந்தன. அதனாற்றான் நடுகல் வழிபாடும் தோன்றியது.

சங்க இலக்கியத்தில் பெருங்கற்கால சான்றுகள் தொகு

நடுகல் வழிபாடு தொகு

முதன்மைக் கட்டுரை - நடுகல்

சங்க இலக்கியத்தில் நடுகல் வழிபாடு தொடர்பாக அதிகமான செய்யுள்கள் காணப்படுகின்றன. மழவர் மணி கட்டிய கடிகை வேலைக் கையில் வைத்துக்கொண்டு ஆனிரைகளை மீட்டு வருவர். அப்போது வில்லெய்து வீழ்த்தப்பட்டால் அந்த மறவனுக்கு நடுகல் நிறுத்தி வழிபடுவர். முகத்திலும் மார்பிலும் விழுப்புண்களைப் பெற்று, வீரத்தோடு முன்னின்று, பொருதுபட்ட வீரர்க்கு, அவர் தம் பீடும் பெயரும் எழுதிய நடுகற்களை நிறுவி, பூவும் புகையும் காட்டி, சிறப்பு செய்தல் வழக்கம். இது நடுகல் வணக்கம் எனப்பட்டது. அக்காலத்து நிறுவப்பெற்று மண்ணில் புதையுண்ட வீர நடுகற்கள் இக்காலத்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் வெளிக்கொணரப்பட்டு நம்மிடையே நிலவுகின்றன.

பண்டைய தமிழர்கள் வெட்சி கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டு வந்தால் உண்டாட்டு என்பதை நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்டக் கற்களைப் பற்றியதாகவே உள்ளன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டுக்கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படவிலலை. நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதனைப் பண்டைய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. "கல்லே பரவினல்லது நெல்லுகுத்தப் பரவும் கடவுளும் இலவே "[1]என்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும்

தொழில்கள் தொகு

பெருங்கற்காலத்தில் உலோக ஆபரணங்கள் செய்தல், மணிகள் தயாரித்தல், செம்பு, இரும்பு, வெள்ளி, தங்கம் போன்றவற்றை கொண்டு ஆபரணங்களைச் செய்துள்ளதைப் பார்க்கும் போது இப்பல்வகை வினைஞர் கூட்டத்தை ஆதரிக்க வேளாண்மை செய்பவர்களும் அரசர்களும் பெருமளவு ஆதரவாக இருந்ததாகவே தெரிகிறது. இக்காலத்தில் மட்பாண்டத் தொழில் உச்சநிலை அடைந்து காணப்படுகிறது. ஈமத்தாழிகளைச் செய்யும் மட்பாண்டங்களும் மக்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் மட்பாண்டங்களும் இக்காலத்தில் தயரிக்கப்பட்டன.

நம்பிக்கைகள் தொகு

பெருங்கற்கால மக்கள் வேல் (ஒருதலைச் சூலம்), சூல வழிபாட்டையும் மேற்கொண்டனர். இவை பிற்பாடு முருக வழிபாடாகவும் சிவன் துர்க்கை வழிபாடாகவும் மாற்றப்பட்டது. சக்தி வழிபாடு இக்காலத்தில் நிலவியதற்கு ஆதிச்சநல்லார் அகழாய்வில் கிடைத்த பெண் தெய்வ சிலையும், வேட்டைக்காரன் மலை பெண் தெய்வ ஓவியத்தையும் எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

பரவல் தொகு

தென்பாண்டி நாடு தொகு

ஆதிச்சநல்லூர்
 
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பொ.மு. 20 ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க இரும்பு கலன்கள்

தமிழகத்தின் மிகப்பெரிய பெருங்கற்காலத் தளம் ஆதிச்சநல்லூர். இங்கே பெருங்கற்கால ஈமத்தாழிகள் மற்றும் பானை ஓடுகள் பரந்த அளவில் அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஓடைகளிலும் பெருங்கற்காலப் பரவல்

தென்காசி நகராட்சியிலுள்ள சிற்றாற்றின் துணையாறான அழுதகன்னி ஆற்றுப்படுகையில் கற்காலச் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நில அடையாளக் கற்குவைகளும் அவர்கள் பயன்படுத்திய பெருங்கற்கால ஆயுதங்கள், இடைக்கற்கால ஆயுதங்கள் போன்றவை 1980களில் தமிழக தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டன.[2] இதை வைத்து பெருங்கற்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் சிறிய ஓடைகளைச் சுற்றியும் கூட தங்கள் நாகரிகத்தைப் பரவ விட்டிருந்தனர் எனக் கொள்ளலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. T.S SUBRAMANIAN. "Adichanallur-Past excavations". © 2005 - 2012 Archaeologyindia.com. All rights reserved. archaeologyindia.com. p. 1. Archived from the original on 2013-01-02. பார்க்கப்பட்ட நாள் 04 சூலை 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. இந்திய தொல்லியல் துறை. "இந்திய தொல்லியல் துறை வெளியீடு 1988-89". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 17 மே 2012. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original on 2012-05-08. பார்க்கப்பட்ட நாள் 2012-07-03.{{cite web}}: CS1 maint: unfit URL (link)