ஐக்கூ

(தமிழ் ஹைக்கூ கவிதைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐக்கூ, கைக்கூ அல்லது ஹைக்கூ (Haiku) மூன்று வரிகளில்[1] முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம் ஆகும்.[2] ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது. இது ஜப்பானின் மிகப்புகழ் பெற்ற கவிதை வடிவமாக இருந்து வருகிறது. விவரணக்கவிஞர்களும் ஏனையோரும் இதனை ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பின்பற்றியுள்ளனர்.

ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில்தான் (கி.பி 1603 முதல் 1863 வரை) சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஐக்கூ கவிதை தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது.

ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் டோக்கியோ காலத்தில் (கி.பி 1863 க்கு அடுத்தது) ஐக்கூ கவிதை பரவலாக அறியப்பட்டு பிரான்சிய மொழி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் பரவி தமிழிலும் பரவியது.

ஐக்கூ பெயர்க் காரணம்

தொகு

ஆரம்ப காலத்தில் ஐக்கூ கவிதை ஒக்கூ (hokku, ஃகொக்கூ) என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஐகை என்று திரிந்து ஐக்கூ என்றாயிற்று. ஐக்கூ என்றால் அணுத்தூசி போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர். இக்கவிதையின் பெயரை ஹொக்கு என்று பாரதியார் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.ஐ+கூ=ஐக்கூ;ஐ=கடுகு;கூ=உலகம் கடுகு போல் சிறிய கவிதை வடிவில் உலகளாவிய கருத்துக்களைச் செறிவுடன் செறித்து வைக்கச் செப்பு போல் இடந்தரும் கவிதை வடிவே ஐக்கூ என்றும் பொருள் கூறுவர்.[சான்று தேவை]

தமிழில் ஐக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.

ஐக்கூ கவிதையின் அளவு வரையறை

தொகு

ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில் 7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக் கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சிலபிள் (syllable) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் இதனை ஓன் (音, on)) அல்லது ஓஞ்சி (音字, onji) அழைக்கிறார்கள். இதன் பொருள் ஓர் ஒலித்துகள் (அல்லது அசை). ஆங்கில மொழியியல் துறைக் கலைச்சொல்லில் இதனை மொரே (morae) என்கின்றனர்.

ஜப்பானிய மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும். ஜப்பானிய மொழியின் ஒஞ்சி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் பொருந்தி வரும் விதி!)

தொடக்கக் காலத்தில் இந்த 5, 7, 5 என்ற அசை அமைப்பு முறையாக கடைப் பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5, 7, 5 என்ற அளவுகோலை விட்டுவிட்டார்கள். தமிழ் அசை மரபின் 5, 7, 5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த ஐக்கூ கவிதைகளை ஓவியக் கவிஞர் அமுதபாரதி வெளியிட்டார்.

ஐக்கூ கவிதையின் வளர்ச்சி

தொகு

புத்த மதத்தின் கிளைப் பிரிவான சென் (Zen) தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல ஊடகமாக ஐக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது. ஜப்பானியக் கவிஞர்கள் மோரிடேகே (1473–1549), மற்றும் சோகன் (1465–1553) ஆகியோர் ஐக்கூ கவிதையின் முன்னோடிகள் என்றழைக்கப் படுகிறார்கள். ஐக்கூ முன்னோடிகளை அடுத்து மட்சுவோ பாஸோ (1465–1553), யோசா பூசன் (1716–1784), இசுசா (1763–1827), சிகி (1867–1902) ஆகிய ஐக்கூ நால்வர்கள் தோன்றிப் புகழ் ஈட்டினர்.

தமிழ் ஹைக்கூ கவிதைகள்

தொகு

தமிழ் ஐக்கூ அல்லது தமிழ் ஹைக்கூ எனப்படுவது தமிழ் மொழியில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளைக் குறிக்கும்.

ஹைக்கூக் கவிஞர்கள்:தமிழில் 1980களில் ஹைக்கூக் கவிதைகள் பல எழுதப்பட்டன.அமுதபாரதியின் புள்ளிப் பூக்கள், ஐக்கூ அந்தாதி,அறிவுமதியின் புல்லின் நுனியில் பனித்துளி, ஈரோடு தமிழன்பனின் சூரியப் பிறைகள்,கழனியூரனின் நிரந்தர மின்னல்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன.

மரபுக் கவிதைகளைப் போன்று உறுதியான நெறிமுறைகள் இல்லாததாலும், சிறிய எண்ணிக்கையிலான சொற்களைப் பயன்படுத்தியே எழுத முடியும் என்பதாலும் இக்காலத் தமிழர்கள், குறிப்பாக இணையத்திலும் வார இதழ்களிலும், ஹைக்கூ எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

உலக அளவில் ஹைக்கூ கவிதைகள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் சப்பானில் ஹைக்கூ தந்தை பாஷோவின் ஹைக்கூ கவிதையே ஜென் தத்துவத்தில் எழுதப்பட்ட முதல் ஹைக்கூ என்று கூறலாம். இந்திய மொழிகளில் பலவாக ஹைக்கூ கவிதைகளை பெருவாரியான கவிஞர்கள் எழுதிவந்தாலும் தமிழில் ஹைக்கூ கவிதைகள் முத்திரை பதிக்கின்றன. பல்வேறு பரிமாணங்களில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் பண்பாடு, கலாச்சாரம், மனிதநேயம், இயற்கை என எழுதப்பட்டு வருகிறது. பல தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலம் உட்பட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் தான் ஹைக்கூ கவிதை நூல்கள் அதிகம் வந்துள்ளன[சான்று தேவை]. 1984 முதல் 2012 வரை சுமார் 450 நூல்கள் வந்துள்ளன. அதே போல் ஹைக்கூவின் கிளை வடிவங்களான சென்ரியு, லிமரைக்கூ. ஹைபுன், லிமர்புன், லிமர்சென்றியு போன்றவைகளும் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் ஐக்கூ எடுத்துக்காட்டுகள்

தொகு

தீப்பட்டெரிந்தது,
வீழு மலரின் அமைதியென்னே!
- பாரதியார் 1916-ஆம் ஆண்டு வெளியிட்ட மொழிபெயர்ப்பு. சப்பானிய மூலம்: இயோனே நொகுச்சி.[3]

பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்
- நா. முத்துக்குமார்

மேற்கோள்கள்

தொகு
  1. Hiraga, Masako K. (1999). "Rough Sea and the Milky Way: 'Blending' in a Haiku Text," in Computation for Metaphors, Analogy, and Agents, ed. Chrystopher L. Nehaniv. Berlin: Springer. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3540659594.
  2. Lanoue, David G. Issa, Cup-of-tea Poems: Selected Haiku of Kobayashi Issa, Asian Humanities
  3. தூரன், பெ. பாரதி தமிழ். pp. 222–223. பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஐக்கூ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கூ&oldid=4130768" இலிருந்து மீள்விக்கப்பட்டது