தர்ம பிக்சம்

இந்திய அரசியல்வாதி

பொம்மகானி தர்ம பிக்சம் (Bommagani Dharma Bhiksham) (15 பிப்ரவரி 1922  – 26 மார்ச் 2011), இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரான இவர், 10 வது மக்களவை உறுப்பினராகவும், இந்தியாவின் 11 வது மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். மேலும் இவர் மூன்று முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் ஆந்திராவின் நல்கொண்டா தொகுதியை இந்திய நாடாளுமன்றத்திலும் ஆந்திராவின் சட்டமன்றத்திலும் பிரதிநிதித்துவப்படுத்தினார் . சூர்யபேட்டை தொகுதியிலிருந்து ஐதராபாத் மாநில சட்டமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். நிசாம் ஆட்சியின் போது தெலங்காணா விவசாயிகள் போராட்டத்தின் போது ஒரு முக்கிய போராளியாக இருந்தார். இவர் நன்கு அறியப்பட்ட தொழிற்சங்கவாதி, அகில இந்திய கள்ளு இறக்குபவர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்.இந்திய அரசு இவருக்கு 'தர்ம பத்ரா' என்ற விருது வழங்கி கௌரவித்தது. இவரது சகோதரர் வேங்கடையாவும் ஒரு சுதந்திர போராட்ட வீரர் ஆவார்.

பொம்மகானி தர்ம பிக்சம்
பிறப்பு(1922-02-15)15 பெப்ரவரி 1922
சூர்யபேட்டை, ஐதராபாத் இராச்சியம், பிரிட்டிசு இந்தியா
(தற்போது தெலங்காணா, இந்தியாa)
இறப்பு26 மார்ச்சு 2011(2011-03-26) (அகவை 89)
பணிசுதந்திரப் போராளி, பொதுவுடைமைவாதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
பெற்றோர்முத்திலிங்கம் (தந்தை)
கோபம்மா (தாயார்)
பிள்ளைகள்பொம்மகானி பிரபாகர் (தத்தெடுக்கக்ப்பட்ட மகன்)
உறவினர்கள்வேன்கடையா (சகோதரர்)

சுயசரிதை

தொகு

இவர் 1922 பிப்ரவரி 15 ஆம் தேதி ஐதராபாத் மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தின் சூர்யபேட்டை என்ற இடத்தில் கோபம்மா மற்றும் முத்திலிங்கம் என்ற ஒரு கள்ளு இறக்கும் தம்பதியருக்கு பிறந்தார். இவர் தெலுங்கு, உருது, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நல்ல சொற்பொழிவாளராக இருந்தார். சுதந்திர போராட்டத்தின் போது மேசன், ரயத், கோல்கொண்டா போன்ற செய்தித்தாள்களுக்கு பங்களித்த பத்திரிகையாளராகவும் இருந்தார். மாணவப் பருவத்தில், இவர் வளைதடிப் பந்தாட்ட அணித் தலைவராக இருந்தார். இவர் ஆந்திர உயர் நீதிமன்ற வழக்கறிஞரான தனது வளர்ப்பு மகன் பொம்மகானி பிரபாகருடன் வசித்து வந்தார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர், தனது பள்ளி நாட்களில் பொதுவுடைமை சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டதால், 1942 இல் இந்திய பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். முன்னதாக, ஒரு மாணவர் தலைவராக இருந்த இவர், அப்போதைய நிசாமின் முடிசூட்டு விழாவின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை புறக்கணித்தார்..[1] ஒரு மாணவராக இருந்தபோதும், இவர் சூர்யபேட்டையில் ஒரு மாணவர் விடுதியை நடத்தி வந்தார். இது மாணவர்களுக்கு தேசபக்தியைத் தூண்டுவதற்கும், அந்த நாட்களின் சமூக தீமைகளுக்கு எதிராகப் போராடுவதற்கும் ஒரு பயிற்சி மையமாக இருந்தது. முன்னாள் அமைச்சர் வி.புருஷோத்தம் ரெட்டி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மல்லு வெங்கட்ட நரசிம்ம ரெட்டி, திரைப்பட நடிகர் பிரபாகர் ரெட்டி போன்ற பலர் இவரது விடுதியின் தயாரிப்புகள். 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உள்ளூரில் சக்தி வாய்ந்த நபர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டங்களை நடத்தியது. குறிப்பாக தெலங்காணா, திரிபுரா மற்றும் கேரளாவில் தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க தயங்கியது. ஐதராபாத் நிசாமுக்கு எதிராக தெலங்காணாவில் நடந்த கிளர்ச்சியில் இவர் ஒரு தீவிர உறுப்பினராக இருந்தார். அதற்காக இவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலும் அடைக்கப்பட்டார்.[1] ஆந்திர மகாசபாவின் தீவிர உறுப்பினராக இருந்த இவர், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சார்பாக கால்நடையாகவே சென்று பல நிலழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கினார். அந்த நேரத்தில் இவர் ஒரு அர்சுணன் புத்தக பந்தர் என்ற இரகசிய நூலகத்தை நடத்தி வந்தார். இந்நுலகத்தில், தடைசெய்யப்பட்ட புரட்சிகர இலக்கியங்களை ஊக்குவித்து விநியோகித்தார்.

சிறை வாழ்க்கை

தொகு

முன்னதாக, இவர் சில காலம் ஆரிய சமாஜ ஆர்வலராக இருந்தார். அப்போதைய ஆட்சியாளரையும் இவரைப் பின்பற்றுபவர்களை வலுக்கட்டாயமாக மாற்றுவதை எதிர்த்தார். பின்னர் ஆந்திர மகா சபையில் சேர்ந்தார். நிஜாம் மற்றும் ரசாக்கர் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்பாடு செய்த அவர், பின்னர் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மிகவும் ஆபத்தான அரசியல் கைதியாக பெயரிடப்பட்டார், மேலும் நல்கொண்டா, செஞ்சல்குடா, அவுரங்காபாத், ஜல்னா போன்ற பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார்; அந்த நேரத்தில் அவர் தனியாக இருண்ட அறையில் அடைக்கப்பட்டார். சிறை கைதிகளின் ஒருங்கிணைப்பாளாராக இருந்த இவர் கைதிகளுக்கு உரிமை கோரி வேலைநிறுத்தத்தையும் ஏற்பாடு செய்தார்.

சட்டமனற உறுப்பினர்

தொகு

1952 ஆம் ஆண்டில், ஐதராபாத் மாநில சட்டமன்றத்திற்கான முதல் பொதுத் தேர்தலில், இவருக்கு அதிக பெரும்பான்மை கிடைத்தது. 1957 ஆம் ஆண்டில், இவர் நக்ரேகல் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 இல், நல்கொண்டாவிலிருந்து ஆந்திர மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தொடர்ச்சியாக மூன்று வெவ்வேறு தொகுதிகளில் இருந்து மூன்று வெற்றிகளைப் பெற்றார். மேலும், ஐதராபாத் மாநிலம் (1952), ஆந்திரா (1957 & 1962) ஆகிய இரண்டு மாநில சட்டமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிலரில் இவரும் ஒருவர். 10 மற்றும் 11 வது மக்களவையில் நல்கொண்டா நாடாளுமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி 1991 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [2][3]

1991 ஆம் ஆண்டில், தென்னிந்தியாவிலிருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1996 ஆம் ஆண்டில் இவர் 480 போட்டியாளர்களுக்கிடையே 76,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். இந்த பெரும் எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் இவருக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதிக புளூரைடு பாதிப்புக்குள்ளான நல்கொண்டா மாவட்டத்தை அரசாங்கம் புறக்கணித்தது குறித்து நாட்டின் கவனத்தை ஈர்க்க ஜல சாதன சமிதி என்ற அமைப்பு அழைத்ததினால் போட்டியிட்டனர். இந்த தேர்தல் இந்தியாவில் தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டு வந்தது. நல்கொண்டா நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் இவர் மட்டுமே.

பணிகள்

தொகு

இவர் ஒரு தொழிற்சங்கவாதி ஆவார். நாகார்ஜுனா சாகர் அணைத் திட்டத்தை நிர்மாணிக்கும் போது, சம்பந்தப்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களை ஒழுங்கமைத்து, ஒரு லட்சம் தொழிலாளர்களுடன் அவர்களின் சிறந்த வாழ்வாதாரத்திற்காக ஒரு வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்தார். உணவுவிடுதி தொழிலாளர்கள் போன்ற பல அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இவர் தொழிற்சங்கங்களை ஏற்பாடு செய்தார். இவர் கள்ளு இறக்கும் சமூகத்தின் மேம்பாட்டிற்கு நன்கு அறியப்பட்டவர். 50 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கள்ளு இறக்கும் சமூகத்தின் முதன்மையான மற்றும் முதல் தொழிற்சங்கமாக விளங்கும் ஏ.பி. கீதா பனிவரல சங்கத்தின் கீழ் இவர் அவர்களை ஒருங்கிணைத்தார். கள்ளு இறக்கும் தொழிலை விஞ்ஞானரீதியாக மேம்படுத்தவும், சர்க்கரை, வெல்லம், சாக்லேட் மற்றும் குளிர் பானங்கள் போன்றவற்றை தயாரிப்பதன் மூலம் கிராமப்புறத் தொழிலாக வளர்க்கவும் இவர் பாடுபட்டார். ஆசியப் பனை மரங்களிலிருந்து எடுக்கும் கள்ளுவிற்கு உரிய தொகை அவர்கள் அடைவதற்கான கருவியாக இவர் இருந்தார். கள்ளு இறக்குபர்களுக்கான கூட்டுறவு சங்கங்களை உருவாக்க இவர் உதவினார். இதற்காக அப்போதைய முதலமைச்சர் எ. சா. ராஜசேகர் ரெட்டி அவர்களால் நூற்றாண்டுகால கூட்டுறவு இயக்கத்தின் போது சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது

இறப்பு

தொகு

இவர், ஐதராபாத்தில் உள்ள காமினேனி மருத்துவமனையில் இருதயக் கோளாறு காரணமாக 26 மார்ச் 2011 அன்று இறந்தார்.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்ம_பிக்சம்&oldid=3480695" இலிருந்து மீள்விக்கப்பட்டது