தலப்பாகட்டி பிரியாணி

தமிழ்நாட்டின் அசைவ உணவகம்

தலப்பாகட்டி பிரியாணி என்பது தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு அசைவ பிரியாணி உணவு விடுதி. இந்த அசைவ உணவு விடுதியின் பெயர் தலப்பாக்கட்டி நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் என்பதாகும். இது திண்டுக்கல் பகுதிகளில் தலப்பாக்கட்டி நாயுடு கடை என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாறு

தொகு

1952 ஆம் ஆண்டு பி. நாகசாமி நாயுடு என்பவர் “ஆனந்த விலாஸ்” பிரியாணி, சப்பாத்தி ஹோட்டல் என்ற பெயரில் திண்டுக்கல்லில் ஒரு உணவகத்தைத் தொடங்கினார். அவருடைய அனுபவமின்மையால் உணவகம் பொருளாதார இழப்புக்குள்ளானது. இதனால் உணவகம் மூடப்பட்டது. உணவகத் தொழில் தோல்வியடைந்ததற்கான காரணத்தை ஆராய்ந்தார். அவரே அடிக்கடி பிரியாணி செய்து பார்த்தார். இதில் அவருக்கு திருப்தி ஏற்பட மீண்டும் 1957 ஆம் ஆண்டு அதே பெயரில் உணவகத்தைத் திறந்தார். சமையல் பணியை அவரே செய்தார். அவரே சமைத்து, ருசி பார்த்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தார். ஒரு கட்டத்தில் பிரியாணியின் சுவை வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற அந்த நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார். இவர் சமையல் பணியில் இருக்கும் போது, அவருடைய வழுக்கைத் தலையை மறைப்பதற்காக தலைப்பாகை கட்டிக் கொள்வார். அதே தலைப்பாகையுடன் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுவார். எப்போதும் தலைப்பாகையுடன் இருந்த அவரை தலப்பாகட்டு நாயுடு என்று அழைக்கத் தொடங்கினர். இன்று அதுவே தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணி கடை என்று அழைக்கப்பட்டு, பின்னர் தலப்பா கட்டி பிரியாணி கடையாகி விட்டது. [1]

தலப்பாகட்டி நாகசாமி நாயுடு 1978 ஆம் ஆண்டு காலமாகி விட்ட நிலையில் அவரது மகனான என். தனபாலன் மற்றும் பேரனான டி. நாகசாமி ஆகியவர்கள் “தலப்பா கட்டி நாயுடு” பிரியாணி ஹோட்டல் என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள். தற்போது திண்டுக்கல் தவிர கோயம்புத்தூர், வத்தலக்குண்டு மற்றும் சென்னை ஆகிய இடங்களிலும் கிளைகள் உள்ளன. சென்னையில் இந்த உணவகம் பிரபலம் அடைந்துள்ளது. இந்தக் கடைக்கு கும்பக்கரை தங்கய்யா படம் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது.

பெயர்ப் பிரச்சனை

தொகு

திண்டுக்கல் தலப்பாகட்டி நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் மற்றும் தலப்பாகட்டு பிரியாணி மற்றும் பாஸ்ட்ஃபுட் ஹோட்டல் (சென்னை ராவுத்தர் தலப்பா கட்டு பிரியாணி) ஆகியோரிடையே தலப்பாகட்டி பிரியாணி எனும் பெயரைப் பயன்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் இருந்து வந்தது. இந்த வழக்கில் இருவருக்கிடையிலும் சமாதானம் ஏற்பட்டு, சென்னை ராவுத்தர் தலப்பா கட்டு பிரியாணி அமைப்பினரால், தலப்பாகட்டு பிரியாணி என்ற பெயரைத் தாங்கள் பயன்படுத்தவில்லை என்றும், சென்னை மற்றும் மதுரையில் உள்ள 29 பிரியாணி மற்றும் விரைவு உணகங்களிலும் உள்ள தலப்பாகட்டு என்ற பெயர் மற்றும் வார்த்தைகளை எடுத்துவிடுவதாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதைத் திண்டுக்கல் தலப்பாகட்டி நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல் அமைப்பினர் ஏற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் இந்த வழக்கு முடித்து வைக்கப் பெற்றது.[2] இதனால் தலப்பா கட்டி பிரியாணிக்கான பெயர்ப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. வளர்தொழில் (சூலை 22- ஆகஸ்ட் 4, 1996) இதழில் பக்கம்: 64, 65 வெளியான “தலப்பாகட்டி நாயுடு ஓட்டல் கிளை பரப்புகிறது - ஒரு தோல்விக்குப் பின்வந்த வெற்றி!” எனும் தலைப்பிலான தலப்பாகட்டி நாகசாமி நாயுடு மகன் என். தனபால் பேட்டிக் கட்டுரை.
  2. தலப்பாகட்டு பிரியாணி பெயர்ப் பலகை 60 நாள்களுக்குள் நீக்கப்படும் (தினமணி செய்தி)

வெளி இணைப்பு

தொகு

"தலப்பாக்கட்டு பிரியாணி' பெயர் யாருக்கு சொந்தம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலப்பாகட்டி_பிரியாணி&oldid=1491987" இலிருந்து மீள்விக்கப்பட்டது