தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம்

தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம் இந்தியத் தலைநகர் புது தில்லியில் உள்ள வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளுக்கான ஓர் விளையாட்டரங்கமாகும். இது முதலில் 25,000 இருக்கைகள் உடைய அரங்கமாக இருந்தது. இது புகழ்வாய்ந்த முன்னாள் இந்திய வளைதடிப்பந்தாட்ட வீரர் தியான் சந்த் பெயரைக் கொண்டுள்ளது. 1951ஆம் ஆண்டு துவக்கப்பட்ட முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த விளையாட்டரங்கத்தில் நிகழ்ந்தன.

தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம்
தேசிய விளையாட்டரங்கம்
2010ல் ஒரு போட்டி நாளில் விளையாட்டரங்கம்
முழுமையான பெயர்மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம்
முன்னாள் பெயர்கள்இர்வின் அம்ஃபிதியேட்டர்
தேசிய விளையாட்டரங்கம்
அமைவிடம்புது தில்லி, இந்தியா
ஆட்கூற்றுகள்28°36′45″N 77°14′14″E / 28.61250°N 77.23722°E / 28.61250; 77.23722
உரிமையாளர்இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
இயக்குநர்இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
இருக்கை எண்ணிக்கைசமீபத்திய புதுப்பித்தல் பணிகளுக்குப் பிறகு 16,200 [1]
Construction
திறக்கப்பட்டது1933
மீள்கட்டுமானம்2010
குடியிருப்போர்
இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி
டெல்லி வேவ் ரைடர்ஸ் (2013–தற்போது)
டெல்லி விஸார்ட்ஸ் (2011)

வரலாறு தொகு

இந்த விளையாட்டரங்கம் 1933 ஆம் ஆண்டு இர்வின் அம்ஃபிதியேட்டர் என்ற பெயரில் பன்னோக்கு அரங்கமாக கட்டப்பட்டது. அந்தோனி எசு, டிமெல்லோ இதனை வடிவமைத்தார். 1951 ஆசியப் போட்டிகளின்போது இது தேசிய விளையாட்டரங்கம் என்று மறுபெயரிடப்பட்டது. 2002ஆம் ஆண்டு தியான் சந்த் பெயரொட்டு சேர்க்கப்பட்டது.

பெரும் சீரமைப்புகள் தொகு

2010 ஆண்கள் வளைதடிப்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகளுக்கு இந்த அரங்கமே நிகழிடமாக இருந்தது.[2] 2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் வளைதடிப்போட்டிகளுக்கு இதுவே நிகழிடமாகும். வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பை விளையாட்டுகளுக்கு முன்னர் பெரும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ. 266 கோடிகள் செலவில் மண்ணாலான பார்வையாளர் படிகள் இடிக்கப்பட்டு செவ்வக புதிய அரங்கமைப்பு கட்டப்பட்டுள்ளது. 2010 பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான முதல் விளையாட்டரங்கமாக இது 24 சனவரி 2010 அன்று திறக்கப்பட்டது.[3]

விளையாட்டரங்க வசதிகள் தொகு

37 ஏக்கர் பரப்பளவிலான வளாகத்தில் 17,500 சதுர மீட்டர் பரவியுள்ளது. பன்னாட்டு தரத்திலான இரு விளையாட்டுக் களங்களும் மற்றுமோர் பயிற்சிக் களமுமாக மூன்று செயற்கைதரைக் களங்கள் கொண்டுள்ளது.

புதிய நெகிழ்புல் பற்றை நீர் தெளிப்பான்களுடன் இடப்பட்டுள்ளது. முதன்மைக் களத்தில் 16,200 பார்வையாளர்கள் அமரக்கூடும். இரண்டாவது களத்தில் நிரந்தரமாக 900 இருக்கைகள், தேவைப்பட்டால் 1600 இருக்கைகள் சேர்க்கக்கூடிய வாய்ப்புடன், உள்ளன.இரு போட்டிக்களங்களும் மடக்கக்கூடிய 2200 இலக்சு வெளிச்சம் கொடுக்கக்கூடிய ஒளிவெள்ள கோபுரங்களுடன் அமைந்துள்ளன. இது உயர்வரையறை தொலைக்காட்சி ஒளிபரப்பு நடத்த ஏதுவாக அமையும்.

விளையாட்டரங்கில் தற்போது நடப்பில் உள்ள ஒலி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு நவீன வெற்றிப்புள்ளிகள் காட்டிகளும் பார்வையாளர்கள் வசதிக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்களுக்கான உடை மாற்றும் அறைகள், ஓய்வெடுக்கும் அறைகள் மற்றும் முக்கியப் பிரமுகர் அறைகள் மிகச் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

முழு அரங்கமும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளர்களுக்கு வசதியான மின்னேற்றிகள், தடங்கல் இல்லா வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டரங்கத்தின் கிழக்கே 50 மீ நீச்சல்குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு