திருப்பதி வெங்கடாசலபதி கோயில்
திருப்பதி வெங்கடாசலபதி கோயில் (Venkateswara Temple) அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் மூலவர் வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பத்மாவதி அம்மையார்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 13°41′00″N 79°20′50″E / 13.683250°N 79.347194°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, வேங்கடாத்ரி |
பெயர்: | திருப்பதி வெங்கடாசலபதி கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருமலை |
மாவட்டம்: | திருப்பதி |
மாநிலம்: | ஆந்திரா |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வெங்கடாசலபதி |
உற்சவர்: | மலையப்பசாமி, கல்யாண வெங்கடேஸ்வரர் |
தாயார்: | பத்மாவதி |
தல விருட்சம்: | புளிய மரம் |
தீர்த்தம்: | சுவாமி புஷ்கரிணி |
ஆகமம்: | வைகானசம் |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென்னிந்திய கட்டடக்கலை |
வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் கொண்டதாகும். இத்தலத்தில் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.[1] முடி செலுத்துவது பக்தர்களின் வேண்டுதல்களில் பிரதானமாக இருக்கிறது. இத்தலம் இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட கோயிலாக உள்ளது.[2]
சொல்லிலக்கணம்
தொகுதிருப்பதி - திரு + பதி - பதியென்பது கடவுளைக் குறிக்கும் சொல்லாகும்.
தலவரலாறு
தொகுபிருகு போன்ற முனிவர்கள் யாகம் செய்தார்கள். அந்த யாகத்தின் பலனை சாந்தமான மூர்த்தியொருவருக்கே அளிக்க வேண்டுமென எண்ணி, மும்மூர்த்திகளில் திருமாலின் இருப்பிடத்திற்கு சென்றார். பிருகு முனிவரின் வருகையை அறியாது உறங்கிக் கொண்டிருந்த திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார். அதனால் திருமாலின் இதயத்தில் இருந்த திருமகள் கோபம் கொண்டு அவரிடமிருந்து சென்றார்.
திருமால் பூமியில் திருமகளைத் தேடி வேங்கட மலையில் ஓரிடத்தில் தவமிருந்தார். அவரைச் சுற்றி புற்று உருவானது. அப்புற்றில் தவமிருந்த திருமாலின் மீது புற்றினை உடைக்க வீசப்பட்ட கோடாறியால் திருமாலின் தலையிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. திருமால் தவம் களைந்து வகுளாதேவி ஆசிரமம் சென்றார். சீனிவாசன் என பெயரிட்டு அங்கு வகுளாதேவி அன்புடன் உபசரித்தார்.
அவர்களின் ஆசிரமம் அருகே இருக்கும் சந்திரிகிரி நாட்டினை ஆகாசராஜன் என்பவர் ஆண்டு வந்தார். அவருடைய மகளான பத்மாவதிக்கு சீனிவாசனை மணம் செய்விக்க வகுளாதேவி சென்றார். இருவருடைய திருமணமும் மிகச் சிறப்பாக நடந்தேற சீனிவாசன், குபேரனிடம் கடன் வாங்கினார்.[3]
வரலாறு
தொகுதிருப்பதி ஏழுமலையான் கோயில் முதலில் தமிழகத்தை தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன் என்பவனால் கட்டப்பட்டது. பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில் இருந்தே உள்ளதாக பல்லவ, சோழ, பாண்டிய, சாளுக்கிய மற்றும் விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.[4][5]
திருப்பதி திருமலை தேவஸ்தானம்
தொகுஇக்கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் செய்கிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இக்கோயிலின் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தினை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932ல் மதராஸ் அரசாங்கத்தில் திருமலை இருந்தது. அப்போது 1933ல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்டது.[6]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் மூன்று பிரகாரங்களையும், ராஜ கோபுரத்தினையும் கொண்டது. இக்கோயிலில் உள்ள ரங்க மண்டபம் அன்னியர்களின் தாக்குதலில் இருந்து ரங்கநாதர் கோயிலை காக்க ரங்க நாதரை திருப்பதியில் கொண்டுவந்ததாக கூறப்படும் தொன்மத்தோடு தொடர்புடையது. திருப்பதி கோயிலின் முதல் பிரகாரம் சம்பங்கி பிரதட்சணம் எனப்படுகிறது. இதில் கிருஷ்ணதேவராயர் மண்டபம், பிரதிம மண்டபம், ரங்கராயர் மண்டபம், திருமலைராயர் மண்டபம் ,துவஸ்தம்ப மண்டபம், நரசிம்மர் மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன. விமான பிரதட்சண பிரகாரம் என்பது இரண்டாவது பிரகாரமாகும். இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம் மற்றும் கர்ப்பகிரஹம் ஆகியவை உள்ளன. மூன்றாவது பிரகாரம் வைகுண்ட பிரகாரம் ஆகும். இது ஆண்டுக்கொரு முறை வைகுண்ட ஏகாதேசியின் பொழுது திறக்கப்படுகிறது.[7]
மூலவர்
தொகுமூலவரான வேங்கடாசலபதி நின்ற கோலத்தில் இருப்பவர். இவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், வேங்கடநாதன், வெங்கடாஜலபதி, வேங்கடேசன், வேங்கடேசுவரன், கோவிந்தன், சீனிவாசன், பாலாஜி என பல பெயர்களில் அழைக்கின்றனர். கருவறை மண்டபத்தில் இருக்கின்ற ஒரு படி குலசேகர ஆழ்வார் படியென அழைக்கப்படுகிறது.
தாயார்
தொகுபிரகாரத் தெய்வங்கள்
தொகுமூன்றாவது பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் நான்கு கரங்களுடன், சங்கு சக்கரம் கொண்டு திருமாலினைப் போன்று காணப்படுகிறார். இவர் சிவாலயங்களில் இருக்கும் சண்டீசுவரரைப் போன்றவர். திருமாலுக்கு சமர்ப்பிக்கப்படும் மாலைகள், பிரசாதங்கள் விஷ்வக்சேனருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. [8]
மண்டபங்கள்
தொகு- கிருஷ்ண தேவராயர் மண்டபம்
- ரங்கராயர் மண்டபம்
- திருமலை ராயர் மண்டபம்
- ஜனா மண்டபம்
- துவஸ்தம்ப மண்டபம்
- திருமாமணி மண்டபம்
- உண்டியல் மண்டபம் - இம்மண்டபம் பரகாமணி மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மண்டபத்தில் கோயிலின் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வுண்டியல் காவாளம் எனப்படும் பித்தளை அண்டாவினைச் சுற்றி துணி கட்டி வைக்கப்படுகிறது.
நடைபாதை
தொகுதிருப்பதி வெங்கடாசலபதி கோயில் நடைபாதை சிறப்பானதாகும். இப்பாதை கீழ்திருப்பதியிருந்து தொடங்குகிறது. இப்பாதையின் இருபுறமும் ஆழ்வார்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அலிபிரி பகுதியில் கருடாழ்வாரும், கபில தீர்ததமும் அமைந்துள்ளன. இதனைக் கடந்து செல்கையில் ஆஞ்சநேயர் சிலையும், முழங்கால் முடிச்சு, காளிகோபுரம் போன்ற இடங்களும் காணப்படுகின்றன. மற்றும் வாரிமெட்டு என்ற பகுதியிலிருந்தும் மலைகோவிலுக்கு வரலாம். இதுவே ஆதியில் பிரதான வழியாக இருந்துள்ளது. நடைபாதையில் வருகின்ற பக்தர்களுக்கு தர்ம தரிசனமும், தங்குமிடமும் இலவசமாக திருப்பதி தேவஸ்தானம் அளிக்கிறது.
சேவைகள்
தொகு- சுப்ரபாத சேவை - திருப்பதி வெங்கடாசலபதியை துயில் எழுப்ப சுப்ரபாத சேவை தினமும் செய்யப்படுகிறது. இந்நிகழ்வின் பொழுது தொட்டிலில் முதல் நாள் இரவு கிடத்திச் சென்ற ஸ்ரீநிவாஸ மூர்த்தியை மூலவருக்கு அருகே வைத்து அபிசேகங்களும், ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.
விழாக்கள்
தொகு- பிரம்மோற்சவம் (பிரம்மோற்சவம் ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவினை பிரம்மா முதன் முதலாக நடத்தினார் என்பதால் பிரம்மோற்சவம் என்று பெயர் பெற்றது).
- வசந்த உற்சவம்.
- பத்மாவதி பரிநயம்.
- அபிதேயக அபிஷேகம்.
- புஷ்ப பல்லக்கு.
மங்களாசனம்
தொகுஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வாரால் இத்தலம் மங்களாசனம் செய்யப்பட்டுள்ளது.
படக்காட்சியகம்
தொகு-
கோயில் முகப்பு வாயில்
-
கோயில் புனித குளம்
-
திருமலை கோபுரம்
-
மொகல்லா மிட்டா கோபுரம்
-
கல்யாண வெங்கடேசுவரர் கோயில், திருப்பதி
-
அலமேலு மங்காபுர கோயிலின் புனித குளம், திருப்பதி
நூல்கள்
தொகுகல்வெட்டுகள்
தொகுஇக்கோவிலில் 1180 கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் பல்லவர், சோழர், பாண்டியர், சாளுக்கியர், விஜயநகர மன்னர்கள்,கிருஷ்ண தேவராயர் காலத்தியவைகளாக உள்ளன. இக்கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ் கல்வெட்டுகளாகும். தெலுங்கு , கன்னட மொழிகளில் பல்வேறு காலகட்ட கல்வெட்டுகள் உள்ளன.[9]
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=28795 திருமலை திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு! மார்ச் 12,2014
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=28778 தல சிறப்பு! மார்ச் 12,2014 தினமலர் கோயில்கள்
- ↑ திருப்பதி வரலாறு! மார்ச் 11,2014
- ↑ "இந்து மதம் எங்கே போகிறது? - வாசகர்களின் அணிந்துரை". www.periyarbooks.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-28.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ இலக்கியத்தில் வேங்கட வேலவன், (1988) பக்கம் 5-50
- ↑ "திருப்பதி வெங்கடாசலபதி கோயில்- மாலைமலர்". Archived from the original on 2015-01-11. பார்க்கப்பட்ட நாள் 2015-04-08.
- ↑ "திருப்பதி கோயில்- மாலைமலர்". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2015-04-08.
- ↑ பிரகார தெய்வங்கள்! மார்ச் 12,2014 தினமலர் கோயில்கள்
- ↑ அதிசயங்களை நிகழ்த்தும் ஏழுமலையான்! மார்ச் 12,2014