திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில்
திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் (அந்தகேசம்) என்று அறியப்படும் இக்கோயில், திருப்புட்குழியிலுள்ள சிவன் கோயிலாகும். மேலும், இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப் படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]
காஞ்சிபுரம் அந்தகேசம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் அந்தகேசம். |
அமைவிடம் | |
ஊர்: | திருப்புட்குழி |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மணிகண்டீஸ்வரர். |
தாயார்: | திரிபுரசுந்தரி. |
இறைவர், வழிபட்டோர்
தொகு- இறைவர்: மணிகண்டீஸ்வரர்.
- இறைவியார்: திரிபுரசுந்தரி.
- வழிபட்டோர்: அந்தகாசுரன்.
தல வரலாறு
தொகுஅந்தகாசுரனை வென்று அவனைத் தன் சூலாயுதத்தில் கோர்த்துக் கொண்டு வயிரவர் நடனமாடிக் கொண்டிருந்தார். தன் பிழையுணர்ந்து தெளிவுபெற்ற அந்தகாசுரன் வயிரவரை வேண்டித் துதிக்க, மகிழ்ந்த வயிரவர், அவ்வசுரனை சூலத்தினின்றும் விடுவித்து சிவகங்கையில் மூழ்குவித்தார். இதனால் பாசம் நீங்கப்பெற்று பேறு பெற்றான் என்பது வரலாறாகும்.[2]
தல விளக்கம்
தொகுஅந்தகேசம் தல விளக்கத்தின்படி, இரணியாட்சன் மகன் அந்தகாசுரன் அந்தகேசப் பெருமானைப் பூசனை புரிந்து பெற்ற வரத்தினால் திருமால் முதலான தேவர்களைப் புறங்கண்டு அரசாண்டு வந்தனன். தேவர்கள் அவனுக்குப் பயந்து பெண்ணுருக்கொண்டு திருக்கயிலையில் இறைவியின் கணங்களொடும் இருந்தனர். அறிந்த அசுரன் அங்குப் போர் செய்தற்குச் செல்ல அம்மையார் அருளைப்பெற்றுத் திருமால் அளவில் மகளிர் சேனையைச் சிருட்டித்து அனுப்பத் தோற்றோடினன்.
அதுகாலை இறைவனார் பேரழகுடைய பிட்சாடனகோலம் பூண்டு தாருகாவன முனிவர் மனைவியர்பாற் சார்ந்து மயல் பூட்டினமையால் அப்பெண்டிர் கற்பினை இழந்தனர். அறிந்த முனிவர் சிவபெருமானை அழித்தற் பொருட்டு வேள்வி ஒன்றியற்றி அவ் வாபிசாரயாகத்திற்றோன்றிய முயலகன், புலி, பாம்பு, மான், பூதம், மழு, யாகத்தீ இவற்றை ஏவினர். பெருமானார் அவற்றை அடக்கி ஏன்றுகொண்டனர்; மேலும் அம்முனிவரர் முன் திருக்கூத்தியற்றி நல்லறிவு அருள் செய்தனர். பிழை பொறுத்து முத்தியளிக்க வேண்டிய முனிவரர்க்குக் ‘காஞ்சியில், புல்பூடு முதலாம் எத்துணைத் தாழ்ந்த பிறப்பிற் றோன்றினும் முத்தி கைகூடும். ஆகலின், நீங்கள் காஞ்சியில் பிறந்து இல்லறமினிது நடாத்தி முத்தி அடைக’ என்றருளினர். பெருமானார் திருவாணைப்படி பிருகு முனிவர் முதலாம் நாற்பத்தொண்ணாயிரவரும் காஞ்சியில் பிறந்து சிவபூசை செய்து வாழ்ந்தமையால் காஞ்சியில் உள்ளார் யாவரும் முனிவர்களே; அத்தலத்துள்ள கல்லெல்லாம் இலிங்கமே; நீரெல்லாம் கங்கையே; பேசுகின்ற பேச்செல்லாம் மந்திரங்களே; செய்யும் செயல்கள் யாவும் இறைவனுக்கு ஆம் திருப்பணியே; எனவே, இயமனுக்கு அந்நகரில் புக உரிமையில்லை.
பெருமானார் திருக்கயிலைக் கெழுந்தருளிய பின் மீண்டும் அந்தகாசுரன் போருக்குச் சென்றனன். இறைவனார் வயிரவ மூர்த்தியை அனுப்பினர். அவர் எதிர்சென்று அந்தகனைச் சூலத்தில் ஏந்தி திருநடம் புரிந்தனர். அசுரன் அறிவுபெற்றுச் சூலத்திற் கிடந்தவாறே துதித்தனன். வயிரவர் மகிழ்ந்து வேண்டும் வரம் கேள் என்றருளி முத்தி வேண்டினன் அசுரன். வயிரவர் இறைவன் திருக்குறிப்பின்படி காஞ்சியை அடைந்து சூலத்திற் கிடக்கும் அந்தகனைத் திருவேகம்பர் திருக்கோயிற் சிவகங்கையில் மூழ்குவித்துத் திருவருளை நல்கிப் பாசத்தைப் போக்கினர். அந்தகன் தான் முன்பு வழிபட்டு வரம்பெற்ற இலிங்கத்துள் கலந்து ஒன்றுபட்டனன். இத்தலம் காஞ்சிபுரத்திற்கு மேற்கே எட்டுக் கல் தொலைவில் திருப்புட்குழியில் உள்ளது. [3]
அமைவிடம்
தொகுதமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியிலும், பாலுசெட்டி சத்திரம் எனும் ஊரிலிருந்து தெற்கிலும் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையிலுள்ள "திருப்புட்குழி" என்னும் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Project Madurai, 1998-2008 | சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 | 39. அந்தேகசப் படலம் 1319 - 1350
- ↑ "shaivam.org | அந்தகேசம் (மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்) | தல வரலாறு". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-28.
- ↑ Tamilvu.org | திருத்தல விளக்கம் | அந்தகேசம் | பக்கம்: 829
- ↑ "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | அந்தகேசம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-28.