தி இன்டர்வியூ (2014 திரைப்படம்)

2014ல் வெளியான அமெரிக்க அரசியல் நகைச்சுவை திரைப்படம்

தி இன்டர்வியூ (The Interview) என்பது 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அரசியல் கலந்த அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை சேத் ரோகன், எவன் கோல்ட்பேர்க் ஆகியோர் இயக்கியிருந்தனர். இத்திரைப்படத்தில் ஊடகவியலாளர்களாக நடிக்கும் சேத் ரோகன், மற்றும் ஜேம்ஸ் பிரான்கோ ஆகியோர் வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் (ரான்டல் பார்க் நடித்திருக்கிறார்) ஐ நேர்காணலுக்குப் பதிவு செய்வதன் மூலம் அவரைப் படுகொலை செய்ய ஏவப்படுகிறார்கள். உயிரோடிருக்கும் உலகத் தலைவர் ஒருவர் திரைப்படம் ஒன்றில் படுகொலை செய்யப்படுவதாக சித்தரிக்கப்படும் முதலாவது திரைப்படம் இதுவாகும்.[7].

தி இன்டர்வியூ
The Interview
ஆரம்ப வெளியீட்டு நாளைக் கொண்ட சுவரொட்டி.[1]
இயக்கம்
தயாரிப்பு
திரைக்கதைடான் ஸ்டெர்லிங்
இசைஎன்றி ஜாக்மென்
நடிப்பு
ஒளிப்பதிவுபிரான்டன் டுரோஸ்ட்
படத்தொகுப்பு
  • செனி பேக்கர்
  • எவன் ஹென்கி
கலையகம்பொயின்ட் கிரே பிக்சர்சு
விநியோகம்சொனி பிக்சர்சு
வெளியீடுதிசம்பர் 11, 2014 (2014-12-11)(லாஸ் ஏஞ்சலஸ் சிறப்புக்காட்சி)
திசம்பர் 24, 2014 (வட அமெரிக்கா)
ஓட்டம்112 நிமி.[2]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$44 மில். (வரி விலக்கிற்கு முன்)[3][4]
மொத்த வருவாய்$18 மில்.[5][6]

சொனி பிக்சர்சு நிறுவனம் இத்திரைப்படத்தைக் குறிப்பிட்ட நாளில் வெளியிடும் பட்சத்தில், அந்நிறுவனத்திற்கெதிராக "இரக்கமற்ற" நடவடிக்கை எடுக்கவிருப்பதாக 2014 சூன் மாதத்தில் வடகொரிய அரசு எச்சரித்திருந்தது. கொலம்பியா இத்திரைப்படத்தின் வெளியீட்டு நாளை 2014 அக்டோபர் 10 இலிருந்து 2014 டிசம்பர் 25 இற்குப் பின்போட்டது. அத்துடன், வடகொரியா ஏற்றுக்கொள்ளக்கூடியதாக, காட்சிகளிலும் மாற்றம் செய்தது. 2014 நவம்பரில், சொனி பிக்சர்சு நிறுவனத்தின் கணினி அமைப்புகள் "அமைதியின் காப்பாளன்" (Guardians of Peace) என்னும் அமைப்பினால் தாக்கப்பட்டன. இவ்வமைப்பு வடகொரியாவுடன் நெருங்கிய தொடர்புடையதென புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் நம்புகிறது. சொனி நிறுவனம் வெளியிடவிருந்த திரைப்படங்கள் சிலவற்றையும், அந்நிறுவனத்தின் இரகசிய ஆவணங்கள் சிலவற்றையும் அவ்வமைப்பு வெளிப்படுத்தியது. தி இன்டர்வியூ திரைப்படம் "பயங்கரவாதத்தின் திரைப்படம்" என வர்ணித்து, அத்திரைப்படத்தை வெளியிடக்கூடாது என அச்சுறுத்தியது. இத்திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளைத் தாக்கவிருப்பதாக 2014 டிசம்பர் 16 இல், "அமைதியின் காப்பாளன்" என்ற இந்நிறுவனம் அச்சுறுத்தியது.

டிசம்பர் 17 இல் பல வட அமெரிக்கத் திரையரங்குகள் பாதுகாப்புக் கருதி இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்ததை அடுத்து, சொனி நிறுவனம் திரைப்பட வெளியீட்டை ரத்து செய்தது. சொனி நிறுவனத்தின் இந்நடவடிக்கையை ஊடகங்கள், ஹாலிவுட் பிரபலங்கள், மற்றும் அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா ஆகியோர் விமரிசித்தனர். இத்திரைப்பட வெளியீட்டை முற்றாக நிறுத்தி வைக்க சொனி நிறுவனம் ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தாலும், 2014 டிசம்பர் 24 இல் இத்திரைப்படத்தை நிகழ்நிலை வாடகைக்கு வெளியிட்டது.[8]. அத்துடன் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் டிசம்பர் 25 இல் வெளியிட்டது.[9].

கதைச்சுருக்கம்

தொகு

உலகப் பிரபல நபர்களை நேர்காணும் "ஸ்கைலார்க் டுநைட்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நிகழ்த்தும் டேவ் ஸ்கைலார்க் (ஜேம்ஸ் பிரான்கோ), தனது 1000வது நிகழ்ச்சியைத் தாண்டிய நிலையில், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் (ராண்டல் பார்க்) தமது நிகழ்ச்சியின் ஒரு விசிறி என்பது ஸ்கைலார்க் டுநைட்டின் தயாரிப்பாளர் ஆரன் ராப்பபோர்ட் (சேத் ரோகன்) இற்குத் தெரிய வருகிறது. கிம்மை நேர்காணல் செய்யும் பொருட்டு, சூக் என்ற வடகொரியப் பெண் அதிகாரி ஒருவரின் உதவியை நாடி சீனா செல்கிறார் ஆரன். கிம்மை நேர்காணல் செய்ய டேவ் சம்மதிக்கிறார்.

இதற்கிடையில், லேசி (லிசி காப்லான்) என்ற சிஐஏ முகவர் இருவரையும் சந்தித்து, நேர்காணலின் போது வடகொரியத் தலைவரைக் கொலை செய்து விட்டு அந்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டம் ஒன்றை முன்மொழிகிறார். கிம்முடன் கைகுலுக்கும் போது அவரைக் கொல்லக்கூடிய ரைசின் என்ற நச்சுத்தூளைக் கொண்ட பட்டி ஒன்றையும் தருகிறார். இருவரும் தயக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறார்கள்.

டேவ் கிம்மை சந்திக்கிறார். தாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கிம் டேவிடம் தெரிவிக்கிறார். இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். கிம்மை நஞ்சூட்டிக் கொல்லும் முயற்சியை டேவ் முறியடிக்கிறார். கிம்முன் இரவு உணவு அருந்தும் போது கிம்மின் உண்மையான கொடிய முகத்தைக் காண்கிறார் டேவ். நாட்டைப் பற்றிய உண்மையையும் அறிந்து கொள்கிறார்.

ஆரன், சூக் இருவருக்குமிடையில் காதல் மலர்கிறது. டேவ், ஆரன், சூக் மூவரும் சேர்ந்து கிம்மின் உண்மையான முகத்தை மக்களுக்கு அம்பலப்படுத்த முடிவெடுக்கிறார்கள். கிம்முடனான நேர்காணல் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் ஒளிபரப்புகிறார்கள். கிம்மின் கழிவறைப் பிரச்சினை தொடக்கம், சர்ச்சைக்குரிய பல விடயங்களை அந்த நேரடி நேர்காணலில் பேசி கிம்மை ஆத்திரமடைய வைக்கிறார்கள். பதிலுக்கு கிம் தனது துப்பாக்கியால் டேவை சுடுகிறார். ஆனாலும், குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்தமையால் டேவ் தப்புகிறார்.

டேவ், ஆரன், சூக் மூவரும் கவச வாகனம் ஒன்றில் ஏறி தப்பிச் செல்கிறார்கள். கிம் அவர்களை உலங்குவானூர்தி ஒன்றில் ஏறித் தொடர்கிறார். கவச வாகனத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் கிம் இறந்து போகிறார். சூக்கின் உதவியுடன் அமெரிக்க ஆறாம் சீல் குழு இருவரையும் காப்பாற்றுகிறது. டேவ் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடுகிறார். வடகொரியாவில் மக்களாட்சி மலர்கிறது.

சர்ச்சை

தொகு

இப்படத்தின் 10,000 சிடிகள் கொண்ட பலூன்களை தென் கொரியாவின் வழியாக கடத்தி வெளியிட உள்ளதாகவும் அப்படி எந்த பலூனும் வட கொரியாவிற்குள் வந்தால் அதை சுட்டு வீழ்த்த வீரர்கள் தயாராக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. Vary, Adam B. (June 11, 2014). "The Poster For Seth Rogen And James Franco’s New Comedy Is Filled With Anti-American Propaganda." BuzzFeed. பார்க்கப்பட்டது: டிசம்பர் 21, 2014.
  2. "The Interview (15)". British Board of Film Classification. நவம்பர் 17, 2014. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 17, 2014.
  3. "Sony Could Lose $75 Million on 'The Interview' (EXCLUSIVE)". Variety. December 18, 2014. பார்க்கப்பட்ட நாள் December 18, 2014.
  4. "Canada avoids wrath of North Korea over B.C.-made 'The Interview'". Global News. December 22, 2014. பார்க்கப்பட்ட நாள் December 28, 2014.
  5. http://www.theguardian.com/film/2014/dec/29/the-interview-makes-18m-after-massive-online-sales
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-29. பார்க்கப்பட்ட நாள் 2014-12-29.
  7. "Sony’s International Incident: Making Kim Jong-un’s Head Explode". நியூயோர்க் டைம்சு. டிசம்பர் 14, 2014. http://www.nytimes.com/2014/12/15/world/sonys-international-incident-making-kims-head-explode.html. பார்த்த நாள்: December 29, 2014. 
  8. "Chinese Viewers Mostly Give Thumbs Up for ‘The Interview’". நியூயோர்க் டைம்சு. டிசம்பர் 26, 2014. http://sinosphere.blogs.nytimes.com/2014/12/26/chinese-viewers-mostly-give-thumbs-up-for-the-interview/?_r=1. பார்த்த நாள்: டிசம்பர் 29, 2014. 
  9. "'The Interview' makes $1 million at box office". சிஎன்என். டிசம்பர் 26, 2014. http://money.cnn.com/2014/12/26/media/the-interview-box-office-results/index.html. பார்த்த நாள்: டிசம்பர் 29, 2014. 
  10. எல்லை தாண்டும் 1000 டிவிடி பலூன்கள்: வட கொரியா எச்சரிக்கை

வெளி இணைப்புகள்

தொகு