தூசி
தூசி என்பது, 20 தாவோ (500 மைக்குரோமீட்டர்) அளவுக்கும் குறைந்த விட்டம் கொண்ட நுண்ணிய திண்மத் துகள்களைக் குறிக்கும். வளிமண்டலத்தில் இருக்கும் தூசித் துகள்கள் காற்றினால் மண் எழுப்பிவிடப்படுதல், எரிமலை வெடிப்பு, பல்வேறு மாசு வெளியேற்றம் என்பவற்றால் உருவாகின்றன. வீடு, அலுவலகம் மற்றும் பிற மனிதர் வாழும் சூழல்களில் வெளிப்புற மண்ணில் இருந்து வரும் கனிமத் துகள்கள், தோல் கலங்கள், தாவரங்களின் மகரந்தம், விலங்கு உரோமம், துணி இழைகள், தாள் இழைகள் மற்றும் ஏராளமான பிற பொருட்கள் காணப்படுகின்றன.[1][2][3]
வீட்டுத் தூசிகள்
தொகுவீட்டுத் தூசிகளின் அளவும், சேர்மானங்களும் பலவாறு வேறுபடுகின்றன. பருவ காலம், வெளிப்புற வளி உள்ளிட்ட சூழல் காரணிகள், வீட்டின் வயது, கட்டிடப் பொருட்களும் அவற்றின் நிலையும், தளவாடங்கள் மற்றும் தளக் கம்பளங்களின் அளவு மற்றும் அவற்றின் நிலை போன்றவை வீட்டுத் தூசியின் அளவையும், தன்மையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும். இது, வீட்டின் காற்றோட்டம், வளிப் பதனம் அல்லது சூடாக்கற் தொகுதிகள், சுத்தப்படுத்தும் பழக்கங்கள், வீட்டில் இருப்பவர்களின் நடவடிக்கைகள் அல்லது வீட்டு அறைகளின் பயன்பாடு என்பவற்றிலும் தங்கியுள்ளது.
வீட்டுத் தூசியில் கரிமப் பொருட்களும், கனிமப் பொருட்களும் உள்ளன. எனினும் தூசியில் இவற்றின் விகிதங்கள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றன. சில இடங்களில் ஏறத்தழ முழுமையாகவே தூசி கனிமப் பொருட்களான, மணல், களி, இருவாட்டி போன்றவற்றால் ஆனதாக இருக்க, பழையதாகிப் போன தளவிரிப்புக்களுடன் கூடப் பல விலங்குகளையும் வளர்க்கும் வீடுகளில் தூசி பெருமளவுக்குக் கரிமப் பொருட்களைக் கொண்டிருக்கும். 318 வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி வீட்டுத் தூசியில் கரிமப் பொருட்களின் வீதம் 5% தொடக்கம் 95% வரை இருக்கக் காணப்பட்டது.
செருமனினின் சூழல் ஆய்வு ஒன்றின்படி, வீட்டிலுள்ளவர்கள் எவ்வளவு நேரம் வீட்டில் கழிக்கிறார்கள் என்பதைப்பொறுத்து, 6 மில்லிகிராம்/மீ2/நாள் அளவான வீட்டுத்தூசி தனியார் வீடுகளில் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வீட்டுக்கு உள்ளேயுள்ள மேற்பரப்புக்களில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு சதுர சதமமீட்டர் பரப்பளவில் 1000 தூசித் துகள்கள் படிவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சில தூசிகளில் மனிதத் தோல் துகள்கள் உள்ளன. ஒரு மனிதனது தோலின் மேற்படலம் முழுவதும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் உரிந்து போவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு ஒரு நிமிடத்துக்கு சுமார் 7 மில்லியன் தோல் துகள்கள் என்னும் வீதத்தில் வளியில் கலப்பதாகக் கூறப்படுகிறது. இது நிமிடத்துக்கு 20 மில்லிகிராம் அளவுக்குச் சமமானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dust".. Merriam-Webster.
- ↑ van Bronswijk, J. E. M. H. (1981). House Dust Biology for Allergists, Acarologists and Mycologists. J. Bronswijk. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789027535016. இணையக் கணினி நூலக மைய எண் 9757081.
- ↑ Hess-Kosa, Kathleen (2002). Indoor air quality: sampling methodologies. Boca Raton, Florida: CRC Press. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781566705394. இணையக் கணினி நூலக மைய எண் 634141112.