நம்பெருமாள் செட்டியார்
நம்பெருமாள் செட்டியார் (Thaticonda Namberumal Chetty, பி. 1856 – இ. 3 திசம்பர், 1925) என்பவர் சென்னையைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தக்காரரும், பொறியாளரும் மற்றும் பெரும் செல்வந்தரும் ஆவார். இவர் சென்னையில் பெரிய, பேர் பெற்ற கட்டடங்களைக் கட்டியவர்.[1]
வாழ்க்கை நிலை
தொகுநம்பெருமாள் செட்டியார் வாழ்ந்த பகுதியைச் செட்டிப்பேட்டை என அழைத்தனர். அப்பெயர் சென்னையில், தற்பொழுது சேத்துப்பட்டு என்று அழைக்கப்பட்டு வருகிறது. இவரது இல்லம், 3 மாடிகள் 30 அறைகளுடன் வெள்ளை மாளிகை என்னும் பெயரில் சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில் உள்ளது. இந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக விளங்கி வருகிறது. இதுவல்லாமல் அப்பகுதியில் 99 வீடுகள் நம்பெருமாளுக்குச் சொந்தமாக இருந்துள்ளன.
தொழில் பணிகள்
தொகுசென்னையில் உள்ள உயர்நீதி மன்றக் கட்டடம், விக்டோரியா பொது மண்டபம், விக்ட்டோரியா நினைவுக் கட்டடம், கன்னிமரா நூலகம், சென்னை அருங்காட்சியகம், மதராஸ் வங்கி, ஒய். எம். சி. ஏ. கட்டடம் போன்ற பல கட்டடங்களைக் கட்டினார். சென்னையில் பல சிவப்பு நிறக் கட்டங்கள் இவரால் உருவாக்கப்பட்டன. பர்மா இரங்கூனிலிருந்து தேக்கு மரங்களை இறக்குமதி செய்தும் அவற்றை இலங்கை, இங்கிலாந்து, செருமனி, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வந்தார். திருச்சூர் டிம்பர் அண்ட் சா மில்ஸ் என்ற குழுமத்தின் நிருவாக இயக்குனராக இருந்தார். மகிழுந்து வாங்கிய முதல் இந்தியர் இவரே. இவர் வாங்கிய மகிழுந்து பிரான்சிலிருந்து வாங்கப்பட்டது.
சிறிய டிராம் வண்டி செல்லக்கூடிய இருப்புப் பாதையைச் சொந்தமாக வைத்திருந்தார். மேலும் டிராம் வண்டியையும் வைத்திருந்தார்.
பிற பணிகள்
தொகுகணித மேதை இராமானுசன் எலும்புருக்கி நோயினால் துன்புற்றபோது அவரை அழைத்து வந்து, தங்க வைத்து, உணவு வசதியும் மருத்துவ வசதியும் செய்து கொடுத்தார். இராமானுசன் இறந்ததும் அவரது இறுதிச் சடங்கையும் முன் நின்று நடத்தினார்.
மதிப்புறு பட்டங்கள்
தொகுஅவர் காலத்தில் ஆட்சி புரிந்த ஆங்கிலேய அரசு நம்பெருமாளுக்கு ராவ் சாகிப் பட்டம், ராவ் பகதூர் பட்டம் மற்றும் திவான் பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவருடைய வளமனைகள் சென்னை நகரை அழகுப் படுத்தின என்று 1900 ஆம் ஆண்டில் சென்னை மாநில ஆளுநர் ஆர்தர் ஏவலாக் பாராட்டினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sriram, V. (16–31 January 2009). "Historic Residences in Chennai-10". Madras Musings 18 (19). http://madrasmusings.com/Vol%2018%20No%2019/historic_residences_of_chennai_10.html.