நரலோக வீரன்

சோழர் படைத்தளபதி

நரலோக வீரன் இவர் காளிங்கராயன், மணவில் கூத்தன் என்றும் அழைப்பட்டவர் (Naralokaviran, மேலும் Kalingarayan என்றழைக்கப்படும்) சோழப் பேரரசு ஆட்சிகாலத்தில் தளபதியாக இருந்தவராவார். இவர் முதலாம் குலோத்துங்க சோழன் (1120 1070) மற்றும் அவரது வாரிசான - விக்கிரம சோழன் (1118 - 1135) ஆகியோர் காலத்தில் படைத் தளபதியாக இருந்தவர்.[1] இவர் தொண்டை நாட்டு மணவிற்கோட்டத்து அரும்பாக்கம் என்ற சிற்றூரினர் மணவிற்கோட்டத்தை ஆண்டவர். அவர் மணவில்கோட்டத்தில் பெருமளவில் நிலமாணியங்களை அளித்தார்.[2] கலிங்க நாடு (ஒடிசா) மற்றும் வட இந்தியாவின் மீது நடத்தப்பட்ட படையெடுப்புகளின் மூலம் புகழ்பெற்ற முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமானைப்போல, நரலோக வீரன் தெற்கில் நடத்தப்பட்ட சோழரின் தொடர் போர்களுக்கு தலைமை தாங்கினார் மேலும் பாண்டிருக்கு எதிரான போர்களில் வெற்றிகளை ஈட்டி புகழ்பெற்றார்.[3] இவர் பொன்னம்பலக் கூத்தன், காலிங்கன், மானாவதாரன், பொற்கோயில் தொண்டைமான், நரலோகவீரன், அருளாகரன் போன்ற பல பட்டங்களைக் கொண்டிருந்தார்.[4][5]

சோழ வீரர்களை வெற்றிகரமாக வேணாட்டில் உள்ள மலைத் தொடர்களைக் கடந்து கொல்லம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றதற்காகவும் நரலோக வீரன் அறியப்படுகிறார். இதனால் பாண்டிய-சோழர்கள் வேணாட்டில் சிலகாலம் சோழ மேலாதிக்கத்தை நிறுவ முடிந்தது.[6]

குடும்பம்

தொகு

இவருக்கு சூரைநாயகன் என்கிற மாதவராயன் என்ற மகன் இருந்ததாக கல்வெட்டுகளில் இருந்து நமக்குத் தெரியவருகிறது. அவரும் விக்ரம சோழனின் கீழ் அதிகாரியாக பணியாற்றினார்.[7]

சமயப் பணிகள்

தொகு

இவர் பல கோயில்களில் திருப்பணிகளை செய்துள்ளார். அவற்றில் சில; சித்தலிங்கமடத்தில் சிவனுறையும் கற்றளி ஒன்று கட்டினார். அதைச் சுற்றிப்பிரகாரமும் ஒரு மண்டபமும் அமைத்தார். திருப்புலிவன ஈசற்கு விளக்கெரிக்க 12 கழஞ்சு பொன் அளித்தான்ர். திரிபுவனை ஈசற்கு நிலங்கள், மண்டபம், நந்தவனங்கள் இவற்றை அமைத்தார். திருப்புகலூரில் நரலோக வீரன் என்ற தன் பெயரால் மண்டபம் ஒன்று கட்டினார்.

நரலோக வீரன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் செய்த பல திருப்பணிகளுக்காக அறியப்படுகிறார். இவர் இக்கோயிலில் இரண்டு பெரிய நுழைவாயில்களை கட்டுவதற்கும், கோவில் வளாகத்தினுள் உள்ள சந்நிதியை விரிவுபடுத்துவதற்குமான பொறுபை ஏற்றார். திருவிழாக்களில் ஆர்வம் காட்டிய இவர், ஊர்வலப் பாதையில் விளக்குகள் எரியச் செய்தார், விழாக்காலங்களில் தெருக்களில் நீர் தெளிக்க ஏற்பாடு செய்தார், நடராசர் பிட்சாடன யாத்திரையில் வெளிச்செல்ல ரிஷப வாகனம் ஒன்றை அமைத்தார், மற்றும் இறைவன் சிவன் ஊர்வலம் சென்று மீளலை அறிவிக்கப் பொன் ஊது குழலைச் செய்து அளித்தார்.[1] விக்ரம சோழரின் ஆட்சிக் காலத்தில், சிதம்பரம் நடராசர் கோயியில் நாரலோக வீரன் நூறு கால் மண்டபத்தைக் கட்டினார்.[3]

சிறந்த முறையில் ஒரு லட்சம் பாக்கு மரங்கள் கொண்ட நந்தவனம் ஒன்றை அமைத்தார். தில்லைக்கும் கடலுக்கும் நடுவில் பெரிய அகன்றசாலையை அமைத்தார், கடற்கரையில் மாசி மகத்தின்போது நடராசப் பெருமான் தங்குவதற்காக மண்டபம் ஒன்று அமைத்தார். கோவிலில் தினந்தோறும் விளக்கு எரியச் செய்தார். கூத்தப்பிரான் கோவில் அருகில் தூயநன்னீர்க்குளம் ஒன்றை அமைத்தார். கரையில் பெரிய ஆலமரம் ஒன்றை வளர்த்தார். கோவிலைச்சுற்றிப் பெரிய மதிலை நரலோக வீரன்’ என்ற தன் பெயரால் எழுப்பினார். கோவில் குளத்தின் நான்கு பக்கங்களிலும் படிகள் அமைத்தார். கோவிலின் தென்வாயிலின் இரு புறங்களிலும் மங்கல விளக்குகள் எரியச் செய்தார். திருஞான சம்பந்தர் தேவாரத்தை ஒதுவதற்கென்று மண்டபம் ஒன்றை அமைத்தார். மூவர் தேவாரத்தையும் செப்பேடுகளில் எழுதுவித்தார்.[8] இன்னும் பல திருப்பணிகளை செய்தார்.

நரலோக வீரனால் திருவதிகையில் புத்தருக்கு கோயில் கட்டப்படதாக கல்வெடுகள் வழியாக அறியவருகிறது.[9]

கல்வெட்டுகள்

தொகு

முதலாம் குலோத்துங்க சோழன் (1070 - 1120) மற்றும் அவரது வாரிசான விக்ரம சோழன் (1118 - 1135) ஆகியோரின் பல கல்வெட்டுகளில் நரலோக வீரனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Aghoraśivācārya. A Priest's Guide for the Great Festival. Oxford University Press, 2010 - Religion - 191 pages. p. 19.
  2. B. Natarajan. The city of the cosmic dance: Chidambaram. Orient Longman, 1974 - Travel - 164 pages. p. 72.
  3. 3.0 3.1 B. Natarajan. Tillai and Nataraja. Mudgala Trust, 1994 - Chidambaram (India) - 632 pages. p. 50.
  4. S. R. Balasubrahmanyam. Later Chola Temples: Kulottunga I to Rajendra III (A.D. 1070-1280), Parts 1070-1280. Mudgala Trust, 1979 - Architecture - 470 pages. p. 20.
  5. B. Natarajan. The city of the cosmic dance: Chidambaram. Orient Longman, 1974. p. 71.
  6. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 125-28.
  7. S. R. Balasubrahmanyam; B. Natarajan; Balasubrahmanyan Ramachandran. Later Chola Temples: Kulottunga I to Rajendra III (A.D. 1070-1280), Parts 1070-1280. Mudgala Trust, 1979 - Architecture - 470 pages. p. 177.
  8. பெரிய புராண ஆராய்ச்சி, பக்கம், டாக்டர். மா. இராசமாணிக்கனார், பக்கம், 99-100
  9. புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன் தமிழாய்வகம். p. 327. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020. {{cite web}}: line feed character in |publisher= at position 11 (help)

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரலோக_வீரன்&oldid=3904913" இலிருந்து மீள்விக்கப்பட்டது