நியூரம்பர்க் சட்டங்கள்

நாசி ஜெர்மனியின் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறி சட்டங்கள்

நியூரம்பர்க் சட்டங்கள் (Nuremberg Laws, இடாய்ச்சு: Nürnberger Gesetze) என்பவை நாட்சி ஜெர்மனியில் இயற்றப்பட்ட யூத எதிப்ப்பு, மற்றும் இனவாதச் சட்டங்கள் ஆகும். நாட்சி கட்சியின் வருடாந்திர நியூரம்பர்க் பேரணியின் போது நடைபெற்ற சிறப்பு சந்திப்பில் 1935 செப்டம்பர் 15 இல் இந்த சட்டங்கள் செருமனிய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டன.[1] செருமானிய இரத்தம் மற்றும் செருமானியப் பெருமையைப் பாதுகாக்கும் சட்டங்களாக இந்த இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன. யூதர்கள் மற்றும் செருமானியர்களுக்கு இடையிலான திருமணங்கள் மற்றும் திருமணத்தை மீறிய உறவுகளை இந்த சட்டம் தடை செய்தது. 45 வயதிற்கு உட்பட்ட செருமானியப் பெண்கள் யூத வீடுகளில் பணி செய்வதை இச்சட்டம் தடை செய்தது.[2] நாட்சியின் குடியுரிமை சட்டத்தின் படி செருமானிய அல்லது செருமானிய இரத்தம் கொண்டவர்கள் மட்டுமே நாட்சி செருமனியின் குடிமக்களாக இருப்பதற்கு தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டது.[2] எஞ்சியவர்கள் அரசின் ஒரு பகுதியினர் எனவும், ஆனால் அவர்களுக்கு குடிமக்களுக்கான எந்த உரிமையும் கிடையாது எனவும் பிரிக்கப்பட்டது. ரோமா மக்கள் மற்றும் கருப்பினத்தவர்களையும் இந்த சட்டத்துக்குள் கொண்டுவர 1935 நவம்பர் 26 இல் சட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டன. இந்த விரிவாக்கமானது யூதர்களைப் போலவே உரோமா மக்களும் இன அடிப்படையிலான நாட்சி செருமனியின் எதிரிகள் என வரையறுக்கப்பட்டனர்.[3]

வெளிநாட்டு உறவுகள் பாதிக்கப்படலாம் என்பதனை கருத்தில் கொண்டு பெர்லினில் நடைபெற்ற 1936 ஒலிம்பிக் போட்டிகள் வரை இந்த சட்டத்தின் கீழ் யார் மீதும் வழக்குகள் பதியப்படவில்லை.[4] 1933 இல் நாட்சி கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அவர்கள் தங்களது கொள்கைகளை செயல்படுத்த ஆரம்பித்தனர். அவற்றுள் இன அடிப்படையிலான மக்கள் சமூகத்தை உருவாக்குவதும் ஒன்றாகும். 1933 ஏப்ரல் 1 ஆளுநர் மற்றும் பியூரர் (தலைவர்) அடால்ஃப் இட்லர் நாடு முழுவதும் யூத வணிக அமைப்புகள் புறக்கணிக்கப்படும் என்று அறிவித்தார். ஏப்ரல் 7 இல் நிறைவேற்றப்பட்ட, தொழில்முறை ஆட்சிப்பணி சேவையை மீண்டும் நிலை நிறுத்துவதற்கான சட்டமானது, ஆரியர்கள் அல்லாதவர்களை சட்டத்துறை மற்றும் ஆட்சிப்பணி சேவைகளிலிருந்து விலக்கியது. யூத எழுத்தாளர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் உட்பட செருமனிக்கு ஒவ்வாத புத்தகங்கள் என கருதப்பட்ட புத்தகங்கள் மே 10 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற புத்தக எரிப்பு நிகழ்வுகளில் அழிக்கப்பட்டன. யூதக் குடிமக்கள் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாயினர். அவர்கள் தீவிரமாக ஒடுக்கப்பட்டனர். அவர்களிடமிருந்த குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. இறுதியாக செருமானிய சமூகத்தில் இருந்து முற்றிலுமாக அவர்கள் நீக்கப்பட்டனர்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூரம்பர்க்_சட்டங்கள்&oldid=3849445" இலிருந்து மீள்விக்கப்பட்டது