நில்ரதன் சர்க்கார்

சர் நில்ரதன் சர்க்கார் (Sir Nilratan Sarkar) (1861 அக்டோபர் 1 - 1943 மே 18) இவர் ஓர் சிறந்த இந்திய மருத்துவரும், கல்வியாளரும், தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டவரும் மற்றும் சுதேசி தொழில்முனைவோரும் ஆவார்.

நில்ரதன் சர்க்கார்
பிறப்பு(1861-10-01)1 அக்டோபர் 1861
நேத்ரா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு18 மே 1943(1943-05-18) (அகவை 81)
கிரீடிக், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்நில்ரதன் சர்க்கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (காம்ப்பெல் மருத்துவக் கல்லூரி)
உறவினர்கள்ஜோகிந்திரநாத் சர்க்கார்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஜெயநகரைப் பூர்வீகமாகக் கொண்ட நந்தலால் சர்க்காரின் மகனான இவர் 1861 அக்டோபர் 1 ஆம் தேதி தெற்கு 24 பர்கனா மாவட்டத்தின் நேத்ரா கிராமத்தில் தனது தாய் மாமாவின் வீட்டில் பிறந்தார். இவரது தந்தை ஜெசூரில் வறிய குடும்பத்தில் இருந்து வந்து பின்னர் ஜெயநகரில் குடியேறினார். இருப்பினும், இவரது தாயார் அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதால், சர்க்கார் மற்றும் அவரது உடன்பிறப்புகள் அவர்கள் வளர்ந்து வரும் ஆண்டுகளில் பெரும்பகுதியை தங்கள் தாய் குடும்பத்துடன் நேத்ரா கிராமத்தில் கழித்தனர். பின்னர் இவர் குழந்தையாக இருந்தபோது புற்றுநோய் காரணமாக இவரது தாயார் இறந்தார். இதனை சர்க்கார் தனது பேரக்குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தனது தாயின் நோயால் ஏற்பட்ட இழப்பு, இவரை மருத்துவம் படிக்க வழிநடத்தியது.

கல்வி

தொகு

ஹூக்லியில் உள்ள சத்ரா நந்தலால் பள்ளியில் நுழைவுத் தேர்வில் சர்க்கார் தேர்ச்சி பெற்று அங்கு மெட்ரிக் படித்தார். குடும்பத்தின் சுமாரான வருமானம் இருந்தபோதிலும், சர்க்கார் தனது மருத்துவ வாழ்க்கையைத் தொடர கொல்கத்தா சென்றார். இவரது முயற்சிகள் ஒரு ஆங்கிலேயரின் கவனத்தை ஈர்த்தது. அவர் காம்ப்பெல் மருத்துவக் கல்லூரியில் இவரது ஆய்வுக்கு நிதியளித்தார். 1879 ஆம் ஆண்டில் மருத்துவத்தில் சான்றிதழ் பட்டம் பெற்றார். இவர் உதவித்தொகையையும் பெற்றார். மேலும் 1888 இல் மருத்துவப் பட்டம் பெற்றார். மேலும், 1890 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிறைஞர் பட்டத்தைப் பெற்றார்.

குடும்ப வாழ்க்கை

தொகு

1888ஆம் ஆண்டில், அறிஞரும் பிரம்ம சபையின் பாரிசலைச் சேர்ந்த கிரிஷ்சந்திர மசூம்தாரின் மகள் நிர்மலா என்பவரை சர்க்கார் திருமணம் செய்து கொண்டு பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். இந்த தம்பதியருக்கு ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் என ஆறு குழந்தைகள் பிறந்தனர்.

மருத்துவ வாழ்க்கை

தொகு

மருத்துவர் சர்க்கார் விரைவில் ஒரு பெரிய மருத்துவ நடைமுறையை மேற்கொண்டார். பல ஆண்டுகளாக, ஒரு முன்னணி இந்திய ஆலோசனை மருத்துவராக இருந்தார். அண்டை நாடுகளில் ஆளும் அரச தலைவர்களை உள்ளடக்கிய தனது சில நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தொலைதூர பயணமும் செய்தார்.

கல்வி முயற்சிகள்

தொகு

மருத்துவத் துறையில் இவர் செய்த பங்களிப்பைத் தவிர, மருத்துவர் சர்க்கார் தனது வாழ்நாளில் கல்வி, வர்த்தகம் மற்றும் அரசியல் போன்ற காரணங்களுக்கும் பெரிதும் பங்களித்தார். வங்காளத்தின் பல்வேறு தேசிய அறிவியல் நிறுவனங்களின் அடித்தளம் மற்றும் நிர்வாகத்தில் இவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டார்:

போசு நிறுவனம்

தொகு

சர் நில்ரதன் சர்க்கார் ஆசியாவின் முதல் நவீன இடைநிலை ஆராய்ச்சி மையமான போசு நிறுவனத்தின் முதல் நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்தார்.

கார்மைக்கேல் மருத்துவக் கல்லூரி

தொகு

சர் நில்ரதன் சர்க்கார் 1922இல் வங்காள மருத்துவ கல்வி சங்கத்தின் தலைவரானார். 1941 வரை அந்த பதவியில் இருந்தார். கார்மைக்கேல் மருத்துவக் கல்லூரியின் சிறந்த நிர்வாகத்திற்காக இந்த சமூகம் உருவாக்கப்பட்டது. [1]

கொல்கத்தா பல்கலைக்கழக அறிவியல் கல்லூரி

தொகு

கொல்கத்தா பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

அறிவியல் வளர்ச்சிக்கான இந்திய சங்கம்

தொகு

வங்காளத்தின் பிற முன்னோடிகளுடன், சர்க்கார் அறிவியல் வளர்ச்சிக்கான இந்திய சங்கத்தை உருவாக்குவதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். [2] மேலும் இவர் 1939 முதல் 1941 வரை அறிவியல் சாகுபடிக்கான இந்திய சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

கொல்கத்தா பல்கலைக்கழகம்

தொகு

கல்வியில் சர்க்கரின் தீவிர ஆர்வங்கள் இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் நெருக்கமாக தொடர்பு கொள்ள வைத்தது. இவர் 1893ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தின் சக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்முதுகலை அறிவியல் கற்பித்தல் வசதிகள் மற்றும் மருத்துவக் கல்வியில் ஆராய்ச்சி விரிவாக்கம் மற்றும் மாணவர்களின் சுகாதார பரிசோதனை மற்றும் நலன்புரிப் பணிகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு பொறுப்பானவரானார். 1924 முதல் 1929 வரை கொல்கத்தா பல்கலைக்கழக முதுகலை கற்பித்தல் கலைகளுக்கான அமைப்பின் தலைவராகவும், 1924 முதல் 1942 வரை அறிவியலில் முதுகலை கற்பித்தல் தலைவராகவும் மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் 1919 முதல் 1920 வரை பணியாற்றினார். [3] 1920 இல் லண்டனில் நடந்த எம்பயர் பல்கலைக்கழக மாநாட்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்த இங்கிலாந்து சென்றார்.

பிற நிறுவனங்கள்

தொகு

சர்க்கார் ஜாதவ்பூர் காசநோய் மருத்துவமனை மற்றும் சித்தரஞ்சன் சேவா சதனுடனும் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்.

கல்விச் சங்கங்கள் மற்றும் அமைப்புகள்

தொகு

சர்க்கார் கொல்கத்தா மருத்துவச் சங்கத்தின் தலைவராக பணியாற்றினா. மேலும் பல ஆண்டுகளாக அதன் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக இருந்தார். 1934இல் நிறுவப்பட்ட இந்திய உடலியல் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார். வங்காளத்தில் பிரிவினைக்கு எதிரான இயக்கத்தின் போது, தேசிய கல்வி அமைப்பை நிறுவுவதில் சர்க்கார் ஈடுபட்டார் . 1906 ஆம் ஆண்டில், தாரக்நாத் பண்டிட் மற்றும் மருத்துவர் சர்க்கார் ஆகியோர் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்துவதற்கான சங்கத்தைத் தொடங்கினர். இது வங்காள தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியது.

அரசியல் வாழ்க்கை

தொகு

அப்போது இந்திய துணைக் கண்டத்தில் பெரும் அரசியல் கொந்தளிப்பின் காலமாகவும் இருந்தது. சுதந்திர இயக்கம் மெதுவாக ஆனால் நிச்சயமாக வேகத்தை அடைந்தது. இங்கேயும், சர்க்கார் சில நடவடிக்கைளின் தலைமையாக இருந்தார். இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, ஜெகதீஷ் சந்திரபோஸ், மோதிலால் நேரு, தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் மற்றும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட பல முன்னணித் தலைவர்களுடன் இவர் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். இவர் 1890 மற்றும் 1919க்கும் இடையில் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். சர்க்கார் சீர்திருத்த திட்டத்தின் கீழ் வங்காள சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

தேசிய வர்த்தகத்தை மேம்படுத்துதல்

தொகு

சுதேசி இயக்கத்திற்கு இவர் அளித்த உற்சாகமான ஆதரவு 1905ஆம் ஆண்டில் பெலியகட்டாவில் தேசிய சோப் தொழிற்சாலை மற்றும் தேசிய தோல் பதனிடும் தொழிற்சாலையை அமைக்க உதவியது. இவர் குறிப்பிட்ட காலத்திற்கு பூட் மற்றும் கருவி தொழிற்சாலையின் இயக்குநராக இருந்தார். மேலும் வங்காள தோல் பதனிடும் நிறுவனத்தை நிறுவ செய்ய தனது மேலாளர் பி.எம்.தாசு என்பவரை ஊக்குவித்தார்.

இறப்பு

தொகு

இவர் 1943 மே 18 அன்று தனது 81 வயதில் கிரீடிக்கில் இறந்தார். 1943ஆம் ஆண்டு சூன் 5 ஆம் தேதி பிரிட்டிசு மருத்துவ இதழில் ஒரு இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

தொகு

1918 சூன் 26 அன்று, மருத்துவர் சர்க்கார் மருத்துவக் கல்வியில் இவரது பங்களிப்புகளுக்காக ஒரு வீரத்திருத்தகை என்ற கௌரவம் வழங்கப்பட்டது [4] சர்க்காருக்கு முறையே ஆக்ஸ்போர்டு மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்களால் கௌரவப் பட்டங்கள் வழங்கப்படது. 1940 ஆம் ஆண்டில், கொல்கத்தா பல்கலைக்கழகம் இவருக்கு மருத்துவச் சான்றிதழ் பட்டம் அளித்தது.

இவரது மரணத்திற்குப் பிறகு, இவர் படித்த கல்லூரியான, காம்ப்பெல் மருத்துவப் பள்ளி "நில்ரதன் சர்க்கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை" என மறுபெயரிடப்பட்டது. 1931 ஆம் ஆண்டில், கொல்கத்தா நகராட்சி இவரை "இந்த பெரிய நகரத்தின் ஒரு சிறந்த மருத்துவரன இவர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டின் பொது வாழ்க்கையில் தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டார். மேலும் பொது நடவடிக்கைகளின் பல்வேறு துறைகளில் விலைமதிப்பற்ற சேவையை வழங்கியுள்ளார்" என்று பாராட்டியது.

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நில்ரதன்_சர்க்கார்&oldid=3711176" இலிருந்து மீள்விக்கப்பட்டது