நுகர்வியம்
நுகர்வியம் (consumerism) என்பது மேலும் மேலும் கூடுதலான அளவில் பொருட்களையும் சேவைகளையும் நுகர்வதை ஊக்கப்படுத்தும் ஏதுவாக்கும் ஒரு சமூகப் பொருளாதார முறைமை ஆகும். அச்சமூகத்தின் பொருளாதார நலன் நுகர்வில் தங்கி இருப்பதும் நுகர்வியத்தின் ஒரு முக்கிய கூறு ஆகும். நுகர்வியம் சந்தைப் பொருளதாரத்தின் அல்லது முதலாளித்துவத்தின் ஒரு விளைவாக அல்லது அதன் ஒரு கட்டமைப்பாகக் கருதப்படுகிறது. நுகர்வியத்தை பழங்குடிகள், நிலக்கிழாரியம், சமய ஆட்சி, பொதுவுடமை போன்றவற்றின் சமூகப் பொருளாதார கட்டமைப்புகளில் இருந்து வேறுபடுத்திப் பாக்கலாம். ஆங்கிலத்தில் நுகர்வியம் என்பதற்கான கொன்சூமரிசம் (consumerism) என்ற சொல் நுகர்வோர் உரிமைமைகள், நுகர்வோர் செயற்பாடுகள் பற்றியும் குறிக்கப் பயன்படுகிறது.
கூறுகள்
தொகுநுகர்வியம் மேலும் மேலும் பொருட்களயும் சேவைகளையும் நுகர்வதை உற்பத்திதுறை, விளம்பரத்துறை, நிதித்துறை ஊடாக நிறைவேற்றுகிறது. உற்பத்திதுறையின் பெரும் வளர்ச்சிக்கு நுகர்வியமே பெரும் உந்துசக்தியாக அமைந்தது. நுகர்வியத்தின் பொறியாக விளம்பரத்துறை கருதப்படுகிறது. விளம்பரத்துறை வாழ்வின் அனைத்து பாகங்களையும் ஊடுருவி உள்ளது. தற்காலத்தில் நுகர்விய வெடிப்புக் காரணம் கடன் பொருளாதாரம் ஆகும். கடன்களுக்குப் பொருட்களை சேவைகளைக் கொடுப்பதும், அதில் இருந்து வட்டி ஈட்டுவதும் நுகர்விய பொருளாதார முறைமையின் ஒரு முதன்மை வணிக மாதிரி ஆகும்.
இந்த நுகர்தல் அல்லது அதற்கான தூண்டல் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒருவரின் மகிழ்ச்சியும் வெற்றியும் அவர் எவ்வளவு பொருட்களை, சேவைகளை, அனுபவங்களை நுகர்கிறார் என்று மதிப்பீட்டில் பெரிதும் தங்கி இருக்கிறது. ஒருவரின் அடையளம் அவரின் வணிக உடைகளை, பொருட்களை, வாகனங்களை, வீடு, விடுமுறைகள் போன்ற நுகர்வுகளில் பெரிதும் தங்கி இருக்கிறது. நுகர்வுப் பண்பாடு சமூகத்தின் முதன்மைப் பண்பாடாக மாறியிருக்கிறது. இதனால் சாதிய சமய சமூகக் கட்டுப்பாடுகளில் இருந்து வெளியேற நுகர்வியம் உதவுகிறது.
நுகர்வியம் வீட்டின் உற்பத்தித் திறனை தேவையற்றதாக ஆக்கி, வீடுகளை நுகர்வு முனைகளாக மாற்றுகிறது. சமையல், தைத்தல், தோய்த்தல், விளையாட்டுக்கள், குழந்தை வளர்ப்பு, கல்வி, வீட்டுத் தோட்டம், கைத்தொழில்கள், கை மருத்துவம் போன்றவை வெளியில் இருந்து வாங்குவது நேரச் சேமிப்பாகவும், இலகுவானதகவும் உள்ளது. இதனால் வரலாற்று நோக்கில் வீட்டு வேலைகளில் பெரிதும் ஈடுபட்டு இருந்த பெண்கள் வெளியில் வேலை செய்வதும் தற்சார்பு பெறுவதும் சாத்திமாகியது. இதனால் பெண்கள் ஆண்களை தங்கி இருக்க வேண்டிய தேவை இல்லாமல் போகிறது.
வரலாறு
தொகுநுகர்வும் வணிகமும் மனித நாகரிகங்ககளின் தொடக்க காலம் முதலே இருந்து வருகின்றன. எனினும் பெருமக்கள் பல்வேறு வகையான பொருட்களையும் சேவைகளையும் நுகர்வதற்கான வசதி தொழிற்புரட்சியினால் 18-19 ம் நூற்றாண்டுகளில் ஏதுவானது. இதில் ஒரு முக்கிய திருப்பமாக 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஃகென்றி போர்ட் அறிமுகப்படுத்திய தொகுப்பு வரிசை உற்பத்தி முறையும், வின்சிலோ ரெய்லர் அறிமுகப்படுத்திய அறிவியல் மேலாண்மை முறைமைகளும் அமைந்தன. இவற்றினால் உற்பத்தித் திறன் பெருகி பெரும் உற்பத்தி சாத்தியமானது. பல தரப்பட்ட பொருட்கள் பெருந்தொகையில் உற்பத்தி செய்யப்பட்டு மலிந்த விலைக்கு விற்கப்படலாயின. இவ்வாறாக முதல் முதலாக ஐக்கிய அமெரிக்காவிலும், மேற்குநாடுகளிலும், யப்பானிலும் நுகர்வுச் சமூகங்கள் விருத்தி பெற்றன.
பெருந்தொகைப் பொருட்கள் இலகுவாக உற்பத்தி செய்யப்பட்டதால் அவற்றை சந்தைப்படுத்துவதற்கு உதவும் வகையின் விளம்பரத்துறை உருவாகி விரிவுபெற்றது. தொழிற்புரட்சியுடன் வளர்ச்சி பெற்ற அச்சு, வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் விளம்பரத்துறை இந்தப் பொருட்களை பெருமக்கள் நுகரத் தூண்டின.
இரண்டாம் உலகப் போரின் போது பல்வேறு போர்க் கருவிகளை உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புக்களை மேற்குநாடுகள் பெருக்கின. அப் போரின் முடிவின் பின்பு இந்த கட்டமைப்புகள் நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்து பெருமக்களுக்கு விற்பனை செய்யுமாறு மாற்றப்பட்டன. இதனால் பெருமக்களின் பொருள் வசதிகள் பல மடங்குகள் பெருகின.
1950 களின் கடன் அட்டைகள் விரிவாக அறிமுகமாகின. கடனுக்கு பொருட்களை வழங்குவதன் மூலம் தமது மிகு உற்பத்தியை நுகரப் பண்ணலாம் என்பதை வணிகங்கள் உணர்ந்தன. பின்னர கடன் வழங்குவது போன்ற நிதிச் செயற்பாடுகளும் பெரும் வணிகங்களாக மாறின.
1970 களின் இறுதியிலும் 1980 களின் தொடக்கத்திலும் டங் சியாவுபிங் தலைமையில் சீனா முதலாளித்துவ சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக மலிந்த விலையில் பெரும் உற்பத்தி செய்யும் கட்டமைப்பை சீனா பெற்றுக் கொண்டது. ஐக்கிய அமெரிக்க மற்றும் பிற மேற்குநாட்டு வணிகங்கள் இலாபம் கருதி தமது பல உற்பத்திகளை இங்கு நகர்த்தின. 2010 களில் உலக பொருளாதார நெருக்கடி காரணமாக சீனாவின் ஏற்றுப் பொருளாதாரம் பலவீனம் அடைய அது உள் நுகர்வியத்தை விருத்தி செய்வதை ஒரு முக்கிய அரச கொள்கையாக முன்னெடுக்கிறது.[1] 1989 ம் ஆண்டு சோவியத் ஒன்றியமும், 1991 ம் ஆண்டு இந்தியாவும் உலக தாரளமயக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டன. இதன் விளைவாக அந்த நாடுகளிள் மத்திய வர்க்கம் வளர்ச்சி பெற்றது. நுகர்வியம் விருத்தி பெற்றது.
உலக மயமாதலின் உந்துதால் உலகின் எல்லா நாடுகளும் நுகர்விய வீச்சுக்குள் வந்துள்ளன. பன்னாட்டுக் வணிகங்கள், உலகப் பொருளாதார அமைப்புகள், வங்கிகள், தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்கள் இதை ஏதுவாக்கின. மிகவும் ஏழையான கிராமங்களிலும் கூட பற்பசை, சோப், கோலா, சொண்டுப் பூச்சுப் போன்றவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சார்பு வாதங்கள்
தொகுபொருளியல் வளர்ச்சி
தொகுநுகர்வியம் பெரும் உற்பத்தியை ஊக்குவித்தது, பெருமக்களின் பொருள் வசதிகளைப் பெருக்கியது. முன்னர் காலத்தில் மேட்டுக்குடி மக்கள் மட்டும் அனுபவித்த பொருட்களையும் சேவைகளையும் முதல் முறையாக நுகர்வியமே பெருமக்கள் அனுபவிக்க வாய்ப்புத் தந்தது. சீனாவிலும், இந்தியாவிலும் பல நூறு மில்லியன் மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து மேலே வர இந்த நுகர்விய பொருளாதாரம் உதவி உள்ளது.
புத்தாக்கம்
தொகுநுகர்வியத்தின் உந்துதலான மேலும் மேலும் புதிய பொருட்களையும் சேவைகளையும் சந்தைக்கு கொண்டு வருதல் சமுக, அறிவியல், தொழில்நுட்ப புத்தாக்கத்தின் பெரும் மூலமாக இருக்கிறது. ஒரு புதிய புத்தாக்கம் அல்லது கண்டுபிப்பின் மூலம் அவற்றை நுகர்வோருக்கு வழங்கி தாம் பெரும் இலாபம் ஈட்டலாம் என்பது தொழில் முனைவோரின் ஒரு முக்கிய உந்தலாக இருக்கிறது. ஆய்வு மற்றும் விருத்தியை முதலீட்டின் பெரும் பகுதி வணிகங்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது.
தெரிவுச் சுதந்திரம்
தொகுநுகர்வு மனித சமூகத்தின் இயல்பான ஒரு வெளிப்பாடு. எந்தப் பொருளையும் சேவையும் நுகர்வது என்பது ஒருவருக்கும் இருக்கும் அடிப்படைஉரிமை. இதை அரசோ பிறரோ கட்டுப்படுத்தல் ஆகாது.
மரபுபை உடைத்தல்
தொகுஉலகின் அனைத்து சமயங்களும் நுகர்வை கருத்தியல் நோக்கில் எதிர்க்கின்றன. உள்ளுர் பொருளாதாரங்கள் மரபார்ந்த சமூக அல்லது சாதிக் கட்டமைப்புகளில் தங்கி இருக்கின்றன. பெண்கள் வீட்டுக்கு வெளியே தொழில் செய்வதும், நிதிச் தற்சார்பு பெறுவது அவர்கள் வீட்டு வேலைகளில் அமிழ்ந்து கிடந்தபோது சாத்தியம் ஆகவில்லை. இத்தகைய மரபார்ந்த சமூக கட்டமைப்புகளை நுகர்வியம் உடைக்கிறது. நுகர்வியத்தை நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, சமயப்பற்றுக்களை கடந்த பொருள் அடிப்படையிலான ஒரு கருத்தியல் ஆக பார்க்கலாம்.
விமர்சனங்கள்
தொகுபொருள்மைய வாழ்க்கை
தொகுநுகர்வியம் முதன்மையாக ஒரு பொருள்மைய வாழ்கையை உக்குவிக்கிறது. குடும்பம், உறவுகள், சமூக வாழ்வு, தொழில்நிறைவு போன்றவற்றுக்கு மாற்றாக நுகர்வை முன்னிறுத்துகிறது. தேவைகளுக்கு மிகையாக நுகர்வை ஊக்குவித்து ஒருவரின் நேரத்தை உழைப்பை சுவீகரிக்கிறது.
கடன்
தொகுகடந்த சில பத்தாண்டுகளாக கடன்கள் பெற்றே பெருமக்கள் நுகர்வை மேற்கொண்டுள்ளார்கள். இதனால் தனிநபர், குடும்ப, நாடுகள் கடன்கள் பூதமாகப் பெருகி உள்ளன. இந்தக் கடன் அழுத்தம் பேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு கெடுதலாக அமைந்துள்ளது.
சூழல் பாதிப்பு
தொகுநுகர்வியம் வேகமாக, முழுமையான விளைவுகளை பரிசீலிக்காமல் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி நுகர்வை ஊக்குவித்தது. இதனால் பல்வேறு சூழல் மாசடைதல், வள அழிவு, கழிவு அதிகரிப்பு அகியவை நிகழ்கின்றன.[2]வனவிலங்குகள், பறவைகள் மற்றும் பலவகை உயிரினங்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன. கட்டுப்பாடற்ற நுகர்வால், உடல் மற்றும் மனம் சார்ந்த கோளாறுகளும் நோய்களும் பல்கிப் பெருகி வருகின்றன.
அன்னியமாதல்
தொகுநுகர்வியம், குறிப்பாக அதன் முதலாளித்துவ தொகுப்பு வரிசை பெரும் உற்பத்தி முறைமை தொழிலாளர்கள் தாம் என்ன உற்பத்தி செய்கிறார்கள், ஏன் உற்பத்தி செய்கிறார்கள் என்றதில் இருந்த அன்னியப்படுத்தி வைத்திருக்கிறது. நுகர்பவர்களும் ஒரு பொருள் எங்கு, எப்படி, யாரால் உற்பத்தி செய்யப்பட்டது என்ற உறவில் இருந்து அன்னியப்பட்டு இருகிறார்கள். இந்த அன்னியமாதலால் உளவியல், சமூகவியல், பொருளியல், சூழலியல் தாக்கங்கள் ஏற்படுகின்றன.
ஒருமுகமாக்கல்
தொகுநுகர்வர்களுக்கு மேலும் மேலும் தேவைகளை உருவாக்குதல், ஒரே பொருளை சிறிய வேறுபாறுகளுடன் பெருமக்களுக்கு விற்பனை செய்தல், உலகமயமாதல் போன்ற நுகர்வியத்தின் அடிப்படைக் கூறுகள் பல்வேறு பண்பாடுகளையும் முறைமைகளை அழித்து அல்லது தேவையற்றவை ஆக்கி சமூக ஒருமுகமாக்கலைச் செய்கின்றன. உலகத்தில் இருந்த பல உணவு வழக்கங்கள், உடைகள், விளையாட்டுக்கள், ஆடற்கலைகள், தொழிற்கலைகள் போன்றவை அருகி ஒரே மாதிரியான வேக உணவுகள், ஒரே மாதிரியான உடைகள் போன்ற ஒருமுகமாதல் நிகழ்ந்துவருகிறது. எ.கா McDonaldization, Cocacolonization, Disneyfication. மொழி, கதையாடல்கள், நம்பிக்கைகள், அரசியல் சட்ட முறைமைகளும் இதே மாதிரியான ஒருமுகமாக்கலுக்கு உள்ளாகி உள்ளன. 6000 மேற்பட்ட மொழிகள் அழிந்து நுகர்வுப் பொருளாதாரத்தில் ஆதிகம் செலுத்தும் சில மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் சூழல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டும் ஆகும்.
மாற்றுக்கள்
தொகுநுகர்வியத்தின் மாற்றாக பல்வேறு வாழ்முறைகளும் நுணுக்கங்களும் பல நூற்றாண்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. எளிய வாழ்முறை, சிக்கன வாழ்முறை, திட்டக் குமுகங்கள், ஆமிசு போன்ற தனித்தியங்கும் குமுகங்கள், பிழைப்பியம், பொதுமங்கள், கூட்டு நுகர்வு, பகிர்வு, தானே செய்தல், சகா-சகா செயலாக்கம், நேர வங்கி, உள்ளூர் கொள்வனவு போன்றவை சில எடுத்துக்காட்டுக்கள். தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பங்கள் இத்தகைய மாற்றுக்கள் சிலவற்றாஇ நிறைவேற்றுவதற்கு உதவுகின்றன. எடுத்துக்காட்டாக ஒரே ஊரில் இருப்போர் இணையம் ஊடாக தமது சேவைகளை அல்லது தம்மிட இருப்பவற்றை பிறர் சேவைகளுக்கு அல்லது பொருட்களோடு பண்ட மாற்றுச் செய்யலாம். உழவர் சந்தைகள் இன்னோர் எடுத்துக்காட்டு.
ஆய்வும் கோட்பாடுகளும்
தொகுநுகர்வியம் வரலாற்றியல், சமூகவியல், உளவியல், பொருளியல், சந்தைப்படுத்தல் துறைகளில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
1899 ம் ஆண்டு தோர்சுரீன் வெப்லன் அவர்கள் வெளியிட்ட பொழுதுபோக்கு வர்க்கக் கோட்பாடு (The Theory of the Leisure Class) என்ற நூல் படிவளர்ச்சிக் கொள்கையைப் பயன்படுத்தி நுகர்வியத்தை விளக்க்கி விமர்சிக்கிறது.[3] ஒருவரின் பொருளியல் நடத்தைகள் பயன்பாடு கருதியோ, பகுத்தறிவின் அடிப்படையிலேயோ, அல்லது தனது உள் உந்தல்களாலோ தீர்மானிக்கப்படுவதில்லை என்றும். மாற்றாக பிறரை பார்த்து, பிறருக்கு கட்டுப்பட்டு, தொழில் பற்றால், பொற்றோரின் தாக்கத்தால், நோக்கமற்ற உந்தல்களால் பொருளியல் நடத்தைகள் நிகழ்கின்றது என்கிறார். ஒருவரின் சமூக-பொருளாதர நடத்தைக்களை படிவளர்ச்சி கொள்கை அடிப்படையில் விளக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று வாதிட்டார்.[4]எடுப்பு நுகர்வால் (conspicuous consumption) தமது அந்தசுதை உயர்த்தி காட்ட மக்கள் தமது வளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்கிறார். மனிதர்களின் நடத்தைகள் அந்தசுதை தேடி அமைகிறது என்றும் தமது மகிழ்ச்சியைத் தேடி அமையவில்லை என்றும் இவர் கூறுகிறார். எடுப்பு நுகர்வால், எடுப்பு பொழுது போக்குகளால் விளையும் எடுப்பு கழிவுகளையும் பாதிப்புகளை இவர் சாடுகிறார்.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Past, Present & Future of Consumerism in China – Interview with Karl Gerth (Part I & II)". Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2012-02-12.
- ↑ As Consumerism Spreads, Earth Suffers, Study Says By Hillary Mayell for National Geographic News January 12, 2004
- ↑ Thorstein Veblen,
- ↑ " human behaviour at the socio-economic level themselves require explanation in evolutionary terms" On the evolution of Thorstein Veblen's evolutionary economics
வெளி இணைப்புகள்
தொகு- ஊடகங்கள் வளர்த்தெடுக்கும் உலகமய நுகர்வியப் பண்பாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் - க.அருணபாரதி -(தமிழில்)