நூல் சேகரிப்பு
நூல் சேகரிப்பு என்பது, ஒருவர் தனக்கு ஆர்வமுள்ள நூல்களைச் சேகரித்தலைக் குறிக்கும். இது, நூல்களைத் தேடுதல், அவை இருக்கும் இடத்தை அறிதல், அவற்றைப் பெறுதல், ஒழுங்குபடுத்தல், விபரப்பட்டியல் தயாரித்தல், காட்சிக்கு வைத்தல், களஞ்சியப்படுத்தல், பேணுதல் என்பவற்றை உள்ளடக்கியது ஆகும்.
உண்மையான நூல் சேகரிப்பு, வாசிப்பதற்காக நூல்களை வாங்குவதினின்றும் வேறுபட்டது. 15 ஆம் நூற்றாண்டில் பிரான்சு, பர்கண்டிப் பிரபுக்களிடையே இருந்த படங்களோடு கூடிய கையெழுத்துப்படிகளைச் சேகரிக்கும் பழக்கத்திலிருந்தே நூல் சேகரிப்புத் தொடங்கி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அக்காலத்தில் அவர்கள் பழைய பிரதிகளை வாங்கியோ அல்லது புதிதாகப் படி எடுப்பித்தோ நூல்களைச் சேகரித்தனர். பர்கண்டியின் டியூக்கான பிலிப் என்பவருடைய சேகரிப்பே அவரது காலத்தில் மிகப்பெரிய தனிப்பட்ட சேகரிப்பாக இருந்ததாகத் தெரிகிறது. இவரது சேகரிப்பில் 600 க்கு மேற்பட்ட நூல்கள் இருந்தனவாம்.
அச்சிடும் முறைகளின் அறிமுகத்தைத் தொடர்ந்து, நூல்களின் விலைகள் பெருமளவு குறையலாயின. சீர்திருத்தக் காலத்தில் இங்கிலாந்திலும் பிற இடங்களிலும் நூல் சேகரிப்புக்குப் பெரும் ஊக்கம் கிடைத்தது. அக்காலத்தில் பல துறவி மடங்களில் இருந்த நூலகங்கள் பிரிக்கப்பட்டதுடன் அவற்றிலிருந்த நூல்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டன. ஆறாம் எட்வார்டின் அதிகாரிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், துறவிமடங்கள் ஆகியவற்றில் இருந்த நூலகங்களைக் குலைத்து அங்கிருந்த நூல்களை அகற்றினர். நூல்களைக் காப்பாற்றுவதற்காக, வசதியுள்ளவர்கள் அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினர்.
நூல் சேகரிப்பை இலகுவாகவும், அதிகம் செலவு இல்லாமலும்கூடச் செய்ய முடியும். பல கோடிக்கணக்கான பழையனவும் புதியனவுமான சேகரிப்புக்கு உகந்த நூல்கள் விற்பனைக்கு உள்ளன. ஆயிரக்கணக்கான நூல் விற்பனையாளர்கள் இவற்றை விற்பனை செய்கின்றனர். இணையவழியிலும் நூல்களை அபேபுக்சு, அலிபிரிசு, அமேசான் போன்ற விற்பனையாளர்களிடம் இருந்து வாங்க முடியும். மிகவும் அரிதான நூல்களைப் பணம்படைத்தவர்கள் மட்டுமே சேகரிக்க முடியும். குட்டன்பர்க் விவிலியம், திரு வில்லியம் சேக்சுப்பியரின் நகைச்சுவைகள், வரலாறுகள், துன்பியல்கள் போன்ற நூல்கள் இத்தகைய நூல்களுக்கு எடுத்துக் காட்டுகள். இவை மிகவும் பெறுமதி வாய்ந்தவை. நடுத்தர வசதி உள்ளவர்கள், தமக்குப் பிடித்த ஆக்கியோன் ஒருவரின் நூல்களையோ, தற்கால எழுத்தாளர்களின் முதல் பதிப்புக்களையோ, குறித்த தலைப்புச் சார்ந்த எல்லா நூல்களையுமோ சேகரிக்க முயலலாம். இவ்வாறான நூல்களின் விலைகள் அவற்றுக்கு இருக்கும் மதிப்பிலும், கிடைக்கக்கூடிய படிகளின் எண்ணிக்கையிலும், அவற்றின் நிலையிலும் தங்கியுள்ளன.
வகைகள், கருப்பொருள்கள், ஆர்வத்துறைகள்
தொகுகோடிக்கணக்கில் புத்தகங்கள் இருப்பதால் எல்லாவற்றையும் ஒருவர் சேர்த்துவிட முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சேர்த்தாலும் அதற்கு மதிப்பு இருக்காது. ஆதலால் நூல் சேகரிப்பவர்கள், ஒரு குறித்தவகை அல்லது அதன் ஒரு துணை வகையைச் சேர்ந்த நூல்களைச் சேகரிப்பது உண்டு. கதைகள் வாசிப்பவர்கள் தமக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவரின் எல்லா முதற் பதிப்புக்களையும் சேகரிக்கலாம். கவிதைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் பாரதியார், கண்ணதாசன் போன்ற ஒருவரைத் தெரிவு செய்து அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேகரிப்பதை நோக்கமாகக் கொள்ளலாம்.
குறித்த ஒரு நகரம் அல்லது ஒரு பகுதி பற்றி வெளிவந்த நூல்கள், ஒரு இனம் பற்றி வெளிவந்த நூல்கள் ஒரு குறித்த காலப்பகுதியில் வெளிவந்த நூல்கள் என பலவற்றைக் கருப்பொருளாகக்கொண்டு நூல் சேகரிக்க முடியும்.
மேலும் சில சேகரிப்புக்கான கருப்பொருள்கள்:
- குறித்த ஓவியரின் படங்களைக் கொண்ட நூல்கள்
- விருது பெற்ற நூல்கள்
- கலைத்தன்மை கொண்ட நூல்கள்
- குறித்த நூல் வடிவமைப்பு அல்லது கட்டும் வகையில் அமைந்த நூல்கள்
- நகைச்சுவை நூல்கள்
- படக்கதைகள்
- குறுநூல்கள்
- குறித்த பதிப்பகத்தின் நூல்கள்
- குறிப்பிட்ட தாள் வகையைப்பயன்படுத்திய நூல்கள்
- ஆக்கியோர்கள் கையெழுத்திட நூல்கள்
- பதிப்பின்போது பல்வேறு கட்டங்களிலும் அச்சிடப்பட்ட படிகள்.