நேதாஜி சுபாசு சந்திர போசு பன்னாட்டு வானூர்தி நிலையம் (வங்காள மொழி: নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর; Netaji Subhas Chandra Bose International Airport, (ஐஏடிஏ: CCU, ஐசிஏஓ: VECC)) இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது கொல்கத்தாவின் மையப்பகுதியிலிருந்து ஏறத்தாழ 17 km (11 mi) தொலைவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்திய விடுதலை வீரர் நேதாஜி சுபாசு சந்திர போசின் நினைவாகப் பெயர் மாற்றம் பெறுமுன்னர் இது டம் டம் வானூர்தி நிலையம் என அறியப்படலாயிற்று. 1670 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த நிலையம் கிழக்கு இந்தியாவில் மிகப் பெரியதாகும். மேற்கு வங்காளத்தில் செயற்பாட்டில் உள்ள இரு பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் இது ஒன்றாக உள்ளது; மற்றது பாக்டோக்ரா ஆகும். இந்திய வானூர்தி நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து மிகுந்தவற்றில் ஐந்தாவதாக உள்ளது. வடகிழக்கு இந்திய மாநிலங்களுக்குச் செல்வதற்கு இதுவே நுழைவாயிலாக உள்ளது. வங்காளதேசம், தென்கிழக்காசியாவில் உள்ள வானூர்தி நிலையங்களுக்குச் செல்லவும் மையமாக உள்ளது. புதுப்பிக்கப்பட்ட கொல்கத்தா வானூர்தி நிலையம் மார்ச்சு 2013இல் 233,000 சமீ (2,510,000 ச அடி) வணிக கட்டமைப்புக் கொண்ட புதிய முனையத்தை திறந்துள்ளது.