நோயெல் இம்மானுவேல்
பேரருட்திரு கிறித்தியான் நோயெல் இம்மானுவேல் (Christian Noel Emmanuel, பிறப்பு: 25 டிசம்பர் 1960) இலங்கைத் தமிழ் கத்தோலிக்க குருவும், திருகோணமலை மறைமாவட்டத்தின் தற்போதைய உரோமன் கத்தோலிக்க ஆயரும் ஆவார்.
பேரருட்திரு நோயெல் இம்மானுவேல் Noel Emmanuel | |
---|---|
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் | |
சபை | கத்தோலிக்க திருச்சபை |
மறைமாநிலம் | கொழும்பு |
மறைமாவட்டம் | திருகோணமலை |
ஆட்சி துவக்கம் | 3 சூன் 2015 |
முன்னிருந்தவர் | கிங்ஸ்லி சுவாம்பிள்ளை |
பிற தகவல்கள் | |
பிறப்பு | 25 திசம்பர் 1960 திருக்கோணமலை, இலங்கை |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுஇம்மானுவேல் அடிகள் திருகோணமலையில் பெரியகடை என்னும் இடத்தில் ஜூவகின் இம்மானுவேல், டொனேட்டா மேரி ஆகியோருக்கு நான்காவது பிள்ளையாக 1960 டிசம்பர் 25 இல் பிறந்தார்.[1] தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் பயின்று, தந்தையின் பணி இடமாற்றத்தை அடுத்து புத்தளம் புனித மரியாள் பாடசாலையில் இரண்டு ஆண்டுகள் பயின்று மீண்டும் திருகோம்ணமலை திரும்பி, அங்கு புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்வகுப்பில் கல்வி பயின்றார்.[1][2][3][4] பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் புனித யோசப்பு இளைய மடப்பள்ளியில் சேர்ந்தார். பின்னர் 1978-81 இல் கண்டி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மெய்யியல் பட்டம் பெற்றார்.[3][4] பின்னர் திருச்சி புனித பவுல் மடப்பள்ளியில் (1983-86) சேர்ந்தார்.[3][4]
பணி
தொகு1985 மார்ச் 12 இல் திருத்தொண்டராகவும், 1986 மே 21 இல் குருவாகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.[2][3][4] அதன் பின்னர் மட்டக்களப்பு மறைமாவட்ட முதன்மைப்பேராலயம்(1986-88), இருதயபுரம் (1988-89), அக்கரைப்பற்று (1989-93) ஆகிய ஆலயங்களில் பங்கு குருவாகப் பணியாற்றினார்.[3][4] 1999 - 2001 காலப்பகுதியில் ரோம் நகரில் அர்பேனியானா பல்கலைக்கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றார்.[3][4] இலங்கை திரும்பிய பின்னர் கண்டி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக (2001-11) நியமிக்கப்பட்டார்.[3][4] 2011 இல் திருகோனமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயர் பொதுப் பதில்குருவாக நியமிக்கப்பட்டார்.[3][4] 2012 இல் மறைமாவட்டத்தின் பொதுப் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.[3][4] திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஓய்வு பெற்றதை அடுத்து, இம்மானுவேல் 2015 சூன் 3 அன்று திருகோணமலை மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார்.[2][5] இவர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்படும் சடங்கு 2015 சூலை 24 இல் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.[6]
சமூகப் பணிகள்
தொகு'தவக்காலத்தில் இவர்களோடு' (2008) என்ற நூலையும், 'ஒப்புரவின் ஊடாக சமாதானம்' (2009) என்ற நூலையும் எழுதி வெளியிட்டார்.[1] 'தாகம்' என்ற பெயரில் கிறித்தவ சிந்தனைகள் அடங்கிய வெளியீடுகளை 2010-2011 காலப்பகுதியில் வெளியிட்டார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார். புனித சூசையப்பர் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கௌரவப் பொதுச் செயலாளராகவும், திருகோணமலை தமிழர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 ஜோ. நோர்மன் பல்த்தசார் (5 சூலை 2015). "திருமலை மண்ணின் முதல் ஆயர்". வீரகேசரி.
- ↑ 2.0 2.1 2.2 "Bishop Christian Noel Emmanuel". Catholic Hierarchy.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 "Pope appoints a new Bishop in Sri Lanka". வத்திக்கான் வானொலி. 3 சூன் 2015. http://en.radiovaticana.va/news/2015/06/03/pope_appoints_a_new_bishop_in_sri_lanka_/1148700.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 "Pope appoints a new Bishop in Sri Lanka". தி ஐலண்டு. 5 சூன் 2015 இம் மூலத்தில் இருந்து 2018-07-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180705092410/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=125963.
- ↑ "Fr. Noel Emmanuel new Bishop of Trincomalee". டெய்லி நியூஸ். 4 சூன் 2015 இம் மூலத்தில் இருந்து 2015-06-07 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150607051426/http://www.dailynews.lk/?q=local/fr-noel-emmanuel-new-bishop-trincomalee.
- ↑ "வணக்கத்துக்குரிய கிறிஸ்டியன் நோயல் இம்மானுவல், ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்". தமிழ்வின். 25 சூலை 2015. Archived from the original on 2015-07-29. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2015.