தொன்மம்

(பயனர்:TNSE KNRKAVINPAZHANI KRR/மணல்தொட்டி 18 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தொன்மம் (myth) என்பது 'பழமை' என்று பொருள்படும். இலக்கியங்களில் பழமையான கருத்துகளைப் பயன்படுத்துவது அல்லது எடுத்தாள்வது தொன்மங்கள் ஆகும். பழமை என்பதை வடமொழியில் புராணம் என்று அழைக்கப்படுகிறது. தொன்மங்களைப் பற்றி ஆராயும் துறை தொன்மவியல் ஆகும். தொன்மை இலக்கியங்களுக்கு இராமாயணமும், மகாபாரதமும் சான்றுகளாக உள்ளன. தொல்காப்பியர் தொன்மங்கள் குறித்து 'தொன்மைதானே உரையொடு புணர்ந்த பழைமைமேற்றே' என்கிறார். எந்த ஒரு இலக்கியத்தில் தொன்மங்கள் அதிகமாக உள்ளதோ அது பழம்பெரும் இலக்கியம் எனக் கருதப்படுகிறது.

சில தொன்மக் கதைகள் உண்மைச் சம்பவங்கள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்தாலும், காலப்போக்கில் அவை பல்வேறு திரிபுகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு அந்த உண்மைச் சம்பவங்கள் நோக்கிய விடயத் தகவல்கள் அரிதாகி போவதுண்டு. மகாவலிபுரத்தில் இருந்ததாகக் கூறப்படும் ஏழு கோயில்கள் பற்றய கதைகளை இந்த வகைக்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.[1]

பல தொன்மக் கதைகள் மனிதர்களால் இலக்கிய ரசனைக்காகப் புனையப்பட்ட கதைகள். இவற்றில் தகவல் கூற்றுக்கள் இருந்தாலும் இவை மனிதர்களால் புனையப்பட்ட அல்லது கற்பனை செய்யப்பட்ட கதைகள். தமிழில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் இவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு. வரலாற்று நிகழ்வுகளைப் பின்புலமாக வைத்து அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட பொன்னியின் செல்வனையும் சிலப்பதிகாரத்துடன் இந்த வகையில் ஒப்பிட்டு மேற்கூறிய கருத்தை மேலும் புரிந்துகொள்ளலாம்.

பொதுவாகத் தொன்மக் கதைகளில் மீவியற்கை நிகழ்வுகள் இருக்கும். மேலும் பல்வேறு கற்பனை உயிரினங்களும், சூழ்நிலைகளும், நிகழ்ச்சிகளும், செயல்களும் இருக்கும். இவற்றைத் தமிழ்ச் சூழலில் புராணங்கள் என்றும் குறிப்பிடுவர். இப்படியான கதைகளுக்கு விவிலியக் கதைகள் எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.

தொன்மக் கதைகளும் வரலாற்று நிகழ்வுகளும்

தொகு

பழங்காலத்தில் நடந்த நிகழ்வுகள் பலவற்றை கதை வழியாகவே நாம் இன்று அறியக்கூடியதாக உள்ளது. அப்படியான தொன்மக் கதைகளை நாம் இலக்கியத் தொன்மக் கதைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவசியம். இன்று இந்த வேறுபடுத்தல் சற்று சிக்கலாகவே இருக்கின்றது. எடுத்துக்காட்டாக குமரிக்கண்டம் நோக்கிய கதையாடல்களில் இந்தக் கருத்துக் குழப்பம் உண்டு.

அமையும் விதம்

தொகு

தொன்மங்கள் என்பது யாராலும் உருவாக்கப்படுவதில்லை. அவை தாமாகவே தோன்றுகின்றன. தொன்மச் செய்திகளில் குறிப்பிடப்படுபவர்கள் வரலாற்று நாயகர்கள் இல்லை. கற்பனையின் ஊற்றுக்கண்ணாக பிறப்பவர்கள் என்று கூறப்படுகிறது. தொன்மங்கள் உளவியலோடு பெரிதும் தொடர்புடையது. சமூகத்தின் கனவுகளையும், கற்பனைகளையும் கொண்டதாக அமைகிறது. அதோடு மட்டுமல்லாமல் தொன்மங்களுக்குக் காரணம் கற்பிக்க முடியாது.

தமிழ் இலக்கியங்களில் தொன்மம்

தொகு

தமிழ் இலக்கியங்களில் தொன்மங்கள் சார்ந்த பண்டைய புராணச் செய்திகள் இருக்கின்றது. இப்புராணச் செய்திகள் தற்கால வாழ்வியல் சிக்கல்களை எடுத்துரைப்பதற்கு மாற்று வடிவில் பயன்படுகின்றன. இராமயண, மகாபாரத செய்திகள், அகநானூறு, நற்றிணை, கலித்தொகை ஆகிய இலக்கியங்களில் தொன்மச் செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.

கலித்தொகையில் தொன்மம்

தொகு

இராவணன் கயிலை மலையைத் தூக்க முயன்ற செய்தியைக் கபிலர் கலித்தொகையில்,

    "இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
     உமையமர்ந்து உயர்மலை இருந்தன னாக
     ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
     தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
     எடுக்கல் செல்லாது உழப்பவன் போல" (கலி. 38)

என்ற பாடலின் வாயிலாக இராமாயணக் கதையை விளக்குகிறார். இதேபோல கலித்தொகைப் பாடல் எண் 25-ல் மகாபாரதக் கதையில் பாண்டவர்கள் அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

'முருகன்' சார்ந்த தொன்மம்

தொகு

தமிழில் முருகன் சார்ந்த தொன்மக் கருத்துக்கள் மிகுதியாக உள்ளன. அழகு, அச்சம், ஆற்றல், சினம், அழிவு ஆகியவற்றை உணர்த்த தமிழ்ப் புலவர்கள் தொன்மத்தைப் பயன்படுத்தியுள்ளனர். தெய்வம் ஏறி விளையாடுவதைச் சாமியாடல் என்றும், வெறியாடுதல் என்றும், அடக்க முடியாத சினத்தை முருகச் சீற்றம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    'முருகன் நற்போர் நெடுவேல் ஆவி' (அகம்.1)
    'முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்' (அகம்.156)
    'முருகச் சீற்றத்து உருகெழு குரிசில்' (புறம். 16)
    'சூர்நவை முருகன் சுற்றத் தன்ன' (புறம். 23)
    'முருகு இயன்றன்ற உருவினை ஆகி (மதுரைக் - 724)

முதலான பல பாடல்கள் முருகத் தொன்மங்களைச் சார்ந்து படைக்கப்பட்டுள்ளன.

உலக இலக்கியங்களில் தொன்மம்

தொகு

சுமேரிய இலக்கியத்தில் உலகத்தின் தோற்றம், கடற் பேரழிவுகள், உழவுத்தொழில் கருவிகளின் தோற்றம், கடவுளர் பிறப்பு, பாதாள உலகம் ஆகியவை சார்ந்து தொன்மச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. கிரேக்கத்தின் இலியடும், ஒடிசியும் தொன்மக் களஞ்சியங்களாக விளங்குகின்றன. ஹீசியட் எழுதிய 'தியோஜினி'என்ற இலக்கியம் கடவுளர்களின் பிறப்பையும், வாழ்க்கையையும் சுற்றி கூறப்பட்டுள்ளது. இவை போன்ற பல இலக்கியங்கள் தொன்மச் செய்திகளை தாங்கியுள்ளது.

சான்று

தொகு

மேற்கோள்கள்

தொகு
  • கி. இராசா, ஒப்பிலக்கியம், பார்த்திபன் பதிப்பகம், திருச்சி, ஆண்டு 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்மம்&oldid=4120748" இலிருந்து மீள்விக்கப்பட்டது