பர்வத மலை
பர்வத மலை என்பது, தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 4560 உயரமுள்ள ஒரு மலை ஆகும்.[1] இந்த மலை 26 கி.மீ சொற்றளவு உடையதாகும்.[2] மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.



பெயர்
தொகுபர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை, மலைகளின் அரசன் என்று பொருள்.[3] பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை என்ற வேறுபெயர்களும் உண்டு.
வரலாற்றுச் செய்தி
தொகுதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களைப்பற்றியும், அப்பகுதி மக்களைப்பற்றியும் குறிப்பிடும் ஒரே சங்க நூல் மலைபடுகடாம் ஆகும். பத்துப்பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப்பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. நவிரம் என்றால் மலை. மூங்கில் செழித்து வளரும் மலை எனப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இந்நூல், சிவனை காரியுண்டிக்கடவுள் என்று வழங்குகிறது.
மல்லிகார்சுனர் கோயில்
தொகுஇம்மலை மீதுள்ள மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
மலைக்கோயிலுக்குச் செல்லும் வழி
தொகுஇந்த மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம் வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து மலையடிவாரத்தை அடையலாம். இம்மலைக்குச் செல்வோர் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத்தொடங்குவர். மலைஏறும் வழி ஓரளவிற்கே வசதியான வழியாக அமைந்துள்ளது. பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியிலிருந்து வரும் பாதையும் தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும் பாதையும் ஒன்று சேர்கின்றன. இங்கிருந்து மேல்நோக்கி செல்லும் பகுதி நெட்டாக காணப்படும் இதற்கு குமரி நெட்டு என்று பெயர். இந்த இடத்தில் இயற்கையாய் அமைந்த சுனை (நீர் ஊற்று) உள்ளது, நீர் எடுப்பதற்கு கீழே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து உள்ளது கடப்பாறை நெட்டு. இம்மலையின் சிறப்பம்சமாக விளங்குவதே இந்த கடப்பாறை நெட்டாகும். ஆழமான பள்ளத்தாக்கிற்கு மேலே அமைந்துள்ள பாறைப் பாதையைக் கடக்க இந்த கடப்பாறை நெட்டு வழியாக ஏறிச் செல்லவேண்டும். இந்தக் கடப்பாறை நெட்டை ஏறியவுடன் இதற்கு அப்பால் இரண்டு பெரிய பாறைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றில் (மல்லிகார்ஜுனர்) சிவன் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ள இலிங்கம்,சிலைகளுக்கு பக்தர்களே நேரடியாக அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். மேலும் இக்கோயிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகனும் உள்ளார். இயற்கையான சூழலில் சுமார் 4560 அடி உயர மலையில் காணப்படும் இயற்கைக் காட்சிகளுக்காகவும், மூலிகைக் காற்றை சுவாசிக்கவுமே தற்போது அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.
இம்மலைக்கு வர வருடத்தின் அனைத்து நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் முழு நிலவன்று மலையேறுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மாலை வேளையில் மலையேறத்தொடங்கி இரவில் மலைக்கு வந்து இரவு முழுவதும் தங்கி மறுநாள் காலையில் மலையிலிருந்து இறங்கி விடுவது ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. மலையேறுபவர்கள் தங்களுக்கு தேவையான உணவு, நீர் போன்றவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். மலைப்பாதையில் வழித் துணையாக நாய்கள் (பைரவர்) வருகிறது என நம்பப்படுகிறது. இந்த நாய்கள் இந்த மலையில் வாழும் சித்தர்கள் என்று கூறப்படுகிறார்கள்.
கோட்டை
தொகுஇந்த மலைக் கோயிலை அடையும் வழியில் குறவன்கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. குறவன்நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும்விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ மாலை மலர் (2022-11-21). "பர்வதமலை மல்லிகார்ஜுனசாமி திருக்கோவில்". www.maalaimalar.com. Retrieved 2023-08-13.
- ↑ "Mallikarjunaswami Temple : Mallikarjunaswami Mallikarjunaswami Temple Details". temple.dinamalar.com. Retrieved 2023-08-12.
- ↑ "ஆகாயத்தில் ஒரு ஆலயம்: கயிலைக்கு அடுத்தபடியான பர்வதமலை ரகசியங்கள்!! -" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-12. Retrieved 2023-08-13.