பார்பதி குமார் கோசுவாமி
பார்பதி குமார் கோசுவாமி (Parbati Kumar Goswami)(பிறப்பு: ஜனவரி 1, 1913-1992) என்பவர் இந்திய நீதிபதி, அசாம் மற்றும் நாகாலாந்தின் ஆளுநர் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இவர் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் அசாமிய நீதிபதி ஆவார்.[1][2]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகோசுவாமி 1913-ல் பிரித்தானிய இந்தியாவின் அசாமில் பிறந்தார். இவரது தந்தை பாம்தேப் கோசுவாமி மற்றும் தாய் ஜோகதா தேவி ஆவர். இவர் சிவசாகரில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் பயின்றார். காட்டன் கல்லூரியில் முதல் வகுப்பிலும், குணபிரம் பரூவா வெள்ளிப் பதக்கத்துடன் இளங்கலையில் தேர்ச்சி பெற்றார். குவகாத்தியில் உள்ள ஏர்லே சட்டக் கல்லூரியில் இளநிலைச் சட்டப்படிப்பினை முடித்தார்.[3]
பணி
தொகுகோசுவாமி முதலில் 1938-ல் திப்ருகாரில் வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் 1943-ல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பணியினைத் தொடர்ந்தார். 1947 முதல் 1949 வரை அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவர் 1953-ல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அசாம் மாநில சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 1967-ல் கோசுவாமி அசாம் நாகாலாந்து உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[4] பின்னர் அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆனார். திசம்பர் 1970 முதல் சனவரி 1971 வரை இவர் அசாம் மற்றும் நாகாலாந்து கவர்னராகப் பொறுப்பேற்றார். இவர் ஜெனீவாவில் உள்ள நீதிபதிகளின் உலக சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். அக்டோபர் 10, 1973 அன்று நீதிபதி கோசுவாமி, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டு[3] திசம்பர் 31, 1977 வரை பணியாற்றி ஓய்வு பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dibrugarh exults over new CJI". Assam Tribune. 4 October 2018.
- ↑ "First Assamese Justice in Supreme Court of India?". பார்க்கப்பட்ட நாள் 9 November 2018.
- ↑ 3.0 3.1 "Former Judges". Archived from the original on 2018-11-09. பார்க்கப்பட்ட நாள் 9 November 2018.
- ↑ "Judges Profile". பார்க்கப்பட்ட நாள் 9 November 2018.