பிட்சாடனர்

சிவ வடிவங்களில் ஒன்றான
பலிதேர் பிரான்
பிட்சாடனர்
பிட்சாடனர்
மூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்: தாருகா வன முனிவர்களின்
ஆணவம் அழித்த கோலம்
அடையாளம்: அம்மணக் கோலம்
துணை: மோகினி
வாகனம்: மான்

பிச்சாடனர் என்றும் பலிதேர் பிரான் என்றும் ஐயங்கொள் பெம்மான்[1] என்றும் அழைக்கப்படுவது, சிவபெருமானின் பிச்சையேற்கும் வடிவிலமைந்த திருக்கோலம் ஆகும். இது இருபத்து நான்கு மற்றும் அறுபத்துநான்கு சிவமூர்த்தங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இக்கோலம் தாருகா வன முனிவர்கள் ஆணவத்தினை அழிப்பதற்காக சிவனார் எடுத்த கோலமாகும். சோழர் காலக் கல்வெட்டுகள், இவரைப் "பிச்சதேவர்" என்கின்றன.[2]

தோற்றம் தொகு

ஈசனின் இத்திருவுருவை திருமுறைகள் பலவாறு புகழ்ந்துபோற்றுகின்றன. மணிவாசகர் "ஆரூர் எம் பிச்சைத் தேவா"[3] என்று பாடுகின்றார். இலிங்க புராணம் உள்ளிட்ட புராணங்களில், தாருகாவனத்திருடிகளின் ஆணவம் அடக்கிய ஈசனின் அருளாடல் வியந்தோதப்படுகின்றது. வைரவரும் இக்கோலமும் கிட்டத்தட்ட ஒன்று போலவே தோற்றமளிக்கும் எனினும், வைரவர் ஆங்காரமாகவும், இவர் பெருவனப்போடும் காட்சியருள்வார். காலில் பாதுகை காணப்படுவதும் பொதுவாக வைரவர்க்கன்றி பலிதேர்பிரானுக்கு மாத்திரமுள்ள சிறப்பம்சமாகும்.[4]

வெண்ணீறு பூசி, பாதங்களில் பாதக்குறடு தாங்கி, வலக்கரத்தில் புற்கட்டும் மானும், இடக்கரத்தில் சூலமும் பிச்சையோடும் என்று நாற்கரத்தினராக பலிதேர்பிரான் சித்தரிக்கப்படுவார். கருணை பொழியும் கண்களும், காண்பாரை மயக்கும் கட்டழகும், பிறந்தமேனியுமாய் அவர் காணப்படுவார். அருகே மோகினியையும், தாருகாவனத்து மகளிரையும், பூதகணங்களையும் சித்தரிப்பதும் மரபு.[5]

தொன்மம் தொகு

தாருகா வன முனிவர்கள் மற்றும் அவர்களுடைய மனைவியர்கள், கடவுட் கொள்கையில் நம்பிக்கையின்றி, இறைவனை மதியாது, வேள்வியே தெய்வமென மயங்கி நின்றனர். வேத நெறிகளையும் சில கடமைகளையும் மட்டுமே மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர். இறைவனை மதியாத தாருகா வனத்து முனி குடும்பத்தவர்களை நல்வழிப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட ஈசனார், திருமாலை மோகினி வேடத்தில் வரச்செய்து, தாம் பேரழகு பொலியும் இளைஞனாகக் கோலம் கொண்டு, தாருகாவனத்துள் அழகிய பிச்சாண்டவர் (பிட்சை எடுக்கும் கோலம்) கோலத்தில் சென்றார்.

பிச்சாண்டவரின் வடிவழகைக் கண்ட முனி பெண்டிர் காதல் வயப்பட்டு, தங்கள் கணவர்களை விட்டு விட்டு, பிச்சாண்டவர் பின்னே சென்றனர். மோகினியின் அழகில் முனிவரும் மயங்கிச் சொல்லழிந்து, ஆசைவயப்பட்டு குழம்பினர். அவர்களுக்குச் சுயநினைவு வந்தபோது, தாமும் தம் மனைவியரும் நிற்கும் கோலத்தை உணர்ந்து சீற்றமுற்று, சிவனாரை அழிக்க அபிசார வேள்வி இயற்றலாயினர். அதிலிருந்து தோன்றிய புலி, யானை, பாம்பு, சூலம், மான், பாம்பு, பூதப்படை, வெண்தலை, உடுக்கை, முதலியவைகளை ஒவ்வொன்றாகச் கொல்லுமாறு ஏவினர். ஆனால் அப்படைகள் பிச்சாண்டவரைக் கொல்லும் ஆற்றல் இல்லாது போய் பிச்சாண்டவருக்கே ஆடையாய், அணியாய், கருவியாய் அடைக்கலம் புகுந்தன. இறுதியாக அவ்வேள்வியில் தோன்றிய முயலகனையும், வேள்வித் தீயையும் ஏவினார்கள். முயலகன் பிச்சாண்டவரின் திருவடியில் அமர்ந்தான். வேள்வித் தீ, ஒரு திருக்கையில் அமர்ந்தது. ஈசன் யாகத்தீயைக் கையிலேந்தித் திருநடம் புரிய, வந்திருப்பது முழுமுதற்பரமே என்றுணர்ந்த முனிபுங்கவர்கள் தம் தவறுணர்ந்து, நல்லறிவு பெற்று ஈசனை வணங்கினர்.[6] சிவபெருமான், தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய முயலகன், வேள்வித் தீ, உடுக்கை, மான், பாம்பு, பூத கணங்கள், புலி, சூலம் ஆகியவைகள் ஆடையாகவும், அணிகலன்களாகவும், ஆயுதங்களாகவும் ஏற்றுக் கொண்டார்.[7]

கோயில்கள் தொகு

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இத்திருக்கோலத்தின் பேரழகு பொலியும் சிற்பமொன்றுள்ளது.[8] திருவண்ணாமலை முதலான சில சிவத்தலங்களின் உற்சவத்தின் போது, பலிதேர்பிரானுக்கென ஓர் நாளொதுக்கி, அவரை திருவீதியுலாவுக்கு எழுந்தருள்விக்கும் பிட்சாடனத் திருவிழா இடம்பெறுவதுண்டு. சிதம்பரத்தில் உற்சவத்தின் எட்டாம் நாள் இரவு தங்க இரதத்தில் பலிதேர்பிரானின் வீதியுலா நடைபெறும்.திருக்கழுக்குன்றம் சித்திரை பெருவிழா ஒன்பதாம் நாள் அன்று மாலை பிக்ஷாடானர் திருவீதியுலா நடைபெறும்.

மேற்கோள்கள் தொகு

  1. ஐயம், பலி என்பன பிச்சையைக் குறிக்கும்.
  2. பிட்சாடனர்
  3. திருச்சதகம் 81ஆம் பாடல்
  4. Morris, Kate (2006), History, Lotus Press, ISBN 9788189093372
  5. சைவம் வலைத்தளம்
  6. பிட்சாடன மூர்த்தி தினமலர் கட்டுரை
  7. பிட்சாடன மூர்த்தி
  8. D, Devakunjari (1979), Madurai Through the Ages: From the Earliest Times to 1801 A.D., ISBN 9788189093372 {{citation}}: Unknown parameter |Publisher= ignored (|publisher= suggested) (help)

உசாத்துணைகள் தொகு

  • Nākacāmi, Irāmaccantiran̲ (2003), Facets of South Indian art and architecture, Aryan Books International, ISBN 9788173052460
  • Elements of Hindu iconography. Vol. 2, Motilal Banarsidass Publishe, 1997, ISBN 9788120808775
  • Dehejia, Vidya (2013), Art of the Imperial Cholas, Columbia University Press, ISBN 9780231515245

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்சாடனர்&oldid=3430405" இலிருந்து மீள்விக்கப்பட்டது