பின்நவீனத்துவம்

(பின் நவீனத்துவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உருவான புதிய சிந்தனைப்போக்கு நவீனத்துவம் (மாடர்னிசம்) என்று சொல்லப்படுகிறது.[1] அந்தப்போக்கு காலாவதியாகிவிட்டது என்று மறுக்கும் போக்குக்கு பின்நவீனத்துவம் என்று பெயர்.

பின்நவீனத்துவக் கட்டட வடிவமைப்பைச் சித்தரிக்கும் கட்டடம்

நவீன தொழில்நுட்பம் உலகை ஒன்றாக்கியது. அனைத்தையும் இணைத்தது. தொழிற்சாலை ,பள்ளி, நவீன போக்குவரத்து, உலகளாவிய ஊடகம் ஆகியவற்றை உருவாக்கியது. அதன் விளைவாக சில மனநிலைகள் உருவாகின. எல்லா கருத்துக்களையும் ஒட்டுமொத்த உலகவரலாற்று பின்னணியில் வைத்துப்பார்ப்பது, எல்லாவற்றுக்கும் சாராம்சம் தேடுவது, எல்லாவற்றையும் தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள முயல்வது, எல்லாவற்றையும் முரண்இருமை (பைனரி) பார்ப்பது போன்றவை அதன் வழிகள். இதுவே நவீனத்துவம்.

சொல் வரலாறு

தொகு

பின்நவீனத்துவம் என்ற பதம் முதன்முதலில் 1870 களிலேயே பாவிக்கப்பட்டது. ஜான் வாட்கின்ஸ் சாப்மேன் என்பவர் ஒரு பின்நவீனத்துவப் பாணியிலமைந்த ஓவியத்தை பிரெஞ்சு தனித்தன்மைக்கு அப்பால் செல்ல ஒரு வழி எனப் பரிந்துரைத்தார்.[2]

வரலாறு

தொகு

பின் நவீனத்துவம் அதை மறுக்கிறது. பின் நவீனத்துவம் நான்கு விஷயங்களை மறுக்கிறது.

  1. அது எதையும் உலகளாவியதாகப் பார்ப்பதில்லை. ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்கிறது. வட்டாரப்படுத்துகிறது
  2. அது வரலாற்றை ஒரு அர்த்தபூர்வமான ஓட்டமாக பார்ப்பதில்லை. ஆகவே வரலாற்றை தர்க்கபூர்வமாக அலசும் வரலாற்றுவாதத்தை நிராகரிக்கிறது.
  3. அது இரட்டைப்படுத்துதலை ஏற்பதில்லை. முதலாளி தொழிலாளி, இயற்கை மனிதன் போன்ற முரண் இருமைகளை அது மறுக்கிறது மையநோக்கை ஏற்பதில்லை. மையம் அதிகாரம் மூலம் உருவாக்கப்படுவது என நினைக்கிறது.
  4. எல்லாவற்றையும் முழுமையாகத் தர்க்கப்படுத்த முடியாது என அது சொல்கிறது. மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. அவையே இலக்கியம் போன்ற கலைகளை உருவாக்குகின்றன. இதை உன்னதமாக்கல் [சப்ளிமேஷன்] என்று சொல்கிறார்கள்.

தமிழில் பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்தவர்கள் தமிழவன், நாகார்ஜுனன், பிரேம், ரமேஷ் பிரேதன், க பூரணசந்திரன், நோயல் இருதயராஜ், எம். டி. முத்துக்குமாராசாமி, கோணங்கி, ச. ராஜநாயகம் போன்றவர்கள். அதை எதிர்த்து எழுதியவர்கள் எஸ்.வி.ராஜதுரை போன்ற மார்க்ஸியர்கள் ,சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி போன்ற அழகியல்வாதிகள். ஞானி அதை மார்க்ஸியத்துடன் இணைத்து சிந்தனைசெய்தார்.

கலை இலக்கியம் எனும் எல்லைப்பாடுகளைக் கடந்து தற்போது அது தத்துவம், அரசியல், வாழ்க்கைமுறை, தொழினுட்பம், கட்டடக்கலை, நாடகம், சினிமா போன்ற களங்களை நோக்கியும் விரிந்து வருகிறது. பின்நவீன யுகம் எனும் வரலாற்றுக் காலகட்டத்தை அது குறிப்பதாகப் பின்னை நவீன வாதிகள் கருதுகின்றனர்.

பின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோ, லக்கான், தெரிதா போன்றோர், அவர்களைத்தொடந்ர்து லியத்தார்ட், பௌதலியார்ட், டெலூஸ் ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின் நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.

இப்போக்கானது இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது எனக் கூறப்படுகிறது. ஒழுங்குப்படுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாகப் பின் நவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது.

இது, தீவிர சிக்கற்றன்மை, முரண்பாடு, குழப்பநிலை, பல்வகைமை, தம்மிடைத் தொடர்புடைமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. பின்நவீனத்துவம் இலக்கியத்தில் ஒருங்கிணைவுள்ள பிரதிக்கு எதிராக பேசியது. ஆகவே சிதறுண்ட வடிவம் கொண்ட நூல்கள் பல உருவாயின. பிரேம் ரமேஷின் எரிக்கப்பட்ட பிரதிகளும் புதைக்கப்பட்ட மனிதர்களும், சொல் என்றொரு சொல் சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி போன்றவை இவ்வகை நாவல்கள்

பின்நவீனத்துவம் மீபுனைவு [மெடபிக்‌ஷன்] களை உருவாக்கியது. கதைசொல்லுவதையும் கதைக்குள் சேர்த்துக்கொண்டு எழுதுவதைப்பற்றியே எழுதக்கூடிய புனைவுகள் இவை. உள்ளுக்குள்ளேயே சுழலக்கூடியவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம்,சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஸியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், பின்தொடரும் நிழலின் குரல் யுவன் சந்திரசேகரின் மணற்கேணி, வெளியேற்றம் முதலியவை இவ்வகைப்பட்டவை.

பின்நவீனத்துவம் பழைய ஆக்கங்களை மீண்டும் எழுதும் வகையையும் உருவாக்கியது. ஜெயமோகனின் 'கொற்றவை' அவ்வகைப்பட்டது. அது சிலப்பதிகாரத்தை மீண்டும் எழுதுகிறது. பின் நவீனத்துவம் வரலாற்றைத் திரித்துச் சுதந்திரமாக எழுதும் வகையை அறிமுகம் செய்தது. பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை உதாரணம்

பின்நவீனத்துவம் மொழியைச் சிதைப்பதும், கதைகளைச் சிதைப்பதும், மொழியின் கவித்துவத்தை வெளிப்படுத்துவதும் ஆன புதிர்த்தன்மை கொண்டதாகப் புனைவுகளைப் படைத்தது. கோணங்கியின் பாழி, பிதிரா நாவல்களும், உப்புகத்தியில் மறையும் சிறுத்தைகள், பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் போன்ற சிறுகதைகளும் இவ்வகைப்பட்டது. வாசகர்ளைத் தீவிரமாகச் சிந்திக்கத்தூண்டும் புதிர்நடை எழுத்துவகையைச் சேர்ந்தவை.

ஆனால் பின்நவீனத்துவ இலக்கியம் என ஒன்று இல்லை. பின்நவீனத்துவ சாயல் கொண்டவை என்று மட்டுமே படைப்புகளை அடையாளம் செய்ய முடியும்.

பின்நவீனத்துவம் மீதான விமர்சனங்கள்

தொகு

அலன் சோகல், என்ற பௌதீகவியலாளர் எழுதிய கட்டுரை ஒன்றை சமூகப்பிரதி (Social Text) என்னும் சஞ்சிகை பிரசுரித்தது. அது ஒரு நையாண்டிப் போலிக் கட்டுரையாகும். லக்கான், ஜூலியா கிறிஸ்தோவா, இரிகரி, புரூனோ லத்தூர், போத்ரியால், டெல்யூஸ், கட்டாரி, போர்ல் விரிலியோ ஆகிய பின்னவீனத்துவம் சார் தத்துவவியலாளர்கள் கணிதம், பௌதீகம், உயிரியல், மொழியியல் போன்ற துறைசார் சொற்களையும் சமன்பாடுகளையும் முறையற்றுப் பயன்படுத்துகின்றார்கள் என்ற விமர்சனத்தின் பால் இக்கட்டுரையை அலன் சோகல் எழுதினார். அவர் பொய்யாக தகவல்களைக் கொடுத்து எழுதிய கட்டுரையை எவ்வித சரிபார்ப்பும் இல்லாமல் சமூகப்பிரதி பிரசுரித்தது. சொக்கல் அதன் பின் தான் எழுதியது பின்நவீனத்துவத்தை அம்பலப்படுத்தவே என்று வெளிப்படுத்தினார்

பின்நவீனத்துவம் மார்க்ஸியத்தை நிராகரிக்கிறது. காரணம் அது வரலாற்றுவாத நோக்கு உள்ளது என்பதே. மார்க்ஸியர்கள் பின் நவீனத்துவத்துடன் உரையாடியதன் விளைவாக உருவானதே புதுவரலாற்றுவாதம். அவர்கள் பின்நவீனத்துவத்தை நிராகரிக்கிறார்கள்.

இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ruth Reichl, Cook's November 1989; American Heritage Dictionary's definition of "postmodern" பரணிடப்பட்டது 2009-02-25 at the வந்தவழி இயந்திரம்
  2. The Postmodern Turn, Essays in Postmodern Theory and Culture, Ohio University Press, 1987. p12ff
"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்நவீனத்துவம்&oldid=3909223" இலிருந்து மீள்விக்கப்பட்டது