பிராசாத நூல்கள்

இந்து சமயத்தில், பிராசாத நூல்கள் இறைவனின் இருக்கை நிலைகளை மனத்தில் கொண்டு அவனை அடைவதற்கு உரிய நெறிகளைக் காட்டுகின்றன. பிராசாதம் என்னும் சொல் இறைவனின் கோலத்தைக் குறிக்கும். இது கலைக்கோலம். இதனை யோகமுத்திரை எனவும் கூறுவர். இந்த யோகமுத்திரைக் கலையை யோகநெறி எனவும் கூறுவர். இது ஓர் அகநெறி. மனப்பக்குவம். மனப்பயிற்சியும் ஆம். தத்துவப் பிரகாசம் என்னும் நூலில் இது விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.[1]

உமையம்மையின் 'மேதாதி ஈரெட்டு' (16) இருக்கை நிலைகள் (திருமந்திரம்)

இக்காலத்தில் இறைவனின் கோலமான திருநீறு போன்ற பொருள்களையும், இறைவனுக்குப் படையல் செய்த பொருள்களையும் குறிக்கும் வகையில் ‘பிரசாதம்’ என்னும் சொல்லைப் பயன்படுத்திவருகின்றனர். பிராசாதம் வேறு. பிரசாதம் வேறு.

திருமந்திரம் [2] பிராசாதத்தை ‘மேதாதி ஈரெட்டு’ என்று குறிப்பிடுகிறது.[3]

கோபப் பிரசாதம் [4] என்னும் நூல் நூலாசிரியரின் சினக்கோலத்தை விரித்துரைக்கிறது.

அடுத்து இறைவனை அடைவதற்கு உரிய பிரசாதத்தை [5] விளக்கும் நூல்கள் தோன்றின.

பிராசாதம் - விளக்கம் [6]தொகு

உணவுப் பொருள்களைச் சாத(க)ம் செய்து உண்கிறோம். அதுபோல பிராண வாயுவைச் சாத(க)ம் செய்து உடலுக்கு வலிமையாக்கிக்கொள்வது 'யோகப் பிராசாதம்'

இறைவனை அடைவதற்கு உரிய வழிகள் இந்து மதத்தில் பலவாறாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சைவ சித்தாந்தம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளைக் காட்டுகிறது. 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிவஞான சித்தியாரரை வழிமொழிந்து பல நூல்கள் இவற்றை விளக்குகின்றன. அவை இவற்றின் ஒரு பகுதியாகிய யோகத்தை மட்டும் பிராசாதம் என்னும் பெயரில் விளக்குகின்றன.

சிவஞான சித்தியார் யோகத்தை 'சகமார்க்கம்' எனக் கூறுகிறது. இது புலனை ஒடுக்கும் நெறி. இதனை அட்டாங்க யோகம் என்பர். இதனைப் பதஞ்சலியின் யோகம் எனச் சைவ சித்தாந்தம் கருதுவதில்லை. இறைவனை அடைவதற்கு உரிய படிகளாகவே கொள்கின்றன.

சைவத்தில் சொல்லப்படுவது பிராசாத யோகம். இது 16 கலை உறுப்புகளைக் கொண்டது.

மேதை
அருக்கீசம்
விடகலை
விந்து
அர்த்தசந்திரன்
நிரோதினி
நாதம்
நாதாந்தம்
சத்தி
வியாபினை
வியோமரூபினி
அனந்தை
அனாதை
அனாசிருதை
சமனை
உன்மனை

பிராசாத நூல்கள்தொகு
நூல் தோன்றிய நூற்றாண்டு நூலின் ஆசிரியர் நூல்
14 சீர்காழித் தத்துவப் பிரகாசர் தத்துவப் பிரகாசம் 15 பாடல்கள்
14 அம்பலவாணத் தம்பிரான் பிராசாத அகவல்
15 கண்ணுடைய வள்ளல் என்பவரின் மாணாக்கர் பிராசாத தீபம் 37 பாடல்கள்
16 கமலை ஞானப்பிரகாசர் பிராசாத மாலை
16 குருஞான சம்பந்தர் சோடச கலாப் பிரசாத சட்கம்
சில பிராசாத இருக்கைநிலைகளைக் காட்டும் படங்கள்தொகு

அடிக்குறிப்புதொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 171. 
  2. 5 ஆம் நூற்றாண்டு
  3. மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல், வேதாதி நூலில் விளங்கும் பாராபரை (திருமந்திரம் 1070) உமையம்மை 16 இருக்கை நிலைகளில் காட்சி தருவாளாம்.
  4. 10 ஆம் நூற்றாண்டு
  5. கோலத்தை, யோகநிலைகளை
  6. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 217. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராசாத_நூல்கள்&oldid=1535118" இருந்து மீள்விக்கப்பட்டது