பிரேசிலின் விடுதலை
பிரேசிலின் விடுதலை (Independence of Brazil) 1821–1824 காலகட்டத்தில் நிகழ்ந்த தொடர்ச்சியான அரசியல் நிகழ்வுகளை குறிப்பதாகும். இந்தக் காலகட்டத்தில் பிரேசில் பேரரசு கோரிய விடுதலையை எதிர்த்து பிரேசிலுக்கும் போர்த்துக்கல்லிற்கும் இடையே பிணக்கு உண்டாயிற்று. பிரேசிலின் விடுதலையை இளவரசர் டொம் பெட்ரோ அறிவித்த செப்டம்பர் 7ஆம் நாள் பிரேசிலின் விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. முறையான அங்கீகாரம் பிரேசிலிற்கும் போர்த்துக்கல்லிற்கும் இடையே கையொப்பமிட்ட உடன்பாட்டின்படி 1825 இலையுதிர்காலத்தில் கிடைத்தது.
பின்னணி
தொகுபிரேசிலின் துவக்க காலம்
தொகுபெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் தலைமையில் போர்த்துக்கேயர்களின் கப்பல் வந்திறங்கிய ஏப்ரல் 1500 முதல் தற்போதைய பிரேசில் உள்ளடங்கிய நிலப்பகுதிக்கு போர்த்துக்கல் உரிமை கோரி வந்துள்ளது. துபி-குவரானி மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடிகளின் உள்நாட்டு எதிர்ப்புகளை போர்த்துகல் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
1532இல் முதல் குடியேற்றம் நிகழ்ந்தபோதும் 1534இலிருந்துதான் குடிமைப்படுத்தல் துவங்கியது. போர்த்துகல் அரசர் யோவான் III இப்பகுதியை பதினைந்து மரபுவழி நிலக்கிழார்களுக்கு உரிமையாக்கினார். இந்த நிர்வாக அமைப்பு பிரச்சினைகளை உருவாக்கியது. இதனால் இந்தக் குடியேற்றங்களை நிர்வகிக்க 1549இல் அரசர் தலைமை ஆளுநர் ஒருவரை நியமித்தார். உள்ளூர் பங்குடிகளுடன் சில போர்த்துக்கேயர்கள் தன்மயமாயினர்; பல பழங்குடி இனத்தினர் நீண்ட போர்களிலும் ஐரோப்பியர்களால் கொணரப்பட்ட நோய்களாலும் உயிரிழந்தனர்.
16வது நூற்றாண்டின் மத்தியில் சர்க்கரை பிரேசிலின் முதன்மையாற ஏற்றுமதிப் பொருளாக இருந்தது. இதன் உற்பத்தியே மேலும் கூட்டிட 1700இல் அத்திலாந்திக்கு பெருங்கடலுக்கு அப்பாலிலிருந்து 963,000 ஆபிரிக்க அடிமைகள் கொணரப்பட்டனர். அமெரிக்காவின் பிறபகுதிகளை விடக் கூடுதலான ஆபிரிக்கர்கள் பிரேசிலுக்குக் கொணரப்பட்டனர்.[1]
பிரெஞ்சுப் படைகளுடன் போரிட்டு பிரேசில் தென்கிழக்கிலும் வடமேற்கிலும் தனது நிலப்பகுதியை விரிவாக்கியது. 1567இல் இரியோ டி செனீரோவையும் 1615இல் சாவோ லூயிசையும் கையகப்படுத்தினர். அமேசான் காட்டுப் பகுதிக்குள் தங்கள் படைகளை அனுப்பி ஆங்கிலேய, டச்சுக் குடியேற்றங்களையும் கைப்பற்றினர். 1669இலிருந்து இப்பகுதியில் சிற்றூர்களையும் கோட்டைகளையும் நிறுவினர். 1680இல் தெற்கில் நீண்டதொலைவு சென்று தற்போதைய உருகுவை உள்ள இரியோ டி லா பிளாட்டா ஆற்றங்கரையில் சாக்ரமென்டோவை நிறுவினர்.
17வது யூற்றாண்டின் இறுதியில் சர்க்கரை ஏற்றுமதி குறையத் தொடங்கியது. அதே காலத்தில் பிற்காலத்தில் மினாசு ஜெராயிசு (பொதுச் சுரங்கங்கள்) என்றழைக்கப்பட்ட நிலப்பகுதியில் தங்கம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்தச் சுரங்களில் தங்கத்தை நாடி பிரேசிலிலிருந்தும் போர்த்துக்கல்லில் இருந்தும் ஏராளமானோர் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.
எசுப்பானியர்கள் தங்களுக்குரியதாக கோரிய பகுதிகளில் போர்த்துக்கேய விரிவாக்கத்தைத் தடுத்தனர். 1777இல் பந்தா ஓரியன்டல் என்றழைக்கப்பட்ட பகுதியைக் கைப்பற்றினர். இருப்பினும் அந்தாண்டு ஏற்பட்ட சான் இல்டிபொன்சோ முதலாம் உடன்பாட்டின்படி போர்த்துக்கல்லால் விரிவாக்கப்பட்ட பகுதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
குடிமைப்பட்ட நாட்டிலிருந்து ஐக்கிய இராச்சியமாக
தொகு1807இல் நெப்போலியப் படைகள் போர்த்துக்கலில் நுழைந்தபோது போர்த்துக்கேய அரசக் குடும்பம் பிரேசிலுக்குத் தப்பியோடினர்; இரியோ டி செனீரோவை போர்த்துக்கல்லின் தற்காலிகத் தலைநகராகக் கொண்டனர். இதனால் பிரேசிலில் தனிப்பட்ட நாட்டுக்குரிய அரசு அங்கங்கள் உருவாகத் தொடங்கின. பிரேசில் மற்ற நாடுகளுடன் தன்னிச்சையாக வணிகம் புரிய இயன்றது. 1815இல் நெப்போலியனது படைகளைத் தோற்கடித்த பிறகு பிரேசிலில் தலைநகரை பராமரிக்கவும் மீண்டும் தாங்கள் குடிமைப்படுத்தப்படுவோமோ என்ற பிரேசிலியர்களின் அச்சத்தை நீக்கவும் போர்த்துக்கலின் ஆறாம் யோவான் சட்டப்படி பிரேசிலின் நிலையை போர்த்துக்கல்லிற்கு இணையான, போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியத்தின் அங்கமான பகுதியாக அறிவித்தார். இந்தச் சமநிலையை பிரேசில் அடுத்த ஏழாண்டுகளுக்கு அனுபவித்தது.
விடுதலைக்கான வழித்தடம்
தொகுபோர்த்துக்கேய கொர்தெசு
தொகு1820இல் போர்த்துகலில் அரசியலமைப்புச் சட்டப் புரட்சி வெடித்தது. இதன் விளைவாக இராச்சியத்தின் முதல் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க கொர்தெசு (அல்லது அரசமைப்பு உருவாக்க சட்டமன்றம்) கூடியது.[2][3] கொர்தெசு 1808ஆம் ஆண்டிலிருந்து பிரேசிலில் வாழ்ந்து வந்த டொம் (அரசர்)யோவான் VI போர்த்துக்கல்லிற்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தினர். 1815இல் பிரேசிலை பிரேசில் இராச்சியமாக தகுதியை உயர்த்தி போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக அறிவித்திருந்த மன்னர் தமது மகனும் வாரிசு இளவரசருமாகிய பெட்ரோவை அரசப் பிரதிநிதியாக ஆள மார்ச்சு 7, 1821இல் ஆணையிட்டார்.[4][5] ஏப்ரல் 26 அன்று அரசர் ஐரோப்பாவிற்குப் பயணமானார்.பெட்ரோ உள்துறை, வெளியுறவுத்துறை, படைத்துறை, நிதி அமைச்சர்களின் துணையுடன் இராச்சியத்தை ஆளத் தொடங்கினார்.[6][7]
பிரேசிலில் பணிபுரிந்து வந்த படைத்துறை அதிகாரிகள் போர்த்துக்கல்லில் நிகழ்ந்தேறிய அரசமைப்பு இயக்கத்திற்கு ஆதரவான நிலை கொண்டிருந்தனர்.[8] படைத்தளபதி ஜோர்ஜ் டி அவிலெசு உள்துறை அமைச்சரையும் நிதி அமைச்சரையும் வெளியேற்றி நாடு கடத்த இளவரசரால் ஆணை பிறப்பிக்கச் செய்தார். இந்த இருவரும் இளவரசருக்கு மிக்க விசுவாசமாக இருந்தபோதும் படைத்துறையினரின் வஞ்சனைக்கு ஆளாயினர்.[9] தன்னை மீறி இந்தச் செயலை ஆற்றவைத்ததற்காக பெட்ரோ உள்ளூர வருந்தினார்.[10] இதே நேரம், செப்டம்பர் 30, 1821 இல் கொர்தெசு பிரேசிலிய மாநிலங்களை நேரடியாக போர்த்துக்கல்லிற்கு கீழாக இயங்கும்படியான ஆணையை அங்கீகரித்தது. மன்னர் பெட்ரோ இதன் மூலம் இரியோ டி செனீரோ மாநிலத்திற்கு மட்டுமே ஆளுநர் ஆனார்.[11][12] இதன் பிறகு பெட்ரோவை ஐரோப்பாவிற்கு திரும்ப வேண்டும் என்றும் ஆறாம் யோவான் உருவாக்கிய நீதிமன்றங்கள் கலைக்கப்படுகின்றன என்றும் வேறு ஆணைகள் பிறப்பித்தது.[13][14]
கொர்தெசின் இந்த நடவடிக்கைகளுக்கு பிரேசிலிய மக்கள் (பிரேசிலில் பிறந்தவர்களும் போர்த்துக்கல்லில் பிறந்தவர்களும்) பரவலாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.[11] பிரேசிலின் இறையாண்மைக்கு எதிரான கொர்தெசின் நடவடிக்கைக்களை எதிர்த்து இரு குழுக்கள் உருவாகின: விடுதலைக் கட்டுநர்களின் ஆதரவைக் கொண்ட, ஜோக்கிம் கான்சேல்வுசு தலைமையிலானக் குழு; ஓசே பொனிபேசியோ டி அன்டிராடா தலைமையிலமைந்த மற்றொருக் குழு. இவ்விருக் குழுக்களுக்கும் பிரேசிலைக் குறித்த எந்தக் குறிக்கோளும் இல்லாதிருந்தது; பிரேசிலை இறையாண்மையுள்ள முடியாட்சியுள்ள போர்த்துக்கல்லின் அங்கமாக வைத்திருக்கவே இவை விரும்பின.[15]
அவிலெசு கிளர்ச்சி
தொகுகொர்தெசின் போர்த்துக்கேய உறுப்பினர்கள் இளவரசருக்கு எவ்வித மரியாதையையும் காட்டவில்லை;அவரை நகையாடவும் செய்தனர்.[16] இதனால் கொர்தெசிற்கு ஆதரவாக இருந்த இளவரசர் படிப்படியாக பிரேசிலுக்கு ஆதரவாக மாறினார்.[13] அவரது மனைவி, இளவரசி ஆத்திரியாவின் மாரியா லியோபோல்டினா பிரேசிலை ஆதரித்ததுடன் இளவரசரை பிரேசிலை விட்டு நீங்காதிருக்கத் தூண்டினார்.[17] கொர்தெசை எதிர்த்த இரு குழுக்களும் இவ்வாறே திறந்த மனுவை அளித்தனர்.[18] இவற்றின் மீதாக சனவரி 9, 1822இல் இளவரசரின் பதிலை வெளியிட்ட நாளிதழ்களின்படி : “அனைவரின் நலனுக்காகவும் நாட்டின் பொது மகிழ்ச்சிக்காகவும் நான் தயாராக உள்ளேன்: மக்களுக்குச் சொல்லுங்கள் நான் தங்குகிறேன்” என்று அறிவித்தார்.[19]
கொர்தெசை எதிர்த்த பெட்ரோவின் முடிவையடுத்து அவிலெசின் தலைமையிலான 2,000 சிப்பாய்கள் கிளர்ச்சி செய்து காசுத்திலோ குன்றருகே முற்றுகையிட்டனர். இவர்களை சுற்றி 10,000 ஆயுதமேந்திய பிரேசிலியர் சூழ்ந்து கொண்டனர்.[20] டொம் பெட்ரோ போர்த்துக்கேய தளபதியை "பணிநீக்கம்" செய்து தங்கள் படையினருடன் போர்த்துக்கல் செல்ல ஆணையிட்டார்.[21]
சனவரி 18, 1822இல் ஓசே பொனிபேசியோ உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[22] பெட்ரோ பட்டறிவு மிக்க அரசியல்வாதியான பொனிபேசியோவை நம்பிக்கைக்கு உரியவராக கருதினார்.[23] கான்சேல்வ்சும் மற்ற அரசமைப்புவாதிகளும் இந்த பிணைப்பை குறைக்க இளவரசரை பிரேசிலின் நிரந்தரக் காப்பாளர் என்றப் பட்டம் தந்தனர்.[24][25] அரசமைப்புவாதிகள் பிரேசிலுக்கான அரசமைப்பு உருவாக்க சட்டமன்றத்தை விரும்பினர். பொனிபேசியோவின் குழுவினர் பிரெஞ்சுப் புரட்சியின்போது நிகழ்ந்த அரசின்மை போன்ற நிலையைத் தவிர்க்க பெட்ரோவே அரசமைப்பை வழங்கிட வேண்டும் என விரும்பினர்.[24] அரசமைப்புவாதிகளின் கோரிக்கைக்கிணங்க சூன் 3, 1822இல் பெட்ரோ பிரேசிலிய அரசமைப்பு உருவாக்க சட்டமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஆணை பிறப்பித்தார்.[25][26]
ஐக்கிய இராச்சியத்திலிருந்து தனிப் பேரரசாக
தொகுசாவோ பாவுலோ மாநிலத்தின் ஆதரவை வேண்டி அதன் தலைநகருக்கு 25 ஆகத்து சென்ற பெட்ரோ அங்கு செப்டம்பர் 5 வரை தங்கியிருந்தார். மீண்டும் இரியோ திரும்புகையில் செப்டம்பர் ஏழாம் நாளன்று அவரது மனைவியிடமிருந்தும் பொனிபேசியோவிடமிருந்தும் அவருக்கு செய்தி வந்தது; அதன்படி கொர்டெசு பொனிபேசியோ அமைச்சரவையின் அனைத்து செயற்பாடுகளையும் இரத்து செய்துள்ளதாகவும் அவரது எஞ்சிய அதிகாரத்தையும் பறித்துள்ளதாகவும் தெரிய வந்தது. இதனால் சினமுற்ற பெட்ரோ தமது உடனிருந்தவர்களிடம் போர்த்துக்கேய அரசமைப்பு உருவாக்க சட்டமன்றம் நம்மை அடிமைப்படுத்த நினைக்கிறது;இன்றிலிருந்து நமது உறவுகள் முறிந்தன; எந்த கட்டுகளும் நம்மை இனி பிணைப்பதில்லை என்று கூறினார். தொடர்ந்து போர்த்துக்கல்லின் சின்னமாகிய நீல-வெள்ளை கைப்பட்டையை கழற்றி எறிந்தார். பின் முழக்கமிட்டார்: கைப்பட்டைகள் கழன்றன, வீரர்களே ! விடுதலைக்கும் பிரேசிலின் பிரிவினைக்கும் வந்தனங்கள் !! உறையிலிருந்த வாளையுருவி "பிரேசிலின் விடுதலைக்காக எனது குருதி மீதும், கௌரவம் மீதும் கடவுள் மீதும் உறுதி பூண்கிறேன்" என்றும் “விடுதலை அல்லது வீர மரணம்!” என்று முழக்கமிட்டார். இந்த நிகழ்வு "இபிரங்கா முழக்கம்" (Cry of Ipiranga) என்று குறிப்பிடப்படுகிறது.[27]
செப்டம்பர் 7, 1822 இரவன்று பெட்ரோவும் அவரது குழுவும் சாவோ பாவுலோ நகரை அடைந்து பிரேசிலின் விடுதலை குறித்த செய்தியை பரப்பினர். இதனால் பெருமகிழ்ச்சியுற்ற மக்கள் அவரை பிரேசிலின் மன்னர் என்றும் பிரேசிலின் பேரரசர் என்றும் முழங்கினர்.[28][29] பெட்ரோ இரியோ டி செனீரோவிற்கு செப்டம்பர் 14 அன்று திரும்பியபோது ஜோக்கியம் கான்சேல்வ்சும் மற்ற அரசமைப்புவாதிகளும் இளவரசரை முறையான அரசமைப்பின்படியான பேரரசராக அறிவிக்க துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர்.[28] செப்டம்பர் 17 அன்று இரியோ டி செனீரோவின் நகர மன்றத்தின் தலைவர் ஓசே கிளெமென்ட்டு பிரைய்ரா பெட்ரோ பேரரசராக அவரது பிறந்த நாளான அக்டோபர் 12 அன்று முடிசூடல் நிகழுமென நாடு முழுமைக்கும் அறிவித்தார்.[30] அடுத்தநாள் புதிய கொடியும் தனிப்பட்ட அரசச்சின்னமும் உருவாக்கப்பட்டன.[31]
பெட்ரோ ஆறாம் யோவானுக்கு எழுதிய மடல் மூலம் அலுவல்முறையான பிரிவினை செப்டம்பர் 22, 1822 அன்று நிகழ்ந்தது. இந்த மடலில் பெட்ரோ தம்மை அரசப் பிரதிநிதி என்றும் தமது தந்தையை விடுதலையான பிரேசிலின் அரசராகவும் விவரித்துள்ளார்.[32][33] அக்டோபர் 12, 1822 அன்று சான்டானா களத்தில் இளவரசர் பெட்ரோ டொம் முதலாம் பெட்ரோ என அரசமைப்புப்படியான பேரரசராகவும் பிரேசிலின் நிரந்தரக் காப்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். பிரேசில் பேரரசும் பெட்ரோவின் ஆட்சியும் அன்று துவங்கின. [34] இருப்பினும், பெட்ரோ தாம் பேரரசராக பொறுப்பேற்றாலும் தமது தந்தை யோவான் VI பிரேசிலுக்கு திரும்பினால் அவரே பேரரசராவார் என்று அறிவித்தார். [35]
விடுதலைப் போர்
தொகுபிரேசிலியர்களுக்கும் போர்த்துக்கேயர்களுக்கும் இடையே பெப்ரவரி 1822இலிருந்து நவம்பர் 1823 வரை சிறுசிறு வெடிப்புகளாக போர் நடைபெற்று வந்தது. கடைசி போர்த்துக்கேயத் துருப்புக்கள் நவம்பர் 1823இல் சரணடைந்தனர். நிலத்திலும் கடலிலும் நடந்த இந்தப் போர்களில் இருபுறமும் வழமையான படைகளுடன் குடிப்படைகளும் பங்கேற்றன.
புதிதாக உருவான பிரேசிலிய தரைப்படை மற்றும் கடற்படையில் புலம்பெயர்ந்தவர்கள் உட்பட உள்நாட்டவர்கள் கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். குடிப்படைகளில் அடிமைகளைச் சேர்த்துக் கொண்டனர்; அடிமைத்தளைகளை களைந்து காலாட்படை, கடற்படைகளில் பயன்படுத்திக் கொண்டனர். நிலச்சண்டைகளும் கடற்சண்டைகளும் பாகையா, சிஸ்பிளாட்டினா, இரியோ டி செனீரோ மாநிலங்களில் நடைபெற்றன. தவிர மாரன்யோ, பெர்னம்புகோவிலும் (அக்காலத்தில் இம்மாநிலங்களில் தற்கால மாநிலங்களான சியாரா, பியாயுயி, இரியோ கிராண்டு டோ நார்த்தை உள்ளடங்கியிருந்தன) சண்டைகள் நடைபெற்றன.
1822இல் குடிப்படைகளுக்கிடையான சண்டைகள் மேற்குறிப்பிட்ட மாநிலங்களின் பெரும் நகரங்களின் சாலைகளில் நடைபெற்றன.[36] 1822வின் கடைசி மாதங்களில் வந்திறங்கிய போர்த்துக்கேய படைகள் உள்ளூர் குடிப்படைகளை சவ்வாதோர், மொண்டேவீடியோ மற்றும் சாவோ லூயிசு நகரங்களில் வெற்றிகொண்டாலும் பெரும்பாலான நகரங்களிலும் ஊரகப்பகுதிகளில் நடந்த கரந்தடிப் போரிலும் தோல்வி கண்டனர். 1823இல் பிரேசிலிய படை தனது இழப்புகளுக்கு, (நபர்கள்,வழங்கல்கள்) மாற்று பெற முடிந்ததால் மிகவும் விரிவடைந்திருந்தது. ஆனால் போர்த்துக்கேய படை சுருங்கி தங்கள் எதிர்ப்பை சிறு பகுதிக்குள் அடக்கிக் கொண்டது; துறைமுகம் அமைந்த சில மாநிலத் தலைநகரங்களில் மட்டுமே எதிர்ப்பு இருந்தது.
துவக்கத்தில் பிரேசிலிய கடற்படைக்குப் பின்னடைவு ஏற்பட்டது; கப்பற் பணியாளர்களில் பெரும்பாலோர் போர்த்துக்கேயர்களாக இருந்தமையால் இது நிகழ்ந்தது. 1823இல் கடற்படை சீரமைக்கப்பட்டு பிரேசிலியர்கள் (விடுவிக்கப்பட்ட அடிமைகள் மற்றும் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட வெள்ளை நிறத்தவர்) கப்பல்களைச் செலுத்தியதாலும் அமெரிக்க பிரித்தானியக் கூலிப்படைகளை பயன்படுத்தியதாலும் வெறி காணத் தொடங்கினர். கடலோரம் முழுமையும் பிரேசிலியக் கடற்படையின் கட்டுப்பாட்டில் வந்தமையால் நிலத்திலிருந்த போர்த்துக்கேய வீரர்கள் தனிப்படுத்தப்பட்டனர். 1823 இறுதியில் அத்திலாந்திக்கு கடலைக் கடந்து போர்த்துக்கல்லின் எல்லை வரை போர்த்துக்கேய கடற்படையை துரத்தியடித்தனர்.
இன்று வரை இந்தச் சண்டைகளில் உயிரிழந்தவர்கள் குறித்த நம்பகமான புள்ளியியல்[37] கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் வரலாற்றுப் பதிவுகள், அக்காலத்து அறிக்கைகள், அக்காலத்து உலகின் பிற பகுதிகளில் நிகழ்ந்த இவற்றையொத்த சண்டைகளின் புள்ளியியல் ஆகியவற்றைக் கொண்டும் சண்டை நிகழ்ந்த கால அளவைக் கொண்டும் (22 மாதங்கள்) இருபுறத்தும் 5,700இலிருந்து 6,200 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "இங்குள்ள பட்டியல்களைக் காண்க". Archived from the original on 2013-10-27. பார்க்கப்பட்ட நாள் 2014-07-07.
- ↑ Lustosa, p.97
- ↑ Armitage. p.36
- ↑ Lustosa, p.106
- ↑ Armitage. p.38
- ↑ Lustosa, pp. 109–110
- ↑ Armitage. p.41
- ↑ Lustosa, p.112
- ↑ Lustosa, p.113–114
- ↑ Lustosa, p.114
- ↑ 11.0 11.1 Lustosa, p.117
- ↑ Armitage. p.43–44
- ↑ 13.0 13.1 Lustosa, p.119
- ↑ Armitage. p.48–51
- ↑ Diégues, p.70
- ↑ Lustosa, p.120
- ↑ Lustosa, p.121–122
- ↑ Lustosa, p.123–124
- ↑ Lustosa, p.124
- ↑ Lustosa, p.132–134
- ↑ Lustosa, p.135
- ↑ Lustosa, p.138
- ↑ Lustosa, p.139
- ↑ 24.0 24.1 Lustosa, p.143
- ↑ 25.0 25.1 Armitage. p.61
- ↑ Lustosa, p.145
- ↑ Lustosa, pp. 150–153
- ↑ 28.0 28.1 Vianna, p.408
- ↑ Lima (1997), p.398
- ↑ Lustosa, p.153
- ↑ Vianna, p.417
- ↑ Lima (1997), p.379
- ↑ Vianna, p.413
- ↑ Vianna, pp. 417–418
- ↑ Lima (1997), p.404
- ↑ (போர்த்துக்கேயம்) Laurentino Gomes; 1822 (நூல்), Nova Fronteira, Brasil 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 85-209-2409-3 Chapter 10 pg 161
- ↑ (போர்த்துக்கேயம்) Laurentino Gomes 1822 Nova Fronteira, Brasil 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 85-209-2409-3 Chapter 10 pg 163
உசாத்துணைகள்
தொகு- Armitage, John. História do Brasil. Belo Horizonte: Itatiaia, 1981. (போர்த்துக்கேயம்)
- Barman, Roderick J. Citizen Emperor: Pedro II and the Making of Brazil, 1825–1891. Stanford: Stanford University Press, 1999. (ஆங்கிலம்)
- Diégues, Fernando. A revolução brasílica. Rio de Janeiro: Objetiva, 2004. (போர்த்துக்கேயம்)
- Dolhnikoff, Miriam. Pacto imperial: origens do federalismo no Brasil do século XIX. São Paulo: Globo, 2005. (போர்த்துக்கேயம்)
- Gomes, Laurentino. 1822. Nova Fronteira, 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 85-209-2409-3 (போர்த்துக்கேயம்)
- Holanda, Sérgio Buarque de. O Brasil Monárquico: o processo de emancipação. 4. ed. São Paulo: Difusão Européia do Livro, 1976. (போர்த்துக்கேயம்)
- Lima, Manuel de Oliveira. O movimento da independência. 6. ed. Rio de Janeiro: Topbooks, 1997. (போர்த்துக்கேயம்)
- Lustosa, Isabel. D. Pedro I. São Paulo: Companhia das Letras, 2007. (போர்த்துக்கேயம்)
- Vainfas, Ronaldo. Dicionário do Brasil Imperial. Rio de Janeiro: Objetiva, 2002. (போர்த்துக்கேயம்)
- Vianna, Hélio. História do Brasil: período colonial, monarquia e república. 15. ed. São Paulo: Melhoramentos, 1994. (போர்த்துக்கேயம்)