புனித வனத்துச் சின்னப்பர்

புனித வனத்து சின்னப்பர்
முதல் வனவாசி
பிறப்புகிபி 228
எகிப்து
இறப்புகிபி 341
தெபிஸ், எகிப்து
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம்
கிழக்கு மரபு
முக்கிய திருத்தலங்கள்புனித வனத்து சின்னப்பர் மடம், எகிப்து
(இந்தியா-தமிழ்நாடு) விமுப்புரம் வட்டம், கல்பட்டு கிராமம்
திருவிழாஜனவரி 15 - கத்தோலிக்கம்,
ஜனவரி 5 or ஜனவரி 15 - கிழக்கு மரபு,
இந்தியா-தமிழ்நாடு, கல்பட்டு ஆகஸ்டு 8
சித்தரிக்கப்படும் வகைஇரண்டு சிங்கம், ஈச்ச(ம்)மரம் , காகம்

முதல் கிறிஸ்துவ வனவாசியான புனித வனத்துச் சின்னப்பரின் வாழ்க்கை வரலாறு:

தொகு

பிறப்பு:

தொகு

எகிப்து நாட்டை சார்ந்த தெபேஸ் என்னும் பகுதியில் முதல் வனவாசியான புனித வனத்துச்சின்னப்பர் பிறந்தார். மிகவும் செல்வந்தர்களான அவருடைய தாய் தந்தையர் அவருக்கு மிக்க சிரமத்தோடு கல்வி, கலை, இலக்கியங்களை அதிக பணம் செலவு செய்து படிக்க வைத்ததால், அவர் மிகுந்த அறிவு ஞானத்தோடு படித்து சிறந்த மேதையானார். அவருக்குப் பதினைந்து வயது நடந்துகொண்டிருக்கும் போது ஆண்டவருடைய சித்தத்தால் அவருடைய தாய் தந்தை இறந்து போனார்கள்.

தேசியுஸ் இராயனின் கொடுமைகள்

தொகு

சிறுவயது முதல் அவர் சாந்த குணத்திலும், மரியாதையிலும், தெய்வ பக்தியிலும் கிறிஸ்துவனுக்குறிய மற்ற புனித நெறிகளிலும் நாளுக்குநாள் வளர்ந்து சிறப்புற்று வரும் போது, மீட்பின் 250-ம் வருடத்தில் தேசியுஸ் இராயன் என்பவன் கிறிஸ்துவர்களை துன்பப்படுத்த தொடங்கினான். அந்த துன்பங்களின் கொடுமையான வாதைகளை மட்டும் இங்கே விவரிப்போம். அவையாவன: பற்பல வேதனை சூழ்ச்சிகளாலும் சாகாதிருந்த ஓர் (இயேசுவின்) ஊழியனுடைய உடலெங்கும் தேனைப் பூசி கால் கைகளையும் கட்டி ஈக்களாலும் குளவிகளாலும் கடித்துக்கொட்டும் படி அவனை வெய்யிலில் மல்லாக்கக் கிடத்தினார்கள். வேறொருவரைப் பறவைகளின் இறகு தூவின மெத்தையின் மேல் படுக்க வைத்துப் பட்டு கயிறுகளால் கட்டி, அலங்காரமான பூஞ்சோலையில் கொண்டுபோய் வைத்து அவரை கெடுக்க ஓர் விலைமாதை கூட இருக்க வைத்தார்கள். பாவத்துக்கு அஞ்சிப் பயந்தவரான வேதசாட்சி தமது பற்களால் தனது நாவைக் கடித்துத் துண்டாக்கி அதை அருகில் இருந்த விலைமாதின் மேல் துப்பி, இவ்விதமாய் அதிசயத்தக்க முறையில் அவளைத் துரத்தி உடல் ஆசைகளை வென்றார். புனித வனத்துச்சின்னப்பர் இப்படிப்பட்ட துன்பத்துக்கு ஆளாகாமல் ஓர் அன்னியன் வீட்டில் மறைந்திருந்தார். அவருடைய மைத்துனர் அவர் சொத்துக்களை எல்லாம் அபகரித்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணி எதிரிகள் கையில் அவரை ஒப்புகொடுக்க சூழ்ச்சி செய்ததை அறிந்து கொண்டு, நாட்டை விட்டுக் காட்டுக்குப் புறப்பட்டார்.

பாலைவன காட்டில் தங்கிய சின்னப்பர்:

தொகு
அங்கே காட்டிலே மலையடிவாசலை மூடிகொண்டிருந்த கல்லை புரட்டி அதிலே தங்கினார். அக்குகையின் மேல் அடர்ந்திருந்த ஈச்சமரத்தின் ஓலைகள் தமக்கு உடையாகவும், அதன் பழங்கள் தமக்கு உணவாகவும் அவ்விடத்தில் ஓர் பக்கத்தின் ஓடி வரும் ஊற்றின் தண்ணீர் தமக்கு குடிநீராகவும் இருக்கக் கண்டு, கடவுள் அக்குகையைத் தமக்காகவே அமைத்து தந்திருக்கிறார் என்று எண்னி அதிலே தங்கினார்.

புனித சின்னப்பர் காட்டுக்கு போகும் போது 22 வயது உள்ளவராய் இருந்தார். கலகம் முடியும் வரையில், கடவுளைப் போற்றி புகழ்ந்து கொண்டு அங்கே இருக்க விருப்பம் கொண்டார். காட்டிலே இரவும் பகலும் செய்துவந்த செபத் தியானத்தினாலும், உபவாசத்தினாலும், தனிமையினாலும், தனக்கு கிடைத்த மன இனிமையையும் மகிழ்ச்சியையும் நிறைவையும் மேலான நன்மைகளையும் தமது அனுபவித்ததில் கண்டு, உலகத்தை முழுவதும் துறந்து அங்கே தனது வாழ்நாள் முழுவதும் செலவழிக்க தீர்மானித்தார்.

கடவுளின் கருணையை உணர்ந்த சின்னப்பர்:

தொகு

43-வயது வரையில் ஈச்சம் பழங்களால் உயிர் வாழ்ந்து வந்த பின்பு இறைவாக்கினரான எலியாஸ் என்பவரைப் போல கடவுள் கருணையால் ஒவ்வொரு நாளும் ஒரு காகத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட அரை ரொட்டியைக் கொண்டு அற்புதமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அக்காட்டில் 90 வருடமாய் புனித சின்னப்பர் செய்து வந்த தவம் முதலான புண்ணியங்களைக் கடவுள் ஒருவரே அறிந்திருந்தார் ஆகிலும் அவருக்கு மரணகாலம் நெருங்கியபோது இரக்கம் உள்ள கடவுள் பிரியமுள்ள ஊழியனை அதிசயமான விதத்தில் உலகிற்கு காண்பிக்கச் சித்தமானார்.

புனித வனத்து அந்தோணியாருக்குத் தொண்ணூறு வயது நடந்த போது இவ்வளவு காலம் எல்லாத்தையும் வெறுத்து காட்டில் தனிமையாக இருந்து தவம் செய்தவர்கள் தம்மைப்போல் ஒருவரும் இல்லை என்கிற எண்ணம் ஏற்பட்டது. கடவுள் அச்சோதனையிலிருந்து அவரை மீட்க கருணை கொண்டு, அவரை விட காட்டில் நீண்ட தூரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அதிக புண்ணியவாளனான தமது ஊழியனைத் தேடிக்கொண்டு போகும்படி, கனவில் அவருக்குக் கட்டளையிட்டார். விடிந்த உடனே புனித அந்தோணியார் புறப்பட்டு சென்றபோது, பசாசு தோற்றுவித்த ஒரு மிருகத்தைக் கண்டு அதின் மேலே சிலுவை அடையாளத்தை வரைந்தார். உடனே அந்த மிருகம் புனித அந்தோணியார் போகவேண்டிய வழியைக்காட்டி மறைந்து போனது. பிறகு அது அவர் பயப்படும்படியாக பயங்கரமான பூத உருவங்களை கொண்டு தோன்றியது. பசாசுகளுக்குப் பயப்படாமல் தைரியங்கொண்டு இரண்டு நாள் முழுமையும் நடந்த பின்பு ஓர் இரவு முழுவதும் செபத் தியானத்தில் இருந்தார்.

விடிந்த உடனே தண்ணீர் குடிக்க மலையடிவாரத்தைச் சுற்றிவரும் ஓர் ஓநாயைக் கண்டு அதை பின் சென்று போய்க் குகையை அடைந்து, சத்தம் செய்யாமல் அடிமேல் அடிவைத்து உள்ளே நுழைந்து, மனிதர் எவராவது இருக்கிறார்களா என்று பார்த்தபோது தொலைவில் ஒரு விளக்கு சுடரை கண்டவுடன் மிக மகிழ்ச்சியோடு கொஞ்சம் வேகமாய் நடந்து சென்று ஒரு கல்லின் மேல் காலை தேய்த்தார். இந்த சத்தத்தை கேட்டு புனித வனத்துச்சின்னப்பர் உடனே குகையின் வாயிலை மூடிக்கொண்டார்.

புனித அந்தோணியார் வாசலின் அருகே மதியம் வரையில் காத்திருந்து மிகுழ்ந்த தாழ்ச்சியோடு நான் யாரென்றும் எதற்காக வந்தேன் என்றும் நீர் அறியீரோ? "நான் உம்மை பார்க்க தகுதி இல்லாவிட்டாலும், உம்மை பார்க்காமல் போகிறதைப் பார்க்கிலும் இங்கே இறந்து மடிவேன், அதன் பிறகு நீர் வந்து என்னை அடக்கம் செய்யும் இந்த பெரும் சுமை உம்மேல் வந்துவிடும்" என்று ஆசையோடு மன்றாடினார்.

புனித சின்னப்பர் அவர் மன்றாட்டுக்கு இறங்கி குகையின் வாயிலை திறந்து, "ஆ! என் அன்புள்ள சகோதரனே இப்படி பயம் உண்டாகும் படி மன்றாடலாமா!" என்று சொல்லி இதற்கு முன்னே ஒறுவரை ஒறுவர் அறியாதிருந்தாலும், புனித சின்னப்பர் புனித அந்தோணியார் பெயரை அழைத்து ஒருவருக்கொருவர் தழுவிக்கொண்டார்கள் பிறகு இருவரும் கடவுளை புகழ்ந்து ஆராதித்து அமர்ந்தார்கள்.

அப்போது 90-வருடமாய் ஒரு மனிதனுடைய முகத்தையும் பார்க்காமலிருந்த புனித வனத்துச்சின்னப்பர் "நீர் பெரும் முயற்சி செய்து ஆசையோடு என்னைத் தேடி வந்ததினால் தளர்ந்த உடலையும் வெளுத்த நரை முடி உடையவனும் சீக்கிரம் மண்ணாகத்தக்க நிலையை உடையவனுமாகிய என்னைப் பாரும். உலக மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் பழைய நகரங்களில் புது வீடுகள் கட்டப்படுகின்றனவோ என்றும், இப்போது அரசாட்சி செய்து வரும் அரசன் யாரென்றும், பொய்த் தேவர்களை வணங்கிக் குருடர் இன்னும் உள்ளனரா என்றும் விவரித்துச் சொல்லும்" என்று கேட்டார். புனித அந்தோணியார் அப்படியே விவரித்துச்சொல்லி தங்களுக்குள்ளே பேசிக்கொண்டிருந்தார்கள்.

இருவருக்கும் கடவுள் கொடுத்த உணவு:

தொகு

அப்போது ஒரு காகம் முழு ரொட்டியை எடுத்துக்கொண்டு பறந்து வந்து அவர்கள் மத்தியில் ரொட்டியை வைத்துச் சென்றது. அப்போது புனித வனத்துச்சின்னப்பர் " இந்நேரத்தில் நமக்கு உணவு அனுப்பின ஆண்டவருடைய அளவற்ற தயை இரக்கத்தை பாரும். 60 வருடம் தொடங்கித் தினந்தோறும் தப்பாமல் அரை ரொட்டி அனுப்பின நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று நீர் என்னைச் சந்திக்க வந்தபடியால் அதை இருமடங்காக அனுப்பினார்" என்றார்.

இருவரும் கடவுளைப் புகழ்ந்து போற்றி நீர் ஊற்றின் அருகே அமர்ந்து சாப்பிட துவங்கும் போது ரொட்டியை யார் பங்கிடுவதுஎன்று தாழ்ச்சியுள்ள அந்த புனிதர்களிடையே அதிசயமாக ஓர் இனிய வாக்குவாதம் உண்டாயிற்று. புனித அந்தோணியார் புனித சின்னப்பரைப் பார்த்து நீர் அதிக வயதுள்ளவராக இருக்கிறபடியால் நீரே ரொட்டியை பங்கிட வேண்டும் என்றார். புனித சின்னப்பர் " நீர் என்னை காணவந்தபடியால் நீரே பங்கிட வேண்டும்" என்றார். கடைசியாய் இருவரும் இரண்டு பக்கத்திலும் பிடித்து பங்கிட்டுச் சாப்பிட்ட பின் அன்று இரவு முழுவதும் இறை புகழ்ச்சி பாடல்களைப் பாடுவதிலும் செபதியானம் செய்வதிலும் செலவழித்தார்கள்.

விடிந்த பிறகு புனித சின்னப்பர் தம்மை காண வந்தவரை நோக்கி: "என் சகோதரனே, நீர் இந்த காட்டில் நீண்ட நாட்களாய் வாழ்ந்து வருகிறீர் என்றும், ஒரு நாள் உம்மைக் காண்பேனென்றும் கடவுளுடைய அருளால் அறிந்தேன்.

எனது வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டதால் என்னை அடக்கம் செய்யவே கருணை மிக்க கடவுள் உம்மை அனுப்பினார்" என்றார். புனித அந்தோணியார் அதைக் கேட்டு கண்ணீர்விட்டழுது " என்னை கைவிட வேண்டாம். உம்மோடு நானும் மரணமடைந்து விண்ணகத்தை அடைய நீர் கடவுளிடத்தில் மன்றாட வேண்டும்" என்று வேண்டிக்கொண்ட போது, புனித சின்னப்பர் நீர் உம்முடைய சீடர்களை உம்முடைய நன்மாதிரிகையாலும் புத்திமதிகளாலும் சிறந்த நன்னெறியில் திடப்படுத்த உமக்கு கடமையென்று நினைத்துக்கொள்ளும். நீர் தயவு செய்து போய் அலெக்சாண்ட்ரியா பட்டணத்தின் மேற்றிராணியாரான அத்தனாசியார் உமக்குக் கொடுத்திருக்கிற கம்பளியைக் கொண்டுவந்து, அதில் என் உடலைச் சுற்றி அடக்கம் செய்யும்" என்று மன்றாடினார்.

புனித சின்னப்பர் தம்முடைய உடலை இவ்விதமாய் அடக்கம் செய்ய வேண்டுமென்கிற விருப்பம் கொண்டல்ல; மாறாக தமது மரணத்தால் புனித அந்தோணியாருக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டுமென்கிற ஆவல் கொண்டு சொன்னதுமல்லாமல், புனித அத்தனாசியார் புனிதர்களை மறுத்து மெத்த உறுதியோடு போதித்த விசுவாசத்தோடு தாம் மரிக்கும் அடையாளமாக அக்கம்பளியைக் கொண்டுவரச் சொன்னார்.

புனித அந்தோணியார் அவர் சொன்னதைக் கேட்டு இவர் மறைந்திருப்பவற்றை நேரில் கண்டவர் போல் சொல்லுகிறபடியால் இவர் எவ்வளவு கடவுளுடைய ஆவியின் வரங்களால் நிறைந்தவராய் இருக்கிறார் என்று ஆச்சிரியப்பட்டு, தடுத்துப் பேச அஞ்சினவராய்த் துயரம் கொண்டு அழுது அவருடைய கண்களையும் கைகளையும் முத்தமிட்டுத் தம்முடைய மடத்துக்குப் புறப்பட்டு மிகுந்த ஆர்வத்தோடு நடந்து, இரண்டு நாளுக்குப் பின் போய்ச் சேர்ந்தார்.

புனித அந்தோணியாரும் அவருடைய சீடர்களும்:

தொகு

அவருடைய ஊழியராகிய இரண்டு சீடர்கள் எதிரே வந்து " ஆ! எங்கள் அன்பு தந்தையே, இத்தனை நாள் எங்கே போய் வாழ்ந்து வந்தீர்?" என்று கேட்டதற்கு புனித அந்தோணியார் "நீசப்பாவியாயிருக்கிற நான் முனிவன் எங்கிற பெயருக்கு தகுதி உடையவன் அல்ல இறைவாக்கினரான எலியாஸ் என்பவரையும் வனவாசியிருந்த திருமுழுக்கு யோவானையும், விண்ணகத்தை மண்ணகத்தில் கண்டுகளிக்கும் புனித சின்னப்பரையும் கண்டேன்" என்று மறுமொழி சொன்னார்.

பின்பு பேசாமல் மார்பில் அறைந்து கொண்டு தமது குகையில் இருந்த கம்பளியை எடுத்து எதுவும் சாப்பிடாமல் உடனே பயணம் மேற்கொள்வதை அவருடைய சீடர்கள் என்னவென்று கேட்டபோது, பேசுகிற காலமும் உண்டு, மௌனமாயிருக்கிற காலமும் உண்டு என்று சொல்லி புனித சின்னப்பருக்கு என்ன நடந்ததோ என்கிற மனகலக்கத்தோடு தான் முன் வந்த வழியே புனித வனத்து சின்னப்பரின் குகையை விரைவாய் அடைந் தார்,

தவத்திலே உயிரை துறந்த வனத்துச் சின்னப்பர்:

தொகு

பார்த்த பொழுது, புனித சின்னப்பர் உடலானது, முழங்காற்படியிட்டு வானத்தை நோக்கி பார்த்த வண்ணமாகவும், இரண்டு கைகளையும் மேலே விரித்திருக்கவும் கண்டு, செபம் செய்கிறார் என்று நினைத்து, தாமும் செபிக்கத்தொடங்கினார். அவர் செபம் செய்கிறபோது வழக்கமாய் விடுகிற பெறுமூச்சி இல்லாமையைக் கண்டு அருகில் சென்று பார்த்தபொழுது உயிரற்ற சடலமாக இருப்பதைக் கண்டு மிகுந்த துக்கத்தோடு கண்ணீர்விட்டழுது, தான் வரும் வழியில் கண்ட காட்சியை நினைவு கூர்ந்தார்.

அந்த காட்சி அதிகாலை மூன்று மணி அளவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இறைதூதர்களும், இறைவாக்கினர்களும், அப்போஸ்தலர்களும் புடைசூழ மிகுந்த வான்மகிமையோடு புனித சின்னப்பருடைய ஆன்மா விண்ணகத்திற்கு எழுந்தருளிப்போக கண்டார். உடனே முகங்குப்புறச் சாஷ்டாங்கமாக விழுந்து, புலம்பி அழுது, " ஆ! அன்பான தந்தையே! ஏன் என்னைக் கைவிடுகிறீர்; உம்முடைய அன்பை சுவைத்த நான் இவ்வளவோ விரைவில் உம்மை இழந்துவிடுவதேன்" என்று உறக்கக் சத்தமிட்டு அழுதார்.

பின்னர் தன்னை திடப்படுத்திக்கொண்டு, எழுந்து வேகமாய் நடந்து புனித சின்னப்பரின் சடலத்தை தான் கொண்டு வந்த கம்பளியால் சுற்றிக் குகையிலிருந்து வெளியேகொண்டு வந்து, திருச்சபையின் முறைப்படி சங்கீதங்களைப் பாடிச் செபம் செய்தார்.

அடக்கம் செய்ய உதவி செய்த இரண்டு சிங்கங்கள்

தொகு

அடக்கம் செய்ய குழி தோண்டுவதற்கு ஆயுதம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்திலே, தூரத்தில் நின்று தமக்கு எதிராக இரண்டு சிங்கங்கள் வருவதை பார்த்து பயந்து பின்பு கடவுளை நம்பி திடம் கொண்டு நின்றார். அவ்விரண்டு சிங்கங்களும் புனித வனத்துச் சின்னப்பரின் திருஉடலை பார்த்து அருகில் வந்து படுத்துக்கொண்டு தங்கள் பாசத்தை வால்களை அசைத்து அவரின் உடலின் மேல் குழைந்து கர்ச்சித்து அழுதது. பின்பு புனித வனத்துச் சின்னப்பரின் உடலை அடக்கம் செய்ய குழியை தோண்டியது இந்த நிகழ்ச்சியை சிரிதும் எதிபார்க்காத புனித அந்தோணியார் இந்த அதிசயத்தைப் பார்த்து வியந்தார். பின்பு புனித அந்தோணியாரும் இரண்டு சிங்கங்களும் புனித வனத்துச்சின்னப்பரின் திரு உடலை அடக்கம் செய்தார்கள்.

புனித அந்தோணியார் ஒருநாள் முழுவதும் அடக்கம் செய்த இடத்தில் தவம் செய்துகொண்டு காவல் இருந்தார். புனித அந்தோணியார், இறந்த புனித வனத்துச்சின்னப்பரின் குகைக்கு சென்று ஈச்ச மரத்தின் ஒலைகளை கொண்டு புனித சின்னப்பரின் கைகளால் பின்னப்பட்ட ஆடையை எடுத்துக் கொண்டு தமது மடத்துக்கு புறப்பட்டார்.

புனித வனத்து அந்தோணியார் தான் கண்ட காட்சியையும், அனுபவத்தையும் தன் சீடர்களிடம் வெளிபடுத்தினார். புனித வனத்துச்சின்னப்பரின் ஈச்சமர ஓலையால் பின்னப்பட்ட ஆடையை தனக்கு கிடைத்த விலைமதிப்பில்லா சொத்து என நினைத்துக்கொண்டார். இந்த ஆடையை பாஸ்கு திருநாளிலும் பரிசுத்தஆவி திருநாளிலும் மட்டும் அணிந்துகொண்டு நோயாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், இறை பக்தர்களுக்கு ஆசிரும் இன்னும் சில அதிசயங்களை செய்து வந்தார்.

புனித வனத்துச்சின்னப்பர், கி.பி.227-ல் பிறந்து 90 வருடகாலம் காட்டில் வாழ்ந்து அவருக்கு 115-வயதில் கி.பி.342-ம் வருடத்தில் மரணமடைந்தார். அவர் பேர் கொண்ட மற்றச் சில புனிதர்களில் நின்று அவரை எவரும் எளிதாக அறிந்துகொள்ள முதல் வனவாசியான புனித வனத்துச் சின்னப்பர் என்று வழக்கமாய் சொல்லப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தின் முதல் திருத்தலம்

தொகு

புனித வனத்துச்சின்னப்பர் திருத்தலமானது, புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டத்தில் கி.பி.1898-ம் ஆண்டு உருவான திருத்தலங்களில் ஒன்றாகும். இது தென்னிந்தியாவில் சென்னையில் இருந்து 177 கி.மீ. தூரத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் - திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் உள்ள மாம்பழப்பட்டு என்ற ஊரின் தெற்கு திசையில் 2 கி.மீ. தொலைவில் கல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு

http://temple.dinamalar.com/news_detail.php?id=71110
https://en.wikipedia.org/wiki/Paul_of_Thebes

http://temple.dinamalar.com/news_detail.php?id=71110

https://www.justdial.com/Villupuram/St-Paul-The-Hermit-Shrine-Kalpattu/9999P4146-4146-180101235016-D8B5_BZDET?xid=VmlsbHVwdXJhbSBUaGUgUHJpZGUgTHVicmljYW50cyBCaWcgQmF6YWFyIFN0cmVldCBUb3duIEhhbGw=

https://www.google.co.in/search?rlz=1C1ASVA_enIN719IN719&site=async/lcl_akp&tbm=lcl&q=kalpattu+shrine&rflfq=1&num=20&stick=H4sIAAAAAAAAACWQvW1DQQyD4SZI_4IUr_IIoiTqZ4usYAQOUhhwYC-WuTKFdU530FHUR76-7FsyylNpndVEBWTfLIOgpsLMnEpif4MzItUrO8F0WowU0iyOsjVAgQX2TVEtZKSYFKsifd8iaMhmUKRT2OC-sSAsHUGOgzjs_3wJip2tljWE65CH9_gPWGeKuuSs9xPcGxpqXVk2oBy_IQTgM5J8gmZlooYfSDpCsDKR3go3bbh0jFnM1MJX8pbUjpbofubPmn4mlAbL5y1rmm6znyYyfWWvEvbNNRqwVtYch9aKpTGf6qSVi2HkMVltXlETkj2qlNAxBUTLfRofy0VI_T0c_g7vH-frz-V8PF3u1-P9fLp9fh-_rrcHHDmOhMkBAAA&ved=2ahUKEwiQiPiU5q3cAhXLXysKHUdeDXAQxXQwDXoECAEQcA&rldimm=7568472539789518610&tbs=lrf:!2m1!1e2!2m1!1e3!3sIAE,lf:1,lf_ui:1

https://www.facebook.com/Stpaul-Hermit-Churchkalpet-681910558515888/

http://catholicchurches.in/directory/pondicherry-churches/stpaul-the-hermit-church-kalpet.htm