பூந்தல தேசிய வனம்
இலங்கையில் உள்ள பூந்தல தேசிய வனம் வலசை போகும் நீர்ப் பறவைகளுக்கு வாழ்விடம் அளிப்பதில் பன்னாட்டளவில் முக்கியத்துவம் பெற்றதாகும். பெருங் கூட்டங்களாகப் பறந்து வரும் பூநாரைகள் உட்பட 197 பறவையினங்கள் இங்கு காணப்படுகின்றன.[1] 1969 ஆம் ஆண்டு வனவிலங்குகள் காப்பகமாக அமைக்கப்பட்ட பூந்தல தேசிய வனம் 1993 யனவரி 4 ஆம் திகதி தேசிய வனமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.[2] 1991 ஆம் ஆண்டு ரம்சார் மாநாட்டு ஒப்பந்தத்தின்படி இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட முதலாவது ஈரநில தேசிய வனம் இதுவாகும். 2005 ஆம் ஆண்டு இது யுனெசுகோவின் மனிதனும் உயிர்வளமும் திட்டத்தின் படி இலங்கையின் நான்காவது உயிர்வளக் காப்பகமாக அமைக்கப்பட்டது.[3] பூந்தல தேசிய வனம் கொழும்பிலிருந்து தென்கிழக்காக 245 கிலோமீற்றர் (152 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[4]
பூந்தல தேசிய வனம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
கிரிந்த அருகில் சூரியன் மறைதல் | |
அமைவிடம் | தென் மாகாணம், இலங்கை |
அருகாமை நகரம் | அம்பாந்தோட்டை |
ஆள்கூறுகள் | 6°12′50″N 81°13′30″E / 6.21389°N 81.22500°E |
பரப்பளவு | 3339.38 எக்டேயர் (12.8934 சதுர மைல்) - 2004 இன் வர்த்தமானி அறிவித்தலின் படி. அதற்கு முன்னர் 6216 எக்டேயர் (24 சதுர மைல்)[1] |
நிறுவப்பட்டது | 1969 (சரணாலயம்) 1993 (தேசிய வனம்) |
நிருவாக அமைப்பு | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை |
வரலாறு
தொகுஇப்பகுதி முதன்முதலில் வனவிலங்குகள் காப்பகமாக 1969 டிசம்பர் 5 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டது.[5] அதன் பின்னர் 1993 யனவரி 4 ஆம் திகதி 6216 எக்டேயர் (24.00 சதுர மைல்) பரப்பளவை உள்ளடக்கி தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது.[6] எனினும், 2004 ஆம் ஆண்டு மீளவும் வர்த்தமானி அறிவித்தலொன்று செய்யப்பட்டு இத்தேசிய வனத்தின் பரப்பளவு குறைக்கப்பட்டு 3698 எக்டேயர் (14.28 சதுர மைல்) எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.[1] 1991 ஆம் ஆண்டு ரம்சார் ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் முதலாவது ஈரநிலமாக பூந்தல தேசிய வனம் பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் 2005 இல் இது மனிதனும் உயிர்வளமும் திட்டத்தில் உள்ளடக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்தது. பூந்தல தேசிய வனத்தில் முன்னர் சேர்ந்திருந்த, ஆனால் பின்னர் உள்ளடக்கப்பாடதிருந்த நிலப் பகுதியில் 3339.38 எக்டேயர் (12.8934 சதுர மைல்) பரப்பு வில்மான்ன காப்பகம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.[1]
தன்மைகள்
தொகுஇப்பகுதியின் தரைத்தோற்றம் கிழக்கத்திய விஜயன் தொடரின் கொம்புக்கலப்பு-உயிரெரிபாறை மற்றும் கோட்டுப்பாறை சார்ந்தததாகும்.[1] இங்கு தாழ்நில உலர் வலய காலநிலை பெரிதும் தாக்கம் செலுத்துகிறது. மேலும், இப்பகுதியின் சராசரி சார் ஈரப்பதன் முழு நாட்டின் அளவில் 80% ஆகும். இத்தேசிய வனம் ஐந்து ஆழமற்ற களப்புக்களைக் கொண்டுள்ளது. அவற்றில் மூன்று உப்பு மிகுந்தனவாகும். அவை 520 எக்டேயர் (2.00 சதுர மைல்) கொண்ட பூந்தல களப்பு, 430 எக்டேயர் (1.70 சதுர மைல்) கொண்ட எம்பிலிக்கல களப்பு, 650 எக்டேயர் (2.50 சதுர மைல்) கொண்ட மலல களப்பு, 390 எக்டேயர் (1.50 சதுர மைல்) கொண்ட கொஹொலங்கல களப்பு, மற்றும் 260 எக்டேயர் (1.00 சதுர மைல்) கொண்ட மகாலேவாய என்பனவாகும். கொஹொலங்கல மற்றும் மகாலேவாய ஆகிய களப்புக்கள் உப்பு உற்பத்திக்காக மிகவும் முன்னேற்றப்பட்டனவாகும். இப்பகுதியின் காலநிலை அயனமண்டல பருவப் பெயர்ச்சி சார்ந்ததாகும். இங்கு ஆண்டின் சராசரி வெப்பநிலை 27 °C (81 °F)ஆகும். அவ்வாறே ஆண்டு மழைவீழ்ச்சி 900–1,300 மில்லிமீற்றர் (35–51 அங்குலம்) ஆகும். பொதுவாக மே முதல் செப்டெம்பர் வரையான காலப் பகுதியில் வறட்சி நிலவுகிறது. இக்காட்டின் அமைவு கடல் மட்டத்தின் அளவிலிருந்து 10 மீற்றர் (33 அடி) வரை வேறுபடும்.[5] பூந்தல தேசிய வனம் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் காரணமாக சேதமுற்றது.[7] எனினும், இங்குள்ள மணல் திட்டுக்கள் காரணமாக அதன் தாக்கம் பெரிதாக ஏற்படுவது தடைப்பட்டது.[8]
தாவரங்கள்
தொகுபூந்தல தேசிய வனத்தின் சூழலியற் தன்மைகளில் நிலம் சார் தன்மைகள் ஏழும் ஈரநில வகைகள் ஆறும் அடங்கும்.[1] இங்கு உலர்ந்த முட்புதர்கள் மற்றும் செடிகள் வெகுவாகக் காணப்படும் தாவர இனங்களில் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றன. இத்தேசிய வனத்தினுள் 90 தாவரக் குடும்பங்களைச் சேர்ந்த 383 தாவர இனங்கள் காணப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.[7] இங்குள்ள அலையும் மிதவைவாழிகளுள் பெரும்பாலானவை நீலப்பச்சைப்பாசிகளே ஆகும். அவற்றுள் Macrocystis, Nostoc, Oscillatoria ஆகிய அல்கா சாதிகள் பெரிதும் காணப்படுகின்றன.[5] எம்பிலிக்கல, மலல போன்ற களப்புக்களில் ஐதரில்லாக்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆகாயத் தாமரை, நீரல்லி, பூனைவாலி போன்ற தாவரங்கள் சதுப்பு நிலங்களிலும் நீரோடைகளிலும் பரவியுள்ளன. அத்துடன் கருவேலம், இலந்தை, விளா, புளி, வேம்பு, முதிரை, பாலை போன்ற மரங்களும் கண்டல் தாவரங்களும் நிறைந்து காணப்படுகின்றன.[1]
விலங்குகள்
தொகுதென்னிந்திய, இலங்கை ஈரநிலங்களில் பூந்தல தேசிய வனம் முக்கிய பறவைப் பகுதி எனக் கணிக்கப்பட்டுள்ளது.[9] இங்கு 324 முள்ளந்தண்டுளிகள் காணப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1] அவற்றுள் 32 இன மீன்கள், 15 இன ஈரூடகவாழிகள், 48 இன ஊர்வன, 197 இனப் பறவைகள், 32 இன முலையூட்டிகள் என்பன அடங்கும். இங்குள்ள முள்ளந்தண்டிலிகளில் 52 இன வண்ணத்துப் பூச்சிகள் குறிப்பிடத் தக்கனவாகும்.[7] பூந்தல தேசிய வனத்தின் ஈரநில வாழிடங்களில் 100 நீர்ப்பறவை இனங்கள் வாழ்கின்றன. அவற்றுள் அரைவாசி வலசை போகும் இனங்களாகும்.[1] மொத்தமாக இங்கு காணப்படும் 197 பறவை இனங்களில் 58 இனங்கள் வலசை போகும் இனங்களாகும். பூந்தல தேசிய வனத்தில் தேசிய பறவைக் காப்பு நடவடிக்கை (NBRP) இலங்கையின் வெளிப் பறவையியல் குழுவின் உதவியுடன் இலங்கை வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் 2005 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.[10]
வட இந்தியாவிலும் பாக்கித்தானிலும் உள்ள கட்ச் உவர் சதுப்பு நிலப் பகுதியிலிருந்து ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பறவைகளாகப் பறந்து வரும் பூநாரை (Phoenicopterus roseus) இங்கு காணப்படுபவற்றில் குறிப்பிடத் தக்கதாகும். (நீர்க்கோழி Dendrocygna javanica, சிறுவாத்து Anas querquedula), (நீர்க்காகம் Phalacrocorax niger, இந்திய நீர்க்காகம் P. fuscicollis), பெரும் நீர்ப்பறவைகளான (ஆனைக் கொக்கு Ardea cinerea, கருந்தலை இபிசு Threskiornis melanocephalus, ஆசிய பெருஞ்சொண்டுக் கொக்கு Platalea leucorodia, கூர்ஞ்சொண்டுக் கொக்கு Anastomus oscitans, பன்னிறக் கொக்கு Mycteria leucocephala), நடுத்தர அளவு நீர்த்தத்திகளான (திரிங்கா இனங்கள்), மற்றும் சிறிய கரைப்பறவைகளான (காக்காய் நாச்சியார் இனங்கள்) என்பன இங்கு பெருந்திரள்களாகக் காணப்படும் பறவைகளாகும். கருங்கழுத்துக் கொக்கு Ephippiorhynchus asiaticus, சாவகக் கொக்கு Leptoptilos javanicus மற்றும் ஆசிய கருநீர்க்கோழி Fulica atra என்பன இங்கு வாழும் மிக அரிய பறவைகளாகும்.[1]
இங்குள்ள காடுகளில் ஒரு சில யானைகள் Elephas maximus இன்னமும் வாழ்கின்றன.[5] இத்தேசிய வனத்தில் காணப்படும் ஏனைய முலையூட்டிகளில் செங்குரங்கு Macaca sinica, சாம்பற் குரங்கு Presbytis entellus, பொன்னரி Canis aureus, சிறுத்தை Panthera pardus, மீனவப் பூனை Felis viverrinus, கொடும்புலி Felis rubiginosa, கீரிப்பிள்ளை Herpestes spp., காட்டுப் பன்றி Sus scrofa, வெண் புள்ளிச் சருகுமான் Tragulus meminna, குரைக்கும் மான் Muntiacus muntjak, புள்ளி மான் Cervus axis, மரை C. Unicolor, காட்டு முயல் Lepus nigricollis, இந்திய எறும்பு தின்னி Manis crassicaudata, மற்றும் இந்திய முள்ளம்பன்றி Hystrix indica என்பன அடங்கும்.[5]
இங்குள்ள நீர்நிலைகளில் ஏராளமான பன்னிற மீனினங்கள் வாழ்கின்றன. அவற்றுள் பால்மீன் போன்ற உவர்நீர் மீனினங்களும் வேறு பல நன்னீர் மீனினங்களும் அடங்குகின்றன.[1] பல்வேறு நச்சுயிரிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பூந்தல காட்டில் யால தவளையும் நச்சுப் பாம்பினமொன்றும் இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையாகும். இங்கு வாழும் ஊர்வனவற்றில் சாதாரண முதலை Crocodylus palustris, உவர்நீர் முதலை Crocodylus porosus, சாதாரண உடும்பு Varanus bengalensis, இந்திய உடு ஆமை Geochelone elegans, மலைப் பாம்பு Python molurus, எலிப் பாம்பு Pytas mucosus, தனிச் சிறப்பான பறக்கும் பாம்பு Chrysopelea taprobana, போன்ற பல இனங்களும் அடங்குகின்றன.[5] பூந்தல தேசிய வனத்தை ஒட்டியிருக்கும் கடலோரத்தில் உலகளவில் மிக அரிதாகிவிட்ட கடலாமை இனங்கள் ஐந்தும் வாழ்கின்றன.[1]
சவால்களும் பாதுகாப்பும்
தொகுநீர்ப்பாசன வடிகாலமைப்புக்களின் மேல் மிகுதமான நீர் சேர்வதாலும் உப்பளங்களிலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதாலும் இங்குள்ள களப்புக்களில் நீரின் தன்மை மாறுபட்டுள்ளது.[1] இங்குள்ள மலல, எம்பிலிக்கல களப்புப் பகுதிகளில் வெகுவாகப் பரவும் அன்னிய தாவர இனங்கள் காரணமாக நீர்த்தத்திப் பறவையினங்களின் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன. எனினும் அவற்றில் ஒரு தாவர இனத்தின் (Prosopis juliflora) பரவல் இங்க கட்டுப்பாடின்றி மேய்ந்து திரியும் கால்நடைகள் உண்பதால் கட்டுப்படுத்தப்படுகிறது. கடலாமைப் பாதுகாப்புத் திட்டமொன்று உட்பட இங்கு காட்டுயிர் பாதுகாப்புத் திட்டங்கள் பல காணப்படுகின்றன. அவ்வாறே, இத்தேசிய வனத்தின் எல்லைகளை மீளப் பெரிதாக்குவதற்கும் இத்தேசிய வனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடும்பங்களை வேறிடங்களில் குடியமர்த்துவதற்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், இங்கு பரவும் அன்னியத் தாவரங்களை அழிப்பதற்கும் நீர்ப்பாசனக் கால்வாய்களின் நீர் சேர்வதைத் தடுப்பதற்கும் கட்டுப்பாடின்றி மேயும் கால்நடைகளை முகாமை செய்வதற்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.[1]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 (ஆங்கிலம்) "பூந்தல தேசிய வனத்தினுள் ஈரநிலப் பகுதி". இலங்கையின் ஈரநிலங்கள் பற்றிய தகவல்களும் தரவுகளும். பன்னாட்டு நீர் முகாமைத்துவ நிறுவனம்|IWMI. Archived from the original on 15 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 10 September 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ (சிங்கள மொழி) சேனாரத்ன, பி.எம். (2005). இலங்கைக் காடுகள் (1 ஆம் ed.). சரசவி பதிப்பகம். pp. 197–198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-573-401-1.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help) - ↑ (ஆங்கிலம்) "யுனெசுகோவின் மனிதனும் உயிர்வளமும் (MAB) வலையமைப்பில் இருபத்து மூன்று புதிய உயிர்வளக் காப்பகங்கள் சேர்ப்பு". unesco.org. யுனெசுகோ. 2005-06-29. Archived from the original on 2009-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-05-20.
- ↑ (சிங்கள மொழி) சேனாரத்ன, பி.எம். (2004). ஸ்ரீலங்காவே ஜாதிக வனோத்யான. சரசவி பதிப்பகம். p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-573-346-5.
{{cite book}}
: Unknown parameter|trans_title=
ignored (help) - ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Green, Michael J. B. (1990). IUCN directory of South Asian protected areas. IUCN. pp. 198–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782831700304.
- ↑ The National Atlas of Sri Lanka. Department of Survey (Sri Lanka). 2007. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9059-04-1.
- ↑ 7.0 7.1 7.2 பம்பரதெனிய, சி.என்.பி. இலங்கையின் முதலாவது ரம்சார் ஈரநிலமான பூந்தல தேசிய வனத்தில் அண்மைய கடற்கோளின் தாக்கம் (PDF). உலக இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம். Archived from the original (PDF) on 2011-07-24. பார்க்கப்பட்ட நாள் 2011-04-15.
- ↑ இலங்கையின் வலசை போகும் இனங்களைப் பாதுகாத்தல் (PDF). பொண் மாநாடு. p. 6. Archived from the original (PDF) on 2012-10-15. பார்க்கப்பட்ட நாள் 2011-04-15.
- ↑ "தென்னிந்திய, இலங்கை ஈரநிலங்கள்" (PDF). தென்னிந்திய, இலங்கை ஈரநிலங்கள். BirdLife International. Archived from the original (PDF) on 2010-11-30. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டெம்பர் 2010.
- ↑ சரத் கொட்டகம; பெல்லியோ, எம். & தயானந்த, கே. (2006). "Pioneering shorebird research in Sri Lanka: launch of the National Bird Ringing Programme" (PDF). Wader Study Group Bull. 109. http://www.fogsl.net/Prod/wp-content/uploads/2009/08/Kotagama-et.al.-2006.pdf. பார்த்த நாள்: 2011-04-15.
வெளித் தொடுப்புகள்
தொகு- Matsuno, Y; W. van der Hoek and M. Ranawake, தொகுப்பாசிரியர் (1998) (PDF). Irrigation water management and the Bundala National Park Proceedings of the workshop on water quality of the Bundala Lagoons. International Water Management Institute. http://pdf.usaid.gov/pdf_docs/PNACE446.pdf.
- Perera, Nishanthi (2007). "An Overview of Bundala National Park: An exceptional wetland facing multitude of problems" (PDF). Siyoth (Field Ornithology Group of Sri Lanka) 2 (1): 4–8. http://www.fogsl.net/Prod/wp-content/uploads/2009/03/siyoth-2-pg04-08.pdf. பார்த்த நாள்: 2011-04-15.