பெர்மாவின் பல்கோண எண் தேற்றம்

எண் கோட்பாட்டில் பெர்மாவின் பல்கோண எண் தேற்றம் (Fermat polygonal number theorem) என்பது ஒவ்வொரு நேர்ம முழுஎண்ணையும் பல்கோண எண்களின் கூட்டுத்தொகையாக எழுதக்கூடிய விதங்களைப்பற்றிக் கூறுகிறது. இத்தேற்றத்தின்படி, ஒவ்வொரு நேர்ம முழுஎண்ணையும் அதிகபட்சமாக n, n-கோண எண்களின் கூட்டுத்தைகையாக எழுதமுடியும். அதாவது ஒவ்வொரு நேர்ம முழுஎண்ணையும் மூன்று அல்லது அதற்கும் குறைந்த முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாக எழுதலாம்; நான்கு அல்லது அதற்கும் குறைந்த வர்க்க எண்களின் கூட்டுத்தொகையாக எழுதலாம்; ஐந்து அல்லது அதற்கும் குறைந்த ஐங்கோண எண்களின் கூட்டுத்தொகையாக எழுதாலாம்; மேலும் ஐந்துக்கு மேற்பட்ட பல்கோண எண்களுக்கும் இக்கூற்றை நீட்டிக்கலாம்.

எடுத்துக்காட்டுகள்

தொகு

எண் 17, பின்வரும் மூன்றுவிதங்களில் எழுதப்பட்டுள்ளது:

  • 17 = 10 + 6 + 1 (முக்கோண எண்கள்)
  • 17 = 16 + 1 (சதுர எண்கள்)
  • 17 = 12 + 5 (ஐங்கோண எண்கள்)

வரலாறு

தொகு
 
முக்கோண எண்களின் கூட்டுத்தொகை தொடர்பாக கணிதவியலாளர் காசின் நாட்குறிப்பில் காணப்படும் குறிப்பு (1796)
  • 1638 இல், தேற்றத்தின் முடிவை அறிவித்தக் கணிதவியலாளர் பியேர் டி பெர்மாவின் பெயரால் இத்தேற்றம் அழைக்கப்படுகிறது. [1]
  • கணிதவியலாளர் லாக்ராஞ்சி, இதனை சதுர எண்களுக்கு 1770 இல் நிறுவினார். அவரது தேற்றத்தின்படி, ஒவ்வொரு நேர்ம எண்ணையும் நான்கு வர்க்கங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாம்.
எகா: 7 = 4 + 1 + 1 + 1.[1]
  • கணிதவியலாளர் காஸ் இக்கூற்றை முக்கோண எண்களுக்கு 1796 இல் நிறுவினார். இதனை அவரது நாட்குறிப்பில் கீழ்க்காணும் வரியில் எழுதியுள்ளார்:
"ΕΥΡΗΚΑ! num = Δ + Δ + Δ",[2]
மேலும் இதற்கான நிறுவலை தனது நூலிலும் (Disquisitiones Arithmeticae) வெளியிட்டார். இக்காரணத்தினால் சிலசமயங்களில்,காசின் இந்த முடிவானது "யுரேகா தேற்றம்" என அறியப்படுகிறது.[3]
  • 1813 இல் கணிதவியலாளர் அகுஸ்டின்-லூயி கோசியால்தான் இத்தேற்றம் முழுவதுமாக நிறுவப்பட்டது.[1]
  • நாதன்சன் என்பவரின் 1987 ஆம் ஆண்டின் நிறுவல் காசியின் கீழ்க்காணும் துணைத்தேற்றத்தை அடிப்படையாகக் கொண்டமைந்தது:
b2 < 4a மற்றும் 3a < b2 + 2b + 4 என்றமையும் a, b என்ற ஒற்றை முழுவெண்களுக்கு கீழ்க்காணுமாறு எதிர்மமில்லா முழுவெண்களைக் காண இயலும்:
a = s2 + t2 + u2 + v2 and b = s + t + u + v.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 (Heath 1910).
  2. Bell, Eric Temple (1956), "Gauss, the Prince of Mathematicians", in Newman, James R. (ed.), The World of Mathematics, vol. I, Simon & Schuster, pp. 295–339. Dover reprint, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-41150-8.
  3. Ono, Ken; Robins, Sinai; Wahl, Patrick T. (1995), "On the representation of integers as sums of triangular numbers", Aequationes Mathematicae, 50 (1–2): 73–94, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/BF01831114, MR 1336863, S2CID 122203472.

மேற்கோள்கள்

தொகு