பெலோப்பிடாசு
பெலோப்பிடாசு (Pelopidas, இறப்பு கிமு 364) என்பவர் ஒரு முக்கியமான தீபன் அரசியல்வாதி மற்றும் தளபதி ஆவார். நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தீபன் மேலாதிக்கத்தை நிறுவுவதில் கருவியாக இருந்தவர் இவர் ஆவார். [1]
வாழ்கை குறிப்பு
தொகுவிளையாட்டு வீரர் மற்றும் போர்வீரன்
தொகுபெலோப்பிடாசு ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். பெரும் செல்வத்தைக் கொண்டிருந்தாக இருந்தார். இவர் தன் நண்பர்களுக்காகவும் பொதுச் சேவைக்காகவும் செலவழித்தார். அதே நேரத்தில் இவர் ஒரு விளையாட்டு வீரரைப்போன்ற கடினமான வாழ்க்கையை வாழ்வதில் மனநிறைவு அடைந்தார். [2] கிமு 384 இல், இவர் மான்டினியா முற்றுகையின் போது எசுபார்த்தன்களுக்கு ஆதரவாக அனுப்பப்பட்ட தீபன் குழுவில் பணியாற்றினார். அங்கு இவர் ஆர்க்காடியன்களால் காயப்படுத்தப்பட்டார். ஆபத்தான முறையில் காயமடைந்த இவர் எபமினோண்டாசு மற்றும் அஜெசிபோலிஸ் ஆகியோரால் காப்பாற்றப்பட்டார். [3]
இந்த நிகழ்வு அவர்களின் நட்பை உறுதிபடுத்தியது என்றும், அடுத்த 20 ஆண்டுகளுக்கு அரசியலில் எபமினோடாசின் பங்காளியாக பெலோபிடாசு இருந்தார் என்று புளூட்டாக் கூறுகிறார். [4]
புளூட்டாக்கின் லைஃப் ஆஃப் பெலோபிட்டாசில் உள்ளபடி, இவர் தீப்சில் உதவி தேவைப்படும் தகுதியான ஏழைகளிடம் தொடர்ந்து அக்கறை காட்டியதனால் இவரது பரம்பரை சொத்துக்கள் தேய்ந்தன. இவர் எளிய ஆடை, அடர்வற்ற உணவு, இராணுவ வாழ்க்கையின் நிலையான சிரமங்ளை போன்றவற்றை அனுபவித்தார். ஒரு சாதாரண தீபன் அவனுக்காக செலவழித்துக் கொள்வதைவிட, தனக்காக இவர் அதிகம் செலவழிக்க வெட்கப்படுவதாக மக்கள் கூறிக்கொண்டனர். இவரது நண்பர்கள் இவருக்கு மனைவியும் பிள்ளைகளும் இருப்பதால், இவருடைய நிதி ஆதாரத்தைக் கவனிக்க வேண்டும் என்றும், பணம் அவசியமானது என்றும் அறிவுருத்தியபோது, பெலோபிட்டாசு, நிக்கோடெமஸ் என்ற பார்வையற்ற, ஊனமுற்ற ஏழையைச் சுட்டிக்காட்டி, "ஆம், நிக்கோடெமசுக்கு அவசியம்" என்றார். [2]
தீபன் கோட்டையை எசுபார்த்தன்கள் கைப்பற்றியவுடன் (கிமு 382), இவர் ஏதென்சுக்கு தப்பிச் சென்று, தீப்சை விடுவிப்பதற்கான திட்டத்திற்கு தலைமை தாங்கினார். எசுபார்த்தன்கள் மற்ற நகர அரசுகளில் எசுபார்த்தன் மேலாதிக்கத்தைப் ஏற்றுக்கொள்ளும் சிலவர் ஆட்சியிக்குழுவின் அரசாங்கங்களுக்கு ஆதரவாக இருந்தனர். மேலும் சிலவர் ஆட்சிக்குழு மற்றும் சனநாயக அரசியல் அமைப்பு இல்லாத நகரங்கள் எசுபார்டாவை ஆதரிக்க முனைந்தன. கிமு 379 இல், இவரது பிரிவினர் (சனநாயகப் பிரிவினர்) தீப்சில் இவர்களின் முக்கிய அரசியல் எதிரிகளை (எசுபார்த்தன்களை ஆதரித்த பிரபுத்துவப் பிரிவினர்) வீழ்த்த திட்டமிட்டனர். 379 திசம்பரில் பெலோப்பிடாசும் இவருடன் ஆறுபேருமாக ஏதெனிசிலிருந்து புறப்பட்டனர். வேடுவர் வேடடத்தில் இருந்த அவர்கள் வேளாண் பணிகள் முடித்து மாலையில் திரும்பும் மக்களோடு மக்களாய் சேர்ந்து நகரத்துக்குள் புகுந்தனர். நகரில் திட்டமிட்டபடி தங்களது ஆதரவாளரின் வீட்டில் தங்கினர். இவர்களது ஆதரவாளர்களான மேலும் நாற்பதுபேர் நகரில் இருந்தனர். ஒரு இரவில் இரண்டு அதிகாரிகளை விருந்துக்கு வரவழைத்து கொன்றனர். இன்னொரு அதிகாரியை அவரது வீட்டில் புகுந்து கொன்றுபோட்டனர். சிறைக்கு சென்று அதிலிருந்தவர்களை விடுவித்து அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கினர். பொழுது விடிந்ததும் இரவில் நடந்ததை அறிந்த மக்களில் பலர் இவர்களுடன் இணைந்தனர். மக்களின் ஆதரவோடு ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினர். மேலும் எசுபார்த்தன் துணைப்படைகளுக்கு எதிராக போராட மக்களைத் தூண்டியனர். [5] எசுபார்த்தன் படைகள் துரத்தியடிக்கப்பட்டன.
பூயோடார்ச்
தொகுஇவர் அடுத்துவந்த 12 ஆண்டுகளுக்கு, தீப்சின் போயோடார்ச் அல்லது போர்த்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] மேலும் கிமு 375 இல், இவர் டெகிரா போரில் (ஆர்கோமெனசுக்கு அருகில்) மிகப் பெரிய எசுபார்த்தன் படையை விரட்டினார். [7] இந்த வெற்றியை இவர் முக்கியமாக 300 அனுபவமிக்க வீரர்களைக் கொண்ட ஒரு உயரடுக்கு படையான சேக்ரட் பேண்டின் வீரத்தைக் கொண்டு செய்துமுடித்தார். லியூக்ட்ரா சமரில் (கிமு 371), தளபதி எபமினோண்டாசின் புதிய தந்திரோபாயங்களுடன் இவர் வெற்றிக்கு பெரிதும் பங்களித்தார். எபமினோண்டணாசு, ஒரு புத்திசாலித்தனமான மற்றும் உள்ளுணர்வு கொண்ட தளபதியாக போர்தந்திரங்களைக் கையாண்டார். லியூக்ட்ராவில் நடந்த போருக்குப் பிறகு, அப்போது கிரேக்கத்தின் முன்னணி நகரமாக இருந்த எசுபார்த்தாவின் இடத்திற்க்கு தீப்சை கொண்டுவந்தார்.[சான்று தேவை]
கிமு 370 இல், இவர் தனது நெருங்கிய நண்பரான எபமினோண்டாசுடன் தளபதிகளாக பெலோபொன்னீசுக்குச் சென்றார், அங்கு எசுபார்த்தாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நகரமாக இருந்த மெஸ்சீனை கைப்பற்றி அதை பழையபடி சுதந்திர அரசாக மாற்றி அமைத்தனர். அதன் மூலம், அவர்கள் அங்கு எசுபார்த்தாவின் மேலாதிக்க சக்தியை நிரந்தரமாக அழித்தனர். [8]
பாரசீக தூதுவராக
தொகுபெலோப்பிடாசும், எப்பாமினோடாசும் இணைந்து வடக்கிலும், தெற்கிலுமாக பல அரசுகளை தீப்சின் செல்வாக்குக்குள் கொண்டுவந்தனர். இதனால் தீப்சின் புகழ் வளர்ந்தது. கிரேக்க உலகில் எசுபார்த்தாவே உயர்ந்த அந்தஸ்து உடையது என்று பாரசீகம் அதுவரை கருதிவந்தது. அதற்கு பதில் இனா தானே மேலான அரசாக கருதப்படவேண்டும் என்று தீப்சு கருதியது. இதற்காக கிமு 367 இல், பாரசீக மன்னர் இரண்டாம் அர்தசெராக்ச்சிடம் சென்ற தூதுக் குழுவுக்கு தலைமை தாங்கி பெலோப்பிடாசு சென்றார். பாரசீகமும் தீப்சின் விருப்பத்தை நிறைவேற்ற அறிவிக்கையையை வெளியிட்டது.
தெசலியன் போர்த்தொடர் மற்றும் இறப்பு
தொகு360 களில் பெலோப்பிடாசு நடு மற்றும் வடக்கு கிரேக்கத்தில் தீப்சின் அதிகாரத்தால் இராணுவ/இராஜதந்திர நடவடிக்கைகளை வழிநடத்தினார்.[8] கிமு 369 இல், தீப்சு வடக்கே தெசலி பக்கமாக தன் கவனத்தை செலுத்தவேண்டியதாயிற்று. அப்பகுதியி்ல் பேரி என்ற சிறிய அரசின் மன்னனான அலெக்சாந்தர் என்பவர் தெசாலியில் உள்ள பிற அரசுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயன்றார். இவருக்கு எதிராக தீப்சின் படைகள் பெலோப்பிடாசு தலைமையில் புறப்பட்டன. பெலோப்பிடாசு அந்த இராச்சியங்களை அலெக்சாந்தரின் ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து தீப்சின் ஆதிக்கத்தில் கொண்டுவந்தார். அதன்பிறகு கிமு 368 ஆம் ஆண்டு பெலோப்பிடாசு மாசிடோனியாவின் பக்கம் தன் கவனத்தை செலுத்தினார். அங்கு அரசியல் குழப்ப நிலை இருந்துவந்தது. புதிதாக பொறுப்பேற்ற மன்னரை கொன்ற தலாமி என்ற பிரபு அரசபிரதிநிதியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மாசிடோனில் தீப்சின் செல்வாக்கைப் பாதுகாப்பதற்காக, எதிர்காலத்தில் மன்னராகராக வாய்ப்புள்ள இளைஞரான அரசனின் தம்பி பிலிப் உட்பட அவரின் குடும்பத்தினரை தன் நாட்டுக்கு அழைத்து வந்தார். தீப்சில், கிரேக்கர்களின் இராணுவத் தந்திரங்கள் மற்றும் அரசியலைப் பற்றி பிலிப் கற்றுக்கொண்டார்.[9]
அடுத்த ஆண்டு, பெலோப்பிடாசு மீண்டும் மாசிடோனியாவில் சில விசயங்களில் தலையிட அழைக்கப்பட்டார். அங்கு தாலமியுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினார். அதை முடித்துக் கொண்டு தெசலி வழியாக திரும்பி வரும்போது பேரி மன்னரான அலெக்சாந்தரால் சிறைபடுத்தப்பட்டார். இதனால் பெலோப்பிடாசை விடுவிக்க தீப்சின் படைகள் வந்தன. பேரி மன்னருக்கு ஆதரவாக ஏதெனிய படைகள் இருந்தன. இருந்தாலும் தீப்சின் படைகள் போரிட்டு பெலோப்பிடாசை மீட்டு வந்தன.[10]
கிமு 364 இல், பெரி மன்னர் அலெக்சாந்தர் ஏதென்சின் ஆதரவுடன் தெசலியில் உள்ள அரசுகளை மீண்டும் தன் ஆதிக்கத்தில் கொண்டுவர முன்றார். இதையறிந்த பெலோப்பிடாசு கிமு 364 சூலை மாதம் 13 ஆம் நாள் ஒரு கதிரவ மறைப்பு நாளன்று ஒரு படையுடன் தெசலி மீது சமருக்கு புறப்பட்டார். பேரிக்கு அருகில் கடும் போர் நடந்தது. தீப்சுக்கு வெற்றி கிட்டும் சமயமாக இருந்தது. அலெக்சாந்தரைத் தன் கையால் கொல்ல விரும்பிய பெலோப்பிடாசு, மிகுந்த ஆத்திரத்துடன் அலெக்சாந்தரிடம் பாய்ந்தார். ஆனால் அலெக்சாந்தரின் மெய்க் காவலர்களால் வெட்டப்பட்டு அதனால் இறந்தார்.[11] பொறுப்பற்ற தன்மை மற்றும் கோபத்தினால் தனது வாழ்க்கையை இழந்த ஒரு தலைவருக்கு இவரை ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக புளூடார்க் கருதுகிறார்.[12]
குறிப்புகள்
தொகு- ↑ L Brice, Greek Warfare (2012) p. 118
- ↑ 2.0 2.1 T Duff ed., Plutarch: The Age Of Alexander (Penguin 2011) p. 48-9
- ↑ T Duff ed., Plutarch: The Age Of Alexander (Penguin 2011) p. 49-50
- ↑ Plutarch, Life of Pelopidas, 4.
- ↑ T Duff ed., Plutarch: The Age Of Alexander (Penguin 2011) p. 52-8
- ↑ L Brice, Greek Warfare (2012) p. 117
- ↑ T Duff ed., Plutarch: The Age Of Alexander (Penguin 2011) p. 60-2
- ↑ 8.0 8.1 J Griffin et al eds., The Oxford History of the Classical World (Oxford 1986) p. 149
- ↑ Murray, Stephen O. Homosexualities. Chicago: University of Chicago Press, P. 42
- ↑ T Duff ed., Plutarch: The Age of Alexander (Penguin 2011) p. 723
- ↑ T Duff ed., Plutarch: The Age of Alexander (Penguin 2011) p. 78-9
- ↑ T Duff ed., Plutarch: The Age of Alexander (Penguin 2011) p. 48