தீப்சின் மேலாதிக்கம்

பண்டைய கிரேக்க வரலாற்றில் கிமு 371 முதல் 362 வரையிலான காலம்

தீப்சின் மேலாதிக்கம் (Theban hegemony) என்பது கிமு 371 இல் லியூக்ராவில் எசுபார்த்தன்களுக்கு எதிரான தீப்சின் வெற்றியிலிருந்து கிமு 362 இல் மாண்டினியாவில் பெலோப்பொனேசியப் படைகளின் கூட்டணியைத் தோற்கடித்தது வரை நீடித்தது. இருப்பினும் கிமு 346 இல் உயரும் சக்தியாக மாசிடோனியா மாறும் வரை தீப்ஸ் தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றது.

எபாமினொண்டாசால் கிமு சு .364-362 இல் தீப்சின் நாயணயமாக உருவகப்படுத்தப்பட்டது. அதன் பின்புறம் ஈ-அம் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

பெலோபொன்னேசியப் போரினால் ஏதெனியன் அதிகாரத்தின் சரிவு (கி.மு. 431-404), எசுபார்த்தன்களின் மக்கள்தொகை வீழ்ச்சி மற்றும் முடிவற்ற கொரிந்தியப் போர் (கிமு 395-386) போன்றவை தீப்சின் எழுச்சிக்கு வழி வகுத்தன. தீப்சில் அவர்களுக்கு அமைந்த இரண்டு இராணுவத் தலைவர்களாலும் ஏற்றம் கண்டனர்:

  1. அந்த நேரத்தில் தீபன் சிலவராட்சியின் தலைவர்களான, எபமினோண்டாஸ் மற்றும் பெலோப்பிடாசு ஆகியோர் ஒரு ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கைக்கு முழுமையாக தங்களை அர்ப்பணித்திருந்தனர். மேலும் எந்தவொரு போரிலும் வெற்றிபெற சிறப்பாக செயல்பட்டனர்.
  2. அதே தலைவர்கள் தீபன் கனரக காலாட்படையில் தந்திரோபாய ரீதியாக மேம்பாடுகளை ஏற்படுத்தியிருந்தனர் (எ.கா. நீளமான ஈட்டிகள் பயன்பாடு).
தீபன் மேலாதிக்கம்

தீப்சானது பாரம்பரியமாக ஏதெனியர் ஆதிக்கம் செலுத்தும் அட்டிகாவின் வடமேற்கில் உள்ள ஏயோலிக் கிரேக்கம் பேசும் கிரேக்க சிலவர் ஆட்சிக்குழுவினரின் கூட்டமைப்பான போயோட்டியன் கூட்டணியின் மேலாதிக்கத்தில் இருந்தது. கிமு 373 இல் போயோட்டியாவின் ஒரே ஏதெனிய கூட்டாளியாக இருந்த முக்கியத்துவம் வாய்ந்த பிளாட்டீயா நகரத்தை தோற்கடித்து அழித்தபோது, போயோட்டிய சமவெளிக்கு வெளியே இவர்களது அதிக்கம் ஓரளவு உயரத் தொடங்கியது. இதற்கு முந்தைய மேலாதிக்க சக்தியாக இருந்த எசுபார்த்தன்களால் இது ஒரு நேரடி சவாலாக பார்க்கப்பட்டது. தீப்சினால் வீழ்ச்சியடைந்து வரும் தங்கள் மேலாதிக்கத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டனர். போயோடியாவில் உள்ள லியூக்ட்ராவில், படையெடுப்பு நிகழ்த்திய எசுபார்த்தன் இராணுவத்தை தீப்சு முழுமையாக தோற்கடித்தது. இப்போரில் 700 எசுபார்த்தன் குடிமக்கள், 400 பேர் வீரர்கள் இறந்தனர். இந்த பேரிழப்பால் எசுபார்த்தன் இராணுவத்தின் முதுகெலும்பு ஒடிந்தது. இந்த போருக்குப் பிறகு, தீபன்கள் கிரேக்கத்தில் ஒரு ஆதிக்க சக்தியாக எழுந்தனர். தெற்கில், இவர்கள் எசுபார்த்தன் மேலாதிக்கத்தில் இருந்து மெசேனியர்கள் மற்றும் ஆர்க்காடியன்களை விடுவிக்க பெலோபொன்னிசியா மீது படையெடுத்தனர். மேலும் பெலோபொன்னேசியன் விவகாரங்களை மேற்பார்வையிட தீபன் சார்பு ஆர்க்காடியன் கூட்டணியை உருவாக்கினர். வடக்கில், இவர்கள் தெசலி மீது படையெடுத்து, வளர்ந்து வந்த உள்ளூர் சக்தியான பெரேயை நசுக்கினர். மேலும் மாசிடோனியாவின் எதிர்கால வாரிசான இரண்டாம் பிலிப்பை பணயக்கைதியாக தீப்சுக்கு கொண்டு வந்தனர். சினோசெபலே சமரில் (கிமு 364), தீப்சின் படைகள் பெலோபிடாசின் அலெக்சாந்தரின் தெசலியன் படைகளுக்கு எதிராக போரிட்டனர். இதில் பெலோபிடாஸ் கொல்லப்பட்டார் ( இருப்பினும், போரில் தீபன்கள் வெற்றி பெற்றனர்).

தீபன்கள் மூலோபாயரீதியாக தங்களை விரிவுபடுத்திக் கொண்டு, வடக்கின் கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், தெற்கில் இவர்களின் அதிகாரம் சிதைந்தது. தீப்சின் ஆட்சியில் பல்வேறு பெலோபொன்னேசிய நகரங்களுக்கு அதிருப்தி இருந்து. எசுபார்த்தன் அரசர் இரண்டாம் அஜிசிலேயஸ், மாண்டினியா போரில் எபமினோண்டாசைக் கொன்றார் என்றாலும் அவர்களைத் தோற்கடிக்கவில்லை ஆதலால், உண்மையான எசுபார்த்தன் மேலாதிக்கத்தை மீண்டும் அவரால் நிறுவ முடியவில்லை. இது இரு அரசுகளுக்கும் பிர்ரிய வெற்றியாகவே இந்தது. எசுபார்த்தா தனது சாம்ராச்சியத்தை மீட்பதற்கான தீவிர முயற்சியை மேற்கொள்ள ஆள்பலமும் வளமும் இல்லாத நிலையிலும், தீப்ஸ் தனது ஆதிக்கத்தை உயர்த்திய திறமையான இரு தலைவர்களையும் போர்களில் இழந்துவிட்ட நிலையில் இருந்தது. மேலும் அதன் ஆதிக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாத அளவிற்கு வளங்கள் குன்றிவிட்ட நிலையிலும் இருந்தது. தீபன்கள் இராசதந்திரத்தினாலும், தெல்பியில் உள்ள அம்பித்தியோனி பேரவையில் தங்கள் செல்வாக்கை செலுத்தி தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றது. ஆனால் இவர்களின் முன்னாள் கூட்டாளிகளான போசியன்கள் தெல்பியைக் கைப்பற்றி மூன்றாம் புனிதப் போரைத் தொடங்கியதால் (c. 355), தீப்சால் மோதலுக்கு எந்த முடிவையும் கொண்டுவர முடியாமல் சோர்வடைந்தது. போர் இறுதியாக கிமு 346 இல் போர் முடிவுக்கு வந்தது, அது தீப்ஸ் அல்லது எந்த நகர அரசுகளின் படைகளாலோ அல்லாமல், மாசிடோனின் பிலிப்பின் படைகளால் முடிவுக்கு வந்தது. இது கிரேக்கத்திற்குள் மாசிடோனின் எழுச்சியை அடையாளம் காட்டியது மேலும் அது இறுதியில் தீப்சின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. என்றாலும் அது ஏற்கனவே வீழ்ச்சியடைந்த நிலையில் இருந்தது.

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  • John Buckler, The Theban Hegemony 371-362, 1980.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீப்சின்_மேலாதிக்கம்&oldid=3524712" இலிருந்து மீள்விக்கப்பட்டது