கொரிந்தியப் போர்

பண்டைய கிரேக்க மோதல் கிமு 395 முதல் கிமு 387 வரை நீடித்தது

கொரிந்தியப் போர் (Corinthian War, கிமு 395-387) என்பது பண்டைய கிரேக்கத்தில் நடந்த போராகும். இது அகாமனிசியப் பேரரசின் ஆதரவுபெற்ற தீப்ஸ், ஏதென்சு, கொரிந்து, ஆர்கோஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய நகர அரசுகளின் கூட்டணிக்கும் எசுபார்த்தாவுக்கும் இடையில் நடந்த போராகும். பெலோபொன்னேசியப் போருக்குப் பிறகு (கிமு 431-404) எசுபார்த்தாவின் ஏகாதிபத்தியத்தின் மீது எழுந்த அதிருப்தியால் இந்தப் போர் ஏற்பட்டது. அந்த பெலொபொனேசியப் போரின்போது ஏதென்சை தோற்கடிக்க எசுபார்த்தவின் முன்னாள் கூட்டாளிகளான கொரிந்து மற்றும் தீப்ஸ் ஆகிய நகர அரசுகள் இரண்டுக்கும் எசுபார்த்தாவினால் உரிய வெகுமதி அளிக்கப்படவில்லை என்ற வருத்தும் இருந்தது. எசுபார்த்தாவின் மன்னர் இரண்டாம் அஜிசிலேயஸ் ஆசியாவில் அகாமனசியப் பேரரசுக்கு எதிரான போர்த் தொடர்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையைப் பயன்படுத்தி, தீப்ஸ், ஏதென்ஸ், கொரிந்து, ஆர்கோஸ் ஆகியவை கி.மு. 395 இல் கிரேக்கத்தின் மீதான எசுபார்த்தன் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் குறிக்கோளுடன் ஒரு கூட்டணியை உருவாக்கின. இந்தக் கூட்டணி நாடுகளின் போர்க் குழு கொரிந்துவில் அமைந்திருந்தது, இதுவே இந்தப் போருக்கு இப்பெயர் உண்டாக காரணம் ஆயிற்று. மோதலின் முடிவில், கிரேக்கத்தின் மீதான எசுபார்த்தன் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் நட்பு நாடுகள் தோல்வியடைந்தன, என்றாலும் எசுபார்த்தா போரினால் பலவீனம் அடைந்தது.

கொரிந்தியப் போர்
(கிமு 395–387)
எசுபார்த்தாவின் மேலாதிக்கம் பகுதி

ஏதெனியன் குதிரைப்படை வீரர் டெக்சிலியோஸ், கொரிந்தியப் போரில், நிர்வாண வீரரான பெலொப்பொனேசியா ஹாப்லைட்டுடன் சண்டையிடுகிறார்.[1] டெக்சிலியோஸ் கொரிந்து அருகே கிமு 394 கோடையில் கொல்லப்பட்டார், அநேகமாக நெமியா போர்,[1] அல்லது அண்மை போர் நடவடிக்கையில்.[2] டெக்சிலியோசின் கல்லறைத் தூனில் உள்ள சிற்பம், கி.மு. 394–393
நாள் 395–387 BC
இடம் கிரேக்க முதன்மை நிலப்பரப்பு, ஏஜியன் கடல்
முடிவற்றது
நிலப்பகுதி
மாற்றங்கள்
  • அனதோலியாவின் மேற்குக் கடற்கரை பாரசிகத்திடம் ஒப்படைக்கப்பட்டது
  • போயோட்டியா கூட்டணி கலைக்கப்பட்டது
  • ஆர்கோஸ் மற்றும் கொரிந்து ஒன்றியம் கலைக்கப்பட்டது
பிரிவினர்
தளபதிகள், தலைவர்கள்

முதலில், எசுபார்த்தன்கள் பல வெற்றிகளை பிட்ச் போர்களில் ( நேமியா மற்றும் கொரோனியாவில் ) அடைந்தனர், ஆனால் பாரசீக கடற்படைக்கு எதிரான சினிடஸ் கடற்படைப் போரில் அவர்களின் கடற்படை அழிக்கப்பட்டது. இதனால் எசுபார்த்தா ஒரு கடற்படை சக்தியாக மாறுவதற்கான முயற்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாக, போரின் பிற்பகுதியில் ஏதென்சு பல கடற்படை போர்த்தொடர்களைத் தொடங்கியது, இதனையடுத்து கிமு 5 ஆம் நூற்றாண்டில் அசல் டெலியன் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த பல தீவுகளை மீண்டும் கைப்பற்றியது. இந்த ஏதெனிய வெற்றிகளால் பீதியடைந்த பாரசிகர்கள் ஏதென்சு உள்ளிட்ட கூட்டாளிகளை ஆதரிப்பதை நிறுத்திவிட்டு எசுபார்த்தாவை ஆதரிக்கத் தொடங்கியது. இந்த விலகலால் கூட்டாளிகள் அமைதியை நாட வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாயின.

அண்டால்சிடாசின் அமைதி உடன்பாடு என்றும் அழைக்கப்படும் அரசரின் அமைதி உடன்பாடு, கிமு 387 இல் அகமானிய மன்னர் இரண்டாம் அர்தசெராக்சால் கொண்டுவரப்பட்டது, இது போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் படி பாரசிகத்தின் கட்டுப்பாட்டில் ஐயோனியா முழுவதையும் வரும் என்றும், மற்ற அனைத்து கிரேக்க நகர அரசுகளும் "தன்னாட்சி" பெறும் என்றும் அறிவித்தது. இதன் விளைவாக நகர அரசுகள் கூட்டணிகள் உருவாவதை தடுத்தது. [3] எசுபார்த்தா அமைதி உடன்பாட்டின் பாதுகாவலராக இருக்க வேண்டும், அதன் அம்சங்களை செயல்படுத்தும் அதிகாரம் கொண்டதாக இருந்தது. இது கிரேக்க அரசியலில் பாரசிகத்தின் தலையீட்டடை உறுதிப்படுத்துதல், கிரேக்க நகர அரசுகளை பிரித்து தனிமைப்படுத்துதல் மற்றும் கிரேக்க அரசியல் அமைப்பில் எசுபார்த்தான் மேலாதிக்க நிலையை உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களைக் கொண்டதாக இருந்தது. [4] இதன் தொடர்ச்சியாக போயோடியன் கூட்டணி கலைக்கப்பட்டது மேலும் அவற்றுக்கு உடபட்ட நகரங்கள் எசுபார்த்தாவின் காவலில் வைக்கப்பட்டன. போரில் முக்கியமாக தோல்வியடைந்தததாக தீப்ஸ் இருந்தது. இந்த அமைதி நீண்ட காலம் நீடிக்கவில்லை: கிமு 378 இல் எசுபார்த்தாற்கும் வெறுப்படைந்த தீப்சுக்கும் இடையிலான போர் மீண்டும் தொடங்கியது. அதன் இறுதியாக கிமு 371 இல் நடந்த லியூக்ட்ரா சமரானது எசுபார்த்தாவின் மேலாதிக்கம் அழிய வழிவகுத்தது.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரிந்தியப்_போர்&oldid=3516388" இருந்து மீள்விக்கப்பட்டது